தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களா?

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக நாட்டு மக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்லிணக்க பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள செயற்றிட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி வழங்குவது என்றும் அவற்றை அடையும் வழிகள் குறித்தும் நாட்டு மக்களிடம் பரந்துபட்ட கருத்துக்களை கேட்டறிவதும்தான் இந்த செயற்றிட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இணையமொன்றை ஆரம்பித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் செயலென்றோ வெறுமனே ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றோ எண்ணவேண்டாம் என்றும் தமது அரசு இதயசுத்தியுடன் இந்த செயற்பட்டில் இறங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.

தமிழ் மக்களை பொறுத்தவரை எத்தனையோ அமைப்புக்கள், எத்தனையோ ஆணைக்குழுக்கள் என்று தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறிவிட்டார்கள். கடந்த ஆட்சிக்காலத்திலும்கூட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றின் முன்பாகச் சென்று, மிகுந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமது சாட்சியங்களை முன்வைத்தார்கள். ஆனால், அவற்றின் ஊடாக எந்த பலாபலன்களும் கிடைக்காத நிலையில், புதிய அரசின் அடுத்த பூச்சாண்டி விளையாட்டுத்தான் இது என்று அவர்கள் சலித்துக்கொள்வதற்கு போதிய காரணங்கள் உள்ளன. அதேபோல, தற்போதைய நல்லாட்சி நாடகத்தினை முடிந்தவரை வெளிஉலகத்துக்கு விளம்பரம் செய்து நாட்டை கட்டியெழுப்புதற்கு இலங்கைக்கு மிகமுக்கியமான பிரச்சினையாக இருப்பது ஜெனீவா தீர்மானமும் அதன் பிரகாரம் ஒப்புக்கொண்டு விடயங்களும்தான்.

ஜனாதிபதி மைத்திரி எவ்வளவுதான் ஆளுமை மிக்க அமைதியான தலைவராக இருந்தாலும் அவரைச் சந்திப்பவர்கள் அனைவரும் தவறாது கேட்கும் விடயம் ஜெனீவா தீர்மானம் குறித்த பொறிமுறையையும் அது எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது என்பதையும்தான். அரசுக்கு ஏக முட்டுக்கட்டையை ஏற்படுத்திய ஜீ.எஸ்.ரி. பிளஸ் விவகாரம் தொடர்பாக பேசி, சாதகமான முடிவொன்றை எட்டுவதற்காக அண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜேர்மனி சென்ற மைத்திரிக்கு, அங்கேயும் ஜெனீவா தீர்மானம் தொடர்பான கேள்விகளே அந்நாட்டு அரசினால் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இலங்கையின் நகர்வுகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துவருகின்றமை புதிய விடயம் ஒன்றுமல்ல.

ஆக, நாட்டில் ஏற்பட்டிருக்கம் சமாதான சூழ்நிலையையும் நல்லாட்சி காலத்தையும் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு போர்க்குற்ற விவகாரமென்பது தொடர்ச்சியான தடைக்கல்லாக இருக்கப்போவது உறுதி என்பதை அரசு ஆழமாக புரிந்துகொண்டுள்ளது. அதற்காக, போர்க்குற்ற விவகாரத்தில் அகப்பட்ட இராணுவத்தினரை நேரடியாக கொண்டுபோய் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தண்டனை வழங்குவதன் மூலம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி இனவாதிகளை கொதிநிலைக்கு கொண்டு சென்றுவிடக்கூடாது என்பதிலும் அரசு கரிசனையாக உள்ளது. ஆகவே, ஒரு மென்மையான அணுகுமுறை ஒன்றின் ஊடாக காரியங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்த மக்களிடம் கருத்தறியும் நல்லிணக்க பொறிமுறை என்ற பாதையின் வழியாக நாட்டுமக்கள் அனைவரையும் இந்த பொறிமுறைக்குள் உள்வாங்கி பயணம் செய்வதற்கு தலைப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் என்ன நோக்கத்துடன் இதனை செய்கிறது என்பதற்கு அப்பால், மக்கள் கருத்தறியும் அணுகுமுறை என்பது ஜனநாயக நாடொன்றில் வரவேற்கப்படவேண்டிய ஒன்றே ஆகும். அந்த வகையில், நல்லாட்சியின் பிரதான தூணாக உள்ள தமிழர் தரப்பு, தான் தெரிவு செய்த அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையில் நம்பிக்கை கொள்வதில் தப்பில்லை. ஆனால், இந்த பொறிமுறையின் மீது நம்பிக்கை வைக்குமாறு கோரிக்கை விடுக்கும் அரசாங்கம், தமது தரப்பிலிருந்து எவ்வளவு தூரம் தமிழ்மக்களை நோக்கி தனது நம்பிக்கை கரங்களை நீட்டப்போகிறது என்பது அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது. நல்லிணக்கப் பொறிமுறையில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் விவகாரங்களை எடுத்துநோக்கினால் அரசியல்கைதிகள் விடுதலை, காணாமல்போனோர் விவகாரம் மற்றும் காணி விடுவிப்;பு ஆகியவற்றைக் கூறலாம்.

