தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 7)

(Thiruchchelvam Kathiravelippillai)


அம்பாறை மாவட்டத்தில் தமது நிலையான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் எண்ணமாக இருந்தது. 1985 இலிருந்து தொடர்ச்சியாக தமிழ் மக்கள் வாழ்கின்ற ஊர்களில் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டவண்ணமிருந்தன. தமிழ் மக்கள் கொல்லப்படுகின்ற போது தமிழ் மக்கள் அச்சமடைவதுடன் முஸ்லிம் மக்களுடன் பகையுணர்வினையும் வளர்க்க வேண்டும் எனபது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.

1986 பெப்ரவரி 19 ஆம் நாள் உடும்பன்குளம் என்ற ஊரில் நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பெரும் பங்காற்றியிருந்தனர். இந்நடவடிக்கைக்கு முக்கிய பொறுப்பேற்றிருந்தவர் 1983 இன் முற்பகுதியில் இராணுவத்தில் நியமனம் பெற்ற “சுரேஸ் காசிம்“ என்பராகும்.
சுரேஸ் காசிம் பற்றி சற்று விரிவாகப் பார்க்க வேண்டியது தேவையானதாகும். மலையத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜாவா இனத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிமாவார் சுரேஸ் காசிம். 1983 இல் இராணுவத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மொசாட்டின் நடவடிக்கைகளுடன் நேரடித் தொடர்பாளராக இருந்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் மொசாட்டின் செயற்பாட்டில் இணைந்து செயற்பட்ட முக்கிய நபர் சுரேஸ் காசிம். விடுதலை இயக்கங்கள் அஞ்சிய ஒரு இராணுவ வீரர் என்றால் அது சுரேஸ் காசிம் தான். தேவைக்கேற்றாற் போல் உருமாற்றம் செய்து களப்பணிகளில் ஈடுபடக்கூடிய திறன் உள்ளவர். கிழக்கு மகாணத்திலே திருக்கோணமலை மாவட்டத்தில் தான் அதிக காலம் பணியாற்றினார். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம் இளைஞர்களை பயிற்றுவிப்தற்காகவும் படுகொலைகள் திட்டமிட்டு நடத்துவதற்காகவும் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
திருக்கோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில் இருந்து ஆரம்பத்தில் (1983 ஆரம்பப் பகுதி) மூன்று பேர் மொசாட் பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிண்ணியாவிலிருந்து பசீர், மூதூரிலிருந்து மனாஃப் மற்றும் இன்னொருவர்(உயிருடன் அவர் இருப்பதால் பெயர் தவிர்த்திருக்கிறேன்) மொசாட்டின் பயிற்சி வழங்கப்பட்டது. மனாஃப் அவர்கள் மூதூரில் பெரும் செல்வந்தர். அத்தோடு ஈரோஸ் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர். கைத்துப்பாக்கியினை முதன்முதலாக ஈரோஸ் இயக்கத்திற்கு மூதூரில் காண்பித்தவர் என்றால் அது மனாஃப் தான். மொசாட் ஆயுதப் பயிற்சியும் எவ்வாறு செயற்படுவது என்ற பயிற்சிகளுமே கொடுத்தார்கள். அரச அநுமதிப்பத்திரத்துடன் உத்தியோகபூர்வமாக கைத்துப்பாக்கியினை மனாஃப் வைத்திருந்தார். யாருக்குமே தெரியாது அவர் ஒரு உளவாளி என்று. அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்பதே மூதூரில் அவருக்கு இன்றுவரை இருக்கும் பெயர். ஈரோசின் செயற்பாட்டாளராக அப்போது இருந்த தவராசா எனும் தோடம்பழத்துடன் மனாஃப் நெருங்கிய தொடர்பைப் பேணியிருந்தார். ”அரசிடமிருந்து கைத்துப்பாக்கி அநுமதிப் பத்திரம் பெற்று வாங்கியிருக்கிறேன்” என தோடம்பழத்திடம் கைத்துப்பாக்கியைக் காண்பித்ததே அவர் செய்த மாபெரும் தவறாகும். இவ்விடயம் தலைமைக்கு அறிவிக்கப்பட