ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர்

“இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்று எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து தெரிவித்துள்ளமை குறித்து பலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். எழுத்தாளர் சயந்தன் கூறியது மாதிரி இதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை. சிலநேரம் ஜெயமோகன் “இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான்” என்று சொல்லியிருந்தால் மட்டும் தான், அந்தக் கூற்றின் உள்நோக்கம் குறித்து சந்தேகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அது அவரது அரசியல் கொள்கைக்கு முரணானது.


பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களும், ஏதாவதொரு அரசியல் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஜெயமோகன் இந்து பேரினவாத கொள்கையை பின்பற்றுபவர். அவர் அதை வெளிப்படுத்துவதில் எந்தத் தயக்கமும் காட்டியதில்லை. இப்போதும் அந்தக் கொள்கையில் உறுதியாக நின்று கொண்டு தான் பேசுகின்றார்.
உண்மையில், ஜெயமோகன் மிகவும் தெளிவாக உள்ளார். ஆனால், இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள் தான் மிகவும் குழம்பிப் போயுள்ளனர். ஜெயமோகனுக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும். ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது என்பதை ஒத்துக் கொண்டால், குஜராத், காஷ்மீர், மணிப்பூரில் நடந்ததும் இனப்படுகொலை தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதை அவரே நேரடியாக சொல்லி இருக்கிறார்.
ஜெயமோகனின் பதிலில் இருந்து சில உதாரணங்கள்:
//பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், இந்தியாவில் இஸ்லாமியர் இன அழித்தொழிப்பு செய்யப்படுகிறார்கள் என. நான் அதிர்ச்சியுடன் அதை மறுத்தேன்.//
//மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் சொன்னார், இந்தியா மணிப்பூரிகளை இன அழித்தொழிப்பு செய்கிறது என. அங்கு நடந்த இந்திய அரசுசார்ந்த அனைத்துத் தாக்குதல்களையும் பட்டியலிட்டார். இன அழித்தொழிப்புக்கு அவர் சொன்ன ஒரு வழிமுறை அதிர்ச்சி கொள்ளச் செய்தது.//
//இதோ இன்று எனக்கு வந்த மின்னஞ்சல் காஷ்மீரில் இந்தியா செய்யும் இனஅழித்தொழிப்புக்கு எதிராக அறைகூவுகிறது.//
//இப்படி அறைகூவுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுவார்கள். ஒன்று தங்கள் சார்பில் செய்த மீறல்களை. இரண்டு, தங்கள் கொள்கையுடையவர்கள் செய்த இனஒழிப்புகளை தாங்கள் ஆதரிப்பதை.//
ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை நடத்துகிறவர்கள், அது பற்றி சிந்திப்பவர்கள், முதலில் தமக்கான அரசியல் சித்தாந்தம் ஒன்றை தெளிவாக வரையறுக்க வேண்டும். “சிங்களப் பேரினவாதம் எமக்கு எதிரி. ஆனால், இந்து பேரினவாதம் எமக்கு நண்பன்.” என்ற அளவில் தான் அவர்களது அரசியல் நிலைப்பாடு உள்ளது.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக ஆக்ரோஷமாக பேசுகிறவர்கள், காஷ்மீர், குஜராத், மணிப்பூரில் நடந்தவை இனப்படுகொலை இல்லை என்று வாதிடுவார்கள். அப்படியான “தமிழ் தேசியவாதிகள்” பலரை நானே சந்தித்து இருக்கிறேன்.
இந்துத்துவா சார்பு தமிழ் தேசியவாதிகள், இப்போதாவது தமது தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஜெயமோகன்களை கண்டிக்கும் தார்மீக பலத்தையும் இழந்து விடுவார்கள்.
இந்திய, இலங்கை பேரினவாத அரசுக்கள், எப்போதும் இனங்களை பிரித்து வைத்து, அவற்றிற்கு இடையில் பகையை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்டிருக்கின்றன. ஜெயமோகனும் அத்தகைய பேரினவாத அரசின் நிலைப்பாடை தான் பிரதிபலித்துள்ளார்.
தேசிய இன விடுதலைக்காக போராடும் சக்திகள், இந்திய- இலங்கை அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல், சரியான அரசியல் சித்தாந்தத்தின் வழிநடத்தலின் கீழ் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதுவே ஜெயமோகன் போன்றவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.
(Kalai Marx)