ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடமா?

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவு தமிழக அரசியல் களத்தில் ‘வெற்றிடத்தை’ உருவாக்கி விடுமா என்ற அச்சம் திராவிட இயக்கங்களின் பால் அக்கறை கொண்ட தலைவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சில தினங்களுக்கு முன்புதான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார். 1916 க்குப் பிறகு ஏறக்குறைய நூறு ஆண்டுகள் திராவிட இயக்கம் தமிழகத்துடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிறது. 1967க்குப் பிறகு வேறு எந்தத் தேசிய கட்சிகளின் ஆட்சியையும் தமிழகத்துக்குள் நுழைந்து விடாமல், திராவிட இயக்கத்தின் கிளைகளாக உருவான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளின் ஆட்சியே மாறி மாறி நடைபெற்று வருகிறது.

6.3.1967 என்ற திகதி திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். அன்றுதான் தமிழகத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த தேசியக் கட்சியான காங்கிரஸை வீழ்த்தி முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்து, அரியணையில் அமர்ந்த நேரம்.

பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் முதலமைச்சரானார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்சரானார். 1969 முதல் இன்று வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை கலைஞர் கருணாநிதி பிடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் திராவிட இயக்கத்தின் இன்னொரு கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை 1972 இல் எம்.ஜி.ஆர் உருவாக்கினார். தி.மு.கவிலிருந்து விலகி தொடக்கப்பட்ட இயக்கத்தின் சார்பில் முதலில் எம்.ஜி.ஆர் முதலமைச்சரானார். அவருக்குப் பிறகு 1991லிருந்து 2016 வரை நான்கு முறை முதலமைச்சராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்பாக எம்.ஜி.ஆர் போலவே இரண்டாவது முறையாகத் தொடர்ந்து முதலமைச்சராக வெற்றி பெற்ற பெருமை ஜெயலலிதாவுக்குச் சேருகிறது. திராவிட இயக்கங்களின் இரு கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்றக் கழகம் மாறி மாறி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எம்.ஜி.ஆர் தலைமையிலும் சரி, ஜெயலலிதா தலைமையிலும் சரி இரு முறை தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது.
ஆனால், அந்த இரு முறையுமே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவருமே ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்து தங்களது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யவில்லை என்பது துரதிருஷ்டம்.

ஆகவே, தமிழக அரசியல் திராவிட இயக்க உணர்வுடன் பின்னிப் பிணைந்து விட்டது. இந்த உணர்வை முறியடித்து ஆட்சியைப் பிடிக்க 1977, 1989, 2016 ஆகிய காலகட்டங்களில் நடந்த தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் முயற்சியோ அல்லது மாநிலத்துக்குள் உள்ள வேறு சிறிய கட்சிகளின் முயற்சியோ எடுபடவில்லை.

இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக வைகோ தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் பிறந்தது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி பிறந்தது. விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம் தோன்றியது. ஆனால் இந்த ‘மாற்றுச் சக்திகளாக’ புறப்பட்ட இயக்கங்கள் சில புறப்பட்ட இடத்திலேயே நிற்கின்றன. சில வழி தவறி வேறு எங்கோ திசை மாறி விட்டன.

தே.மு.தி.க போன்ற கட்சியோ காணாமலே போகும் அளவுக்கு வாக்கு வங்கி கரைந்து விட்டது. தேசிய அளவிலான காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை. அதற்குப் பதிலாக அந்தக் கட்சியிடம் இருந்த 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்கு வங்கி கரைந்து, இன்றைக்கு நான்கு சதவீத வாக்கு வங்கிக்குள் சுருங்கி விட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது இன்னொரு தேசியக் கட்சியான பாரதீய ஜனதா கட்சி, தனி அணி அமைத்து ‘திராவிட கட்சிகளுக்கு மாற்று’ என்று புறப்பட்டது. ஆனால், அந்தக் கட்சியாலும் எதையும் சாதிக்க முடியவில்லை.

இப்படி எந்த திசையில் பார்த்தாலும் திராவிட இயக்கங்களான தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் போட்டியாக முளைத்த கட்சிகள், எடுக்கப்பட்ட முயற்சிகள், இதுவரை தமிழகத்தில் எடுபடவில்லை. இத்தனைக்கும் இந்த இரு கட்சிகளும் தமிழக வளர்ச்சியில் சாதித்து விட்டன என்று சொல்வதற்கு இல்லை. இரு கட்சிகள் மீதுமே குறைகளும் இருக்கின்றன; நிறைகளும் இருக்கின்றன.

ஆனாலும், இந்த இரு கட்சிகளைத் தாண்டி மக்கள் சிந்திக்க முன் வருவதில்லை என்பதைத்தான் கடந்த காலத் தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. 234 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குள் மட்டும் 226 சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கி விட்டார்கள். மீதியுள்ள எட்டு் தொகுதிகளை மட்டும்தான் தேசியக் கட்சியான காங்கிரஸ் பெற முடிந்தது. அதுவும் தி.மு.கவுடன் கூட்டணி இருந்த காரணத்தால் அந்த வெற்றியைப் பெற முடிந்தது. சமீபத்தில் நடைபெற்ற மூன்று இடைத் தேர்தல்கள்- அதாவது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் ஆகிய இடைத் தேர்தல் முடிவுகளும் தமிழக வாக்கு வங்கி, இந்த இரு கட்சிகளுக்குள்ளும் இருப்பதைத்தான் எடுத்துக் காட்டியது.