அரசியல் கைதிகள் விடுதலை இன்று எவ்வளவு ஆண்டுகளாக இழுபறிப்படுகிறது என்பது அரசுக்கு நன்றாகவே தெரிந்தவிடயம். கடந்த தடவை பிணையில் விடுவிப்பதாக அறிவித்த கைதிகளை விடுதலை செய்வதற்கே அரசாங்கத் தரப்பில் காண்பிக்கப்பட்ட அசமந்தமும் இழுத்தடிப்பும் தமிழ் கூட்டமைப்பினரை சீற்றத்துக்கு உள்ளாக்கியது. தற்போதுகூட, அநுராதபுரம் சிறையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தில் சில கைதிகள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பில் உறுதிமொழிகள்தான் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றவே தவிர உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல, காணாமற்போனவர்கள் விவகாரமும் அரசுத்தரப்பில் இதய சுத்தியுடன் அணுகப்படும் விடயமாக தெரியவில்லை.

வெள்ளைவான் கடத்தல்களையும் மர்மக் கொலைகளையும் தமக்கு தெரியாது என்றும் கைவிரித்து காட்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போரின் இறுதிக்காலத்தில் சரணடைவதற்காக ஒப்படைக்கப்பட்டவர்கள் குறித்து என்ன பதில் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது. சாட்சிகளின் முன்னிலையில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே, அவர்களின் கதி குறித்து இராணுவத்தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் என்ன என்று அரசுத்தரப்பில் யாராவது பதில் கூற முடியுமா? பிக்குகளை கைது செய்வதென்றால் மகாநாயக்க தேரர்களிடம் அறிவித்துவிட்டுத்தான் கைதுசெய்ய வேண்டும் என்று சட்டம் பேசும் சம்பிக்க ரணவக்கவின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருக்கும் தமிழ்மக்கள், இதேநாட்டில் காணாமல்போன தங்களது உறவுகளின் கதி என்னவென்று தெரியாமல் ஆண்டுக்கணக்கில் நடத்தும் கண்ணீர்போராட்டங்களுக்கு என்ன பதில் என்று கேட்டால் அரசு என்ன சொல்லப்போகிறது,

இவையெல்லாம் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு வராதா? அதேபோல, நல்லிணக்கம் குறித்து பேசும் அரசு காணி விடுவிப்பில் காண்பிக்கும் தாமதத்துக்கு என்ன காரணம், ஒரே இரவில் தமிழ் மக்களின் நல்லிணக்கத்தை சம்பாதிப்பதற்கு வாஞ்சையுடன் வந்து நிற்கும் அரசு பிரதிநிதிகள், என்றைக்காவது தங்களால் இன்னமும் விடுவிக்கப்படாத பொதுமக்களின் காணிகள் குறித்து இவ்வளவு கரிசனை கொண்டதுண்டா?

இந்தப் புதிய நல்லிணக்க பொறிமுறையின்போது தங்கள் கருத்துக்களை கூறவரும் மக்களை அச்சுறுத்தக்கூடாது என்றுவேறு பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத்துறையினரையும் மங்கள சமரவீர கேட்டுக்கொண்டுள்ளார். மங்களவின் இந்த வேண்டுகோளை எந்த பத்திரத்தில் எழுதிவைப்பது என்று தெரியவில்லை. சாட்சிகளின் பாதுகாப்பு என்பது இலங்கைவை பொறுத்தவரை தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் விடயம். அதற்கு எத்தனையோ சம்பவங்களை உதாரணமாக கூறலாம்.

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் சடலங்களில் படையினரின் துப்பாக்கி சூட்டுக்காயங்களை அப்படியே படமெடுத்து பத்திரிகைக்கு கொடுத்தார் என்று காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் முதற்கொண்டு, எண்;கணக்கற்ற கொலைகளின் சூத்திரதாரிகளும் கொலையாளிகளும் இன்னமும் இரத்தக்கறை படிந்த தங்களது கைகளோடு சுதந்திரமாக நடமாடும் தெருவினால் சென்று படையினரால் தமக்கும் தமது உறவுகளுக்கும் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை தயக்கமின்றி வந்து கூறுங்கள் என்று சொன்னால், மங்களவின் ஒரு கட்டளையினால் திடீர் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடுமா? எத்தனை மைத்திரியோ எவ்வளவு மங்களவோ வந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் ஆழப்படிந்த காயங்களை ஆற்றுவதற்கு முறையான நல்லிணக்க முயற்சிகள் அரசுத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப்படவேண்டும்.

தாங்கள் போட்டுவைத்திருக்கும் அரசியல் நிகழ்ச்சிநிரல்களின் பகடைக்காய்களாக மக்களை பயன்படுத்தலாம் என்ற வியூகங்களை வகுப்பதற்கு முன்னர் தங்கள் தரப்பிலிருந்து முழுமையான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தமிழர் தரப்பாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். எதுவும் செய்ய முடியாத அல்லது செய்ய விரும்பாக அரசுக்குத் தொடர்ந்தும் முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் தூணாக பணிசெய்வதுதான் தங்கள் கடமை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுதல் மக்கள் எதிர்பார்ப்புக்கும் மாற்றானது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அதுவரை அரசாங்கத்தின் திடீர் நல்லிணக்க நாடகங்கள் மக்கள் மத்தியில் இலகுவில் செல்லுபடியாகாது.

(ப.தெய்வீகன்)