தந்திரோபாயத் தவறு உள்ளுராட்சி ஆட்சி அமைப்பு ஆதரவில் ஏற்பட்டுவிட்டது

(Karunakaran, Saakaran)

தேவையைப் பெறுவதற்காக எவ்வளவு தூரத்துக்கும் கீழிறங்குவது. காரியம் முடிந்ததும் உதவியவரைக் கை விடுவது மட்டுமல்ல பழித்துரைக்க முற்படுவதெல்லாம் நாகரீகக் கேடாகும். இதனுடைய நேரடி அர்த்தம், இன்பத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவதற்காக இரகசியமாக ஒருத்தியுடன் கூடி விட்டு, பிறகு பொதுவெளியில் அந்தப் பெண்ணை “தாசி” என்று அம்பலப்படுத்துவதேயாகும்.

இது எவ்வளவு கேவலமான செயல்? எவ்வளவு தவறான சிந்தனை? ஆனால், இதுவே இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.

உள்ளுராட்சி சபை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டிகள் தேர்தல்கால நடைமுறைகளைப் போல மிகக் கீழ்த்தரமான முறையிலேயே பல இடங்களிலும் நிகழ்ந்தேறின.

அதையும் விடக் கீழ்த்தரமானது, சபைகளைக் கைப்பற்றிய பிறகு விடுகின்ற கதைகளும் சொல்லப்படுகின்ற நியாயங்களுமாகும்.

“கூட்டுச் சேரவே முடியாது, அவர்களுடன் கதை, பேச்சுக்கே இடமில்லை” என்ற கட்சிகளிடமெல்லாம் படியிறங்கிப்போய், கால்களைப் பிடித்துக் கெஞ்சியும், கையைப்பிடித்து இறைஞ்சியும் இரகசியப் பேச்சுகள் நடந்தன. ஆதரவு கோரப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை, சாவகச்சேரி, பருத்தித்துறை நகரசபை போன்ற பலசபைகளில் ஆட்சி அமைப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஈ.பி.டி.பியுடன் பேசியது பகிரங்கமான சங்கதி.

இதை மாவை சேனாதிராஜாவே ஒப்புக்கொண்டிருந்தார்.

சபைகளை அமைத்த பிறகு இப்பொழுது வேறு விதமாகக் கதை விடப்படுகிறது. “ஈ.பி.டி.பியுடன் நாம் பேசவேயில்லை. அப்படிப் பேசியிருந்தால் அதற்கான ஆதரங்களை அவர்கள் காட்டட்டும் பார்க்கலாம். அப்படிப் பேச்சுவார்த்தைகளை நடத்தக் கூடிய அளவுக்கு ஈ.பி.டி.பி ஒன்றும் பெரிய கட்சியோ கவனிக்கக் கூடிய தரப்போ இல்லை” எனச் சுமந்திரன் கூறுகிறார்.

இதைப்போல இனி வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் கதைகளை மாற்றப்போகிறார்கள். கயிறு விடப்போகிறார்கள்.

“ஆற்றைக் கடக்கும் வரைதான் அண்ணன் தம்பி. அதுக்குப் பிறகு நீ யாரோ நான் யாரோ” என்ற விதமாக. ஆனாலும் உண்மையோ சுடரும் அனற் துண்டாக எப்போதும் உறங்காதிருக்கும்.

கிளிநொச்சியில் கரைச்சிப் பிரதேச சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் குமாரசாமி தர்மராஜின் வீடு தேடிச் சென்றார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அதைப்போல பளை – பச்சிலைப்பள்ளியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் நகுலேஸ்வரன் வீட்டுக்குப்போய், நகுலனின் கைகளைப் பிடித்துக் கால்களில் வீழ்ந்து ஆதரவு கோரினார். இவையெல்லாம் பகிரங்கமான சம்பவங்கள்.

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் கைப்பற்றியுள்ளது. இது யாருமே எதிர்பார்த்திருக்காத ஒன்று. இதற்காக அது ஐ.தே.க, சு.க, ஈ.பி.டி.பி போன்றவற்றின் ஆதரவைப் பெற்றது.

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியின் ஆதரவைக் கூட்டமைப்பினர் பெற்றதை விமர்சித்திருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், வவுனியாவில் அதைப் பெற்றார். கூட்டமைப்புச் செய்ததையே செய்தார்.

இதைப்போல ஒவ்வொரு இடத்திலும் இரகசியப் பேச்சுகளும் சமரசங்களும் ஆதரவு கோருதல்களும் தாராளமாக நடந்தன.

கிழக்கிலும் இவ்வாறு பல கதைகளும் காட்சிகளுமுண்டு. தமிழ்த்தரப்பில் மட்டுமல்ல, முஸ்லிம் கட்சிகளும் இவ்வாறான தயைகோரலிலும் பேரம் பேசுதல்களிலும் ஈடுபட்டிருக்கின்றன.

“அரசியலில் இதெல்லாம் சகஜம், சாதாரணமப்பா” என்று சொல்லி, இவற்றை நாம் கடந்து சென்று விட முற்படக் கூடாது. ஏனென்றால், இது ஒரு அரசியல் பண்பாடு பற்றிய, அரசியல் நெறிமுறை பற்றிய பிரச்சினை.

உண்மையில் ஈபிடிபியும் சுரெஷ் உம் தமிழ் தேசிக் கூட்டமைப்பை தவிர்த்து ஏனைய ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் தனிநபர்களுடன் இணைந்து செயற்படுவதற்கான முன்னெடுப்புக்களை செய்திருக்க வேண்டும் செய்ய வேண்டும். வேணும் என்றால் தந்திரோபாய அடிப்படையில் ‘கெட்ட’ கரங்களிடம் ஆட்சி போகாமல் இருக்க வெளியில் இருந்து நிபந்தனையுடன் ஆதரவு அளித்திருக்க வேண்டும் இது இருவரும் விட்ட தந்திரோபாயத் தவறு. பொன்னம்பலத்தையும், தெற்கு பேரினவாத சக்திகளையும் ஆட்சியமைப்பதற்கு தடையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தல் என்பது தமிழரசுக்கட்சியை அசைக்க முடியாது என்ற எண்ணத்தை அவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்திய தந்திரோபாயத் தவறு உள்ளுராட்சி ஆட்சி அமைப்பு ஆதரவில் ஏற்பட்டுவிட்டது