குறிப்பாக இந்த மூன்று தொகுதிகளிலும் மொத்தம் பதிவான வாக்குகள் ஐந்து இலட்சத்து 54 ஆயிரத்து 124 வாக்குகள். அதில் வெற்றி பெற்ற அ.தி.மு.கவும் அதற்கு அடுத்து வந்த தி.மு.கவும் பெற்ற வாக்குகள் ஐந்து இலட்சத்து 11 ஆயிரத்து 719 வாக்குகள்! தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதாக் கட்சி, தேசிய முற்போக்குத் திராவிட கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை எல்லாம் மூன்று தொகுதிகளிலும் பெற்ற வாக்குகள் 42 ஆயிரத்து 405 வாக்குகள் மட்டுமே! இந்த அளவுகோல் இடைத் தேர்தல் அளவுகோல் என்றாலும் பதிவான வாக்குகளில் 95 சதவீதத்துக்கு மேல் அ.தி.மு.கவும் தி.மு.கவும் வாங்கும் நிலைதான் தமிழக அரசியல் களத்தின் தனிச் சிறப்பு.

இந்தத் தனிச்சிறப்பின் காரணமாகத்தான் தமிழகத்தில் தேசிய கட்சிகளோ அல்லது புதிய கட்சிகளோ அ.தி.மு.க, தி.மு.கவுக்கு மாற்றாக இதுவரை உருவாக முடியவில்லை. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று இல்லாமல் தமிழக அரசியல் 49 வருடத்தைத் தாண்டி விட்டது. ஜெயலலிதா மறைவினாலும் கருணாநிதி உடல் நலக்குறைவாலும் அந்த மாற்று இனி உருவாகி விடுமா? என்ற கேள்விதான் இப்போது ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், அதற்கான கள நிலவரம் சாதகமாக இல்லை என்பதே எதார்த்தமான நிலை. கருணாநிதி தலைமையிலான தி.மு.க ‘எமெர்ஜென்சி’ அடக்குமுறையைச் சந்தித்தது; எம்.ஜி.ஆர் பிளவைச் சந்தித்தது; சர்க்காரியா கமிஷனை பார்த்தது; வைகோ பிரிவை சந்தித்தது; 2-ஜி என்ற மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டை சந்தித்தது. ஆனாலும் தி.மு.க கட்சியின் வாக்கு வங்கி குறைந்து விடவில்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ‘புறா’ சின்னத்தில் ஜானகி எம்.ஜி.ஆர், ‘சேவல்’ சின்னத்தில் ஜெயலலிதா அணி என்று இரு கூறாகப் பிளவு பட்டது அ.தி.மு.க. இரட்டை இலையே முடக்கப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது மத்திய அரசின் ‘அடக்குமுறையை’ சந்தித்தது. 1996இல் தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற ஊழல் வழக்குகளைச் சந்தித்தது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, ஆர். எம்.வீரப்பன், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரின் வடிவில் பிளவைச் சந்தித்தது.

ஆனாலும், அந்தக் கட்சியின் வாக்கு வங்கி குறைந்து விடவில்லை. இரு கட்சிகளுமே தமிழகத்தில் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஏனென்றால், இரண்டு கட்சிகளுக்குமே தலைவர்கள் இருப்பது ஒருபுறம் செல்வாக்கு என்றாலும், தமிழுணர்வு, மாநிலப் பிரச்சினைகளை முன் வைத்து இரு கட்சிகளும் மக்களிடம் போய் சேர்ந்து அவர்களுடனேயே நீடித்து நிற்பது முக்கியக் காரணமாகும்.

அதனால், இரு கட்சிகளுக்கு ‘செல்வாக்கு மிக்க’ தலைவர்கள் இருந்தாலும் தொண்டர்கள் செல்வாக்குடன் கூடிய வாக்கு வங்கியும் இருக்கிறது. குக்கிராமங்கள் வரை கட்சியின் கட்டமைப்பும் இருக்கிறது. அதனால்தான் ஜெயலலிதா இறந்த பிறகு எம்.நடராஜன் பேட்டியளித்த போது ‘பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஆகியோர் நடத்திய திராவிட இயக்கத்தின் ஆட்சி நடக்கிறது. இந்த விதையை யாரும் திருடி விட முடியாது’ என்று அழுத்தம் திருத்தமாகப் பேட்டியளித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சராகப் பதவியேற்ற ஓ. பன்னீர் செல்வத்தைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறியதும், அங்கு இருந்த அ.தி.மு.க அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் கை கொடுத்ததும் அ.தி.மு.க தொண்டர்களைப் பார்த்து கை அசைத்ததும் அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் அரசு ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆனால், அரசியல் ரீதியாக பா.ஜ.க அதில் லாபம் பார்க்க இயலாது. ஏனென்றால், கட்டுக்கோப்பான அ.தி.மு.கவை அக்கட்சிக்குள் இருக்கும் யார் வேண்டுமானாலும் வழி நடத்தி விட முடியும் என்பதுதான் இன்றைய நிலை. அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ‘இந்த அரசு அம்மாவின் அரசு. அம்மா அறிவித்த திட்டங்கள் மட்டுமே இந்த அரசின் அஜெண்டா’ என்று கூறி ஆட்சியை தொடங்கினார்கள் என்றால், ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அறவே இல்லை. குழப்பங்கள் உருவாகலாம். ஆனால் இறுதியில் அ.தி.மு.கவும் தி.மு.கவுமே தமிழக அரசியலில் கோலோச்சும் என்பதில் சந்தேகமில்லை!
(எம். காசிநாதன்)