தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம்

(காரை துர்க்கா)
“முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு, சாலை, சுண்டிக்குளம் எனப் பல பிரதேசங்களைத் தாண்டிய, தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தற்போது யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வரை சென்று விட்டது. இப்படியே சென்றால், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகில் விகாரை அமையப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக, கொழும்பு அமைச்சர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களுடன் கதைத்தும் ஆக்கபூர்வமான பதில்கள் எட்டப்படவில்லை என்றும் மீனவர்களது நடவடிக்கைகள் மேலும் தொடர்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

எங்களை ஒருவரும் ஒன்றுமே செய்ய முடியாது என்ற தோரணையில் தென்னிலங்கை மீனவரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இப்பகுதிகளில் பரம்பரை பரம்பரைத் தொழில் செய்து, சீரும்சிறப்புடன் வாழ்ந்த மீனவர்கள், தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பால், தொழிலைக் கைவிடும் நிலையை எட்டி விட்டனர்.

“நாட்டின் ஏனைய மாவட்டங்களை விட, வடக்கிலுள்ள மாவட்டங்கள் அபிவிருத்தியில் பின்தங்கி உள்ளன. விவசாயம், சுற்றுலாத்துறை, மீன்பிடி போன்றவற்றினுடாக வடக்கு மக்களின் வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று கடந்த மாத இறுதியில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில், இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்தில் அப்போது ஆயுதம் தூக்கிய கைகள், இப்போது மண்வெட்டியுடன் விவசாயம் செய்கின்றன; அவற்றை அங்கு சந்தைப்படுத்தவும் செய்கின்றன; சுற்றுலா விடுதிகளையும் நடாத்துகின்றன; சில்லறைக் கடைகள், தேநீர்ச் சாலைகளையும் நடாத்துகின்றன.

பிரதமர் குறிப்பிட்ட மீன்பிடி, சுற்றுலாத்துறை ஆகியவை பறிக்கப்பட்ட நிலையில், பிரதமரோ இந்தத் துறைகள் ஊடாக வடக்கிலுள்ளவர்களின் வருமானத்தை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறுகின்றார். இதுவே ஸ்ரீ லங்காவின் அரசியல்.

கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் ஆகும். கடல்மாதாவின் கருணையால் அவளது மடியில், பார் போற்றும்படியாக வளமான, அர்த்தமான வாழ்வு வாழ்ந்தவர்களைக் கொடும் போர் பழி தீர்த்தது.

யுத்தத்தால் அனைத்தையும் இழந்து மீளவும் வாழத் துடிக்கும் மக்களின் கடல்வளம் பறிபோகின்றது; இனப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரம் கண்டுள்ளன; கலாசாரச் சீர்கேடுகள் எனப் பல பிரச்சினைகளைத் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியுள்ளது.

பிற உயிர்கள் மீது இரக்கம் காட்டுதல் என்பது, பௌத்த மதத்தின் அடிப்படையாகும். தனி மனிதனிடத்தே ஏற்படுகின்ற சாந்தி, சமாதானம், சந்தோஷம் ஆகியனவே குடும்பம் சமூகம் என வேர் விட்டு விலாசமாகப் பரவும்.

ஆனால், கௌதம புத்தர் வழி வந்த தென்னிலங்கை மீனவர்கள், படையினர், அரசாங்கம் ஆகிய தரப்பினர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை இன்னமும் உணர, ஏன் மறுக்கின்றார்கள்.

மனிதாபிமானத்தை முழுமையாகப் புதைத்து, அரசியல் செல்வாக்குக் காரணமாகப் பிறரின் அனைத்து வளங்களையும் அடாத்தாக அள்ளினால், தமிழ் மக்களின் நிலை என்ன என இவர்கள் கிஞ்சித்தும் எண்ணவில்லை.

இது இவ்வாறு நிற்க, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எவ்வித பய(ல)னும் இல்லை. அவர்களுக்குத் தங்கள் மண்ணில், மக்களில் எவ்வித அக்கறையும் இல்லை. தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்தியையும் காண முடியவில்லை. அரசியல்த் தீர்வையும் காண முடியவில்லை” இவ்வாறாகத் தங்கள் தரப்பு வாதங்கள் பலவற்றை முன்வைத்து, ‘மக்கள் சேவை’ என்ற முத்திரை பதித்து, வடக்கு, கிழக்குத் தமிழர்கள் சிலர் வெளிக் கிளம்பி உள்ளனர்.

அவர்கள் தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரப்போகின்றோம் எனக் கூறிக் கொண்டு, கொழும்பைத் தளமாகக் கொண்ட ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன ஆகிய தேசியக் கட்சிகளில் சென்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். கடந்த காலங்களைக் காட்டிலும் அதிகப்படியான ஆசனங்களையும் பெற்றனர்.

ஆதலால், இவர்கள் வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்ட தமிழ்க் கட்சிகளது வாக்கை சிதறடித்தனர்.

அவ்வாறாகத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுக்கு, தங்களது மக்கள் பணிக்கான நேரம் இப்போது கனிந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் ஒரு தமிழ் அமைச்சர், ஒரு தேசியப்பட்டியல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கணிசமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட பெருந்தேசியக் கட்சிகளின் தமிழ் உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்கள், மலையாக நம்பும் தங்களது கட்சித் தலைவர்களுடன் உரையாடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களால் சாதிக்க முடியாத சில விடயங்களையாவது சாதிக்க வேண்டும்.

முல்லைத்தீவில், வடமராட்சி கிழக்கில் சட்ட விரோதமாகக் கடற்தொழில் செய்யும் தென்பகுதி மீனவர்கள் வெளியேற்றம், அதிகரித்த பெரும்பான்மை இன உத்தியோகத்தர்கள் நியமன நிறுத்தம், வேகமாக அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல், படைக்கான காணி அபகரிப்பைத் தடுத்தல் எனச் சில விடயங்களுக்கு, செயலில் வேகமாகப் பதில் பெற்றுத்தர வேண்டும்.

திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தில் இருந்து, தமிழ் மீனவர்கள் சென்று காலியில், மாத்தறையில் மீன்பிடித் தொழில் செய்யலாமா? நினைத்துக் கூட பார்க்க முடியாது?

வெறுமனே, தமிழ் மக்களுக்கான சேவை எனப் போக்குக் காட்டிக் கொண்டு, அரசாங்கத்தின் அதிகார நிழலில் வலம் வருபவர்களைப் பகடைக்காயாகக் கொண்டு, தமிழ் மக்களின் ஒற்றுமையை உடைத்து, நாட்டைக் குட்டிச்சுவராக்கும் இனவாதிகள் இலாபமடைய இனியும் துணை போகக் கூடாது.

இன்று தமிழ் இனத்தின் தொழில்வாய்ப்பு, கல்வி என ஒட்டுமொத்த இருப்பே கேள்விக் குறியாக்கப்பட்ட சூழ்நிலையில், தங்களது தனிப்பட்ட இருப்பைத் தக்க வைக்கப் போய், தமிழ்ச் சமூகத்திடமிருந்து விலகித் தனி மரமாகி விடப்போகிறார்கள்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களது மொழி உரிமையை பறித்தவர்கள் (1956), அறிவாலயத்தை எரித்தவர்கள் (1981), முள்ளிவாய்க்காலில் ஓடிய குருதிக்கு காரணமானவர்கள் (2009) ஒட்டு மொத்தத்தில் தமிழ் மக்களின் அவலத்தில் ஆனந்தம் கண்டவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எந்த விடயங்களால் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதோ, அந்த விடயங்கள் ஊடாகத் தமிழ் மக்களை மேலும் கருவறுக்கும் காரியங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வேறுபாடான கருத்துகளுடன் தங்களுக்கிடையில முரண்படும் பெருந்தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட, தமிழ் மக்களைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஒரு புள்ளியில் ஒருமிக்கின்றனர்.

ஆனால், வார்த்தைகளில் வடிக்க முடியாத கொடிய அழிவைக் கண்ட பின்னரும், தமிழ் இனத்தின் தலைவர்கள் தங்களுக்குள் முரண்படுவது, குழிபறிப்பது போன்றவற்றைத் தொடருவது எம் இனத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கைக் கட்சிகளின் முடிவுறாத வரம்.

வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப்படுத்துமாறு சிங்கள மக்கள் தங்கள் கட்சிகளைக் கோரியதாகத் தெரியவில்லை. இலங்கைத்தீவில் தமிழர் நில அபகரிப்பு என்பது சிங்களத் தலைவர்களின் மேலான தேசப்பணி என எழுதப்பட்டு விட்டது. இதில் மைத்திரியோ, ரணிலோ விதிவிலக்காக இருக்க மாட்டார்கள். ஆனால், இவர்கள் தமிழ் மக்களது விதியை மாற்றுவார்கள் என நம்புவது, நம்பச்சொல்லுவது, நம்புமாறு வற்புறுத்துவது அருவருப்பானது.

தமிழர்கள் முன்னர் பலமாக நம்பிய ஆட்சியாளர்களின் தற்போதைய நடவடிக்கைகளால் பயம், பதற்றம், பதகளிப்பு என விடுபட முடியாத நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, நில அபகரிப்பு என்பது தமிழ் இனத்தைப் புற்றுநோய் போல கொல்கின்றது.

இந்நிலையில், பெருந்தேசியக் கட்சிகளின் அரசியல்வாதிகளின் போலி மாய வலைக்குள் வீழ்ந்து, அவர்களது பிரித்தாளும் தந்திரத்தில் சிக்கி, வெறுமனே சிற்றூழியர் நியமனம், தெருக்கள் திருத்துதல், ஆலயங்களுக்கு ஒலிபெருக்கிகள் பெற்றுக்கொள்வதுடன் மக்கள் சேவை நிறைவுபெற்று விடுமா?

தெற்கு கட்சிகளின் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் உறுப்பினர்கள், தங்களை சுயபரிசோதனை செய்வதற்கான காலம் இப்போது கனிந்துள்ளது.