அவர் மொசாட்டினால் பயிற்றுவிக்கப்ட்டவர் என்ற தகவல் பழத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. யாரையும் எழுந்தமானமாக சுட முடியாது என்பதால் அவரது செயற்பாடுகளை விளக்கி பள்ளித் தலைவர்களுக்கு பழத்தினால் உத்தியோகபூர்வமாக கடிதம் வழங்கப்பட்டு 14 நாட்களுக்குள் அவர் மூதூரை விட்டு வேறு எங்காவது சென்றுவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. அதனை சுரேஸ் காசிமிடம் மனாஃப் கூறிய போது எதற்கும் பயப்பட வேண்டாம் என்று கூறி ஒருவாரகாலம் அவரது வீட்டிற்கு நிழல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அரச புலனாய்வாளர்கள் இதனை வாய்ப்பாக பயன்படுத்த எண்ணி பாதுகாப்பினை மீளப்பெற்றுக்கொண்டார்கள். சில நாட்களில் தோடம்பழத்தினால் மனாஃப் சுட்டுக்கொல்லப்படடார். இக்கொலையானது மூதூரில் முஸ்லிம் மக்களிடையே பலத்த எதிர்வலைகளை எழுப்பி யிருந்தது. எனினும் சிலநாட்களில் சம்பூரைச் சேர்ந்த தோடம்பழம் என்றழைக்கப்படும் தவராசாவும் கட்டைப்பறிச்சானைச் சேர்ந்த சோ என்றழைக்கப்பட்ட பாலச்சந்திரனும் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதனால் முஸ்லிம் மக்கள் ஆறுதலைடைந்தார்கள்.
கிண்ணியாவில் பசிர் என்பவர் தலைமையில் ஊர்காவல்படை அமைக்கப்பட்டது. புலிகளின் தளபதி குரு மற்றும் உதயன் கொல்லப்பட்ட பின் கிண்ணியா எரியூட்டப்பட்ட பின் பசீரின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு எதிரானதாக வேகமாக்கப்பட்டது.கிண்ணியா மருத்துவமனைக்கு பின் பகத்தில் குடியிருந்த தமிழ் மக்கள் மீது பல படுகொலைகள் பசீரினால் நடத்தப்பட்டன. அம்மக்கள் இடம்பெயர்ந்து பைசல்நகரில் குடியேறும் வரை படுகொலைக் தொடர்ந்தன. கிண்ணியாவின் துறையடியைச் சுற்றி மூன்று சைவக் கோயில்கள் இருந்தன. அம்மன் கோயில், ஊற்றடிப்பிள்ளையார் கோயில், அம்மன் கோயிலுக்கருகில் ஏ.எஸ்.எம் (ASM) என்ற அரசசார்பற்ற நிறுவனம் தற்போது இருக்கும் இடத்திற்கு அருகில் இருந்த காணியில் இருந்த பிள்ளையார் கோயில். 
ASM அருகில் இருந்த பிள்ளையார் கோயில் தனியார் காணியில் இருந்தது. முஸ்லிம் ஒருவரால் ஒரு கோயில் எரிக்கப்பட்டதென்றால் அது கிண்ணியா பிள்ளையார் கோயில் மட்டும் தான். அது மொசாட்டினால் பயிற்சியளிக்கப்பட்ட பசீரால் ஆகும். கோயில்காணி பின்னர் உரிமையாளரால் முஸ்லிம் ஒருவருக்கு விற்கப்பட்டது.
தற்போது கிண்ணியா மருத்துவமனை இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காணியில் அப்போது இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போ இருந்தது. இந்த இடத்தில் தான் பலநூறு தமிழ் மக்களை பசீர் குழுவினர் கொன்றனர். அதனால் அங்கிருந்த 400 இற்கு மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் கிண்ணியாவிலிருந்து இடம்பெயர்ந்தனர். தமக்கு உரித்தான காணிகளை விற்றுவிட்டு நிரந்தரமாக வெளியேறினர். தமிழ்மக்கள் வாழ்ந்த இடத்தில் தான் கிண்ணியாவிற்கே ஆரம்பத்தில் கல்வி அறிவை வழங்கிய அமரர் காசிநாதரும் வாழ்ந்திருந்தார். இவ்வாறு தமிழ்பேசும் மக்கள் துண்டாடப்பட்டுக் கொண்டிருந்தனர். பசீர் பின்னர் தமது தேவைகள் முடிவடைந்தபின் மூதூரில் வைத்து சுரேஸ் காசிமினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மூதூரின் மூன்றாவது நபர் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம். 
சுரேஸ் காசிம் தமிழ் விடுதலை இயங்கங்களுக்கு பெரும் தலையிடியை திருக்