தனித்து நிற்கும் வல்வெட்டித்துறை அம்மனும் சிவனும்….?

(Saakaran)

வாழையும் பனைமரமும் கிளை வைப்பதில்லை அதிலும் வாழை ஒரு முறை குலை போட்ட பின்பு தனது வாழ் நாளைக் நிறுத்திக் கொள்ள ஆரம்பிக்கும். ஆனாலும் அது பூப்பதிலும் காய்பதிலும் கனிவதிலும் பின் நிற்பதில்லை. கிளை வைத்த பனை மரம் வல்லிபுரக்கோவில் அருகில் என்னால் இன்று அதிசயமாக காணமுடிந்து. கூடவே வல்லிபுர ஆழவார் அருகில் இருக்கும் மணல் காடு என்ற கடற்கரைக் கிராமத்து குறிகாட்டியும் 1980 களுக்கு என்னை இழுத்து சென்றுவிட்டது. நீர்வேலியில் அமைந்து கிளாஸ் பக்ரறி இற்கு முன்னால் யாழ் பருத்துறை வீதியில் வைத்து நடாத்தப்பட்ட வங்கிப் பணப்பறிப்பு சம்பவமும் இதனைத் தொடர்ந்து பொலிசார் கொலையும் பணத்தை கையாளுவதில் ஏற்பட்ட முரண்பாடுகளும் தமிழ் நாட்டிற்கு பாதுகாப்பு காரணமாக செல்வதற்காக அன்று பிரபல்யமாக தேடப்பட்ட தங்கத்துரை குட்டிமணி தேவன் போன்றோர் படகு ஒன்றிற்காக மறைந்து காத்திருக்கையில் அவர்களின் பணப்பறிப்பு சகாவான பிரபாகரனால் காட்டிக் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு இன்று வரை ஆதாரபூர்வமான தடயங்கள் கிடைக்கவில்லை ஆனாலும் தொடர்ந்து 1983 ஜுலை வெலிக்கடைப் படுகொலைகளும் இதற்கு முன்னரான திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தி 13 இராணுவ கொலைச் சம்பவங்களை வைத்து எழுப்பப்பட்ட ஊகங்களும் இன்றுவரை விடைகாணாத கேள்விகளாகவே தொடர்கின்றன.

இந்த வரலாற்றுப் பின்னணி நினைவுகளுடன் வல்லிபுர ஆழவார் கோவில் பயணமும் விடே ஞாயிறு கிழமைகளில் லான்(ட்) மாஸ்ரரில் உறவுகளுடன் 1970 களின் பிற்கூற்றில் நடைபெற்ற பொங்கல் பயணங்களும் குதூகலங்களும் மனதை விட்டு அகலாதவை. இதில் இந்த லான(ட்) மாஸ்ரர் பெட்டியில் பயணம் என்பது யாழ்ப்பாணத்து விவசாயிகளின் சிங்கப்பூருக்கான 747 போயிங் விமானம் பயணம் போல் மகத்தானதாக குதூகலிகப்பட்டதாகவே உணரப்பட்டது. சற்றே நெருக்கத்துடன் ‘முறைப்பெண்’ உறவில் உள்ளவர்களுடன் ‘மௌன’ மொழிகளுடன் பயணித்ததும் எங்கள் தாய்மார்கள் காண்களால் காட்டிய  கண்டனப் பார்வையும்… இந்த மௌன மொழிக்கும் கண்டனப் பார்வைக்கு இடையிலும் ஒரு கணம் பார்பதை தவிர்க்கமுடியாமல் தவித்ததும் இனிய அனுபவங்கள்தான். இந்த முறைப் பெண்களில் பலரை அவர்களின் முறைப் பையன்கள் திருமணம் முடித்ததாக புள்ளி விபரம் சொல்லாவிட்டாலும் இங்கும் பெண் பக்கத்து எதிர்பார்பும் ஆண் பக்கத்து தவிப்பும் ஏமாற்றங்களும் எங்கள் யாபேரும் புதிதானது அல்ல. இன்று வேக வாகனத்தில் தெய்வ நம்பிக்கையற்ற நிலையிலும் ஒரு குதூகலத்திற்காக ஒன்றாக பயணித்த அனுபவங்கள் அன்றைய இளமையையும் இனிமையையும் மீட்பதில் ஆனந்தங்களை பொழிந்த வண்ணமே எனது பயணம் வல்லிபுர ஆழ்வாரை நோக்கி எழிலார்ந்த பயணமாக இருந்தது.

வல்புர ஆழ்வார் கோவில் வீதியில் அமைந்த ஆச்சியின் அப்பம் தோசைக் கடையும் இதில் முடிவில்லாமல் வாங்கி ருசித்த பண்டங்களும் பருத்தித்துறை ஓடக்கரை அப்பங்களுக்கு நிகரானவையே. இன்று மருவிய நிலையில் காணப்படும் ஓடக்கரை அப்பம், தட்டை வடை பருத்துறையின் அடையாளங்கள் மட்டும் அல்ல அது ஒரு தமிழர்களின் அடையாளங்களாக சகலரையும் இணைத்து புலம் பெயர் தேசங்களில் கூடப் பேசப்படுகின்ற ஒன்றாக பரிணாமம் அடைந்துள்ளது. ஆனால் அது எமது பாரம்பரிய உணவை சமைத்து பரிமாறிய மதிலில் ஓட்டை வைத்து உள்புறம் வீட்டு உரிமையாளர் அப்பம் சுடுபவராக இருக்க ஓடை வீதியின் கரையில் நின்று வாங்கி உண்ட இனிய நினைவுகள். அந்த சுவை மிக்க அப்பம் தோசை இன்று கண்டாடிக் கடையிற்குள் பெரும்பாலும் சுருங்கியேவிட்டது. ஆனால் ஓடைக்கரை வீதி மட்டும் சுருங்க முடியவில்லை…? ஏன்எனில் அது இனியும் சுருங்க இடமில்லை. இன்றும் பருத்துறை பஸ் நிலையத்தையும் புகழ்பெற்ற தம்பசெட்டி கிராமத்தையும் இணைத்து சேறு சகதியற்ற கொங்கிறீர் பாதையாக எழுந்து நிற்கின்றது.

வல்வெட்டித்துறையில் அம்மனும் சிவனும் அருகருகே தனிவீடு அமைத்து எழுந்தருளி இருக்க 1980 களின் முற்கூறு வரையிலும் போட்டி போட்டுக் கொண்டு புகைக்கூடுகளுடனும் வீதியெங்கும் மைல் கணக்கில் உண்பதற்குரிய தரத்தில் உள்ள வாழை மரத்துடன் கூடிய பழக் குலைகளும் மின் விளக்குகளும் நகைக் கடையில் மீதி இருக்க முடியாத அளவிற்கு கழுத்திலும் கையிலும் அடுக்கிய அக்கிராத்து பெண்களும் வாள் வெட்டுப் பயமும் திருடப் பயமும் இன்றி இரவு முழுவதும் வலம் வர எல்ஆர் ஈஸ்வரி வகையறாக்களின் குத்துப்பாட்டுக் கச்சேரிகளும் களைகட்டியது ஒரு காலம். சனி தோறும் நவகிரகங்களுக்கு (சிறப்பாக புரட்டாசி சனி) எள் விளக்கெண்ணை எரிப்புக்களும் என்று மிளிர்ந்த அம்மனும் சிவனும் யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு என்று கோபுரங்களும் தேர் முடிகளும் சிவப்பு வெள்ளை என்று புதுப்பொலிவு பெற இவர்கள் இருவரும் இவை ஏதும் இல்லாமல் நிற்பதற்கு பின்னால் உள்ள அரசியலை உறவுப் பிறழ்வுகளை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு வெறுமையை மட்டும் என்னால் உணரப்பட்டது என்னமோ உண்மைதான்.

கடவுள் நம்பிக்கை மத நம்பிக்கைகளுக்கு அப்பால் தமிழர்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்து போன இந்த கோவில்களும் கோபுரங்களும் கேணிகளும் திருவிழாக்களும் காவடிகளும் பிணைந்திருக்கும் யதார்த்தம் புரிந்து கொள்ளப்படவேண்டியவை. இது செல்வ சன்னதியில் ஆரம்பித்து உகந்தை முருகன் ஊடாக கதிர்காம கந்தன் வரைக்கும் மாத்தளை முத்துமாரி அம்மன் கோலிலும் கோணேஸவரர் கோவில் கேதீஸ்வரம் கோவில் என்று எம்மவர் வாழ்வுடன் கலாச்சாரப் பிணைப்பாக தமிழர்களின் இருப்புக்களின் அடையாளங்களாக மிளிர்கின்றனர்.

ஆனாலும் நிலத்தடி நீரைக் சேகரிக்கும் கேணியை பராமரித்தல் என்பதில் இருக்கும் வாழ்வியலை முழுமையாக உணரப்பட்டதாக மட்டும் என்னால் மதிப்பிட முடியவில்லை. மத்திய அரசு அமைக்கும் பாரிய நீர்வள திட்டங்களுக்கு பின்னால் அது மகாவலி நீரை தேக்கும் திருகோணமலை மாவட்ட குளம் அமைப்பு இற்கு பின்னாலும் பாரிய திட்டமிட்ட குடியேற்களை நாம் அம்பாறையில் இங்கினயாகலை குளத்தையொட்டிய குடியேற்ற அனுபவங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தே ஆக வேண்டும். அம்பாறையை நாம் டிஎஸ் இனால் உருவாகப்பட்ட இங்கினியா கலையில் இழந்தது போல் நல்லாட்சியில் சீன உவியுடன் உருவாகப்படும் மகாவலி ஆற்றுப்படுக்கையிற்கு அருகில் அமையப் போகும் நீரைக் சேகரிக்க உருவாக இருக்கும் இரு பெரும் குளங்களுக்கும் அண்மித்து புது வேகத்துடன் பயணிக்கவே செய்யும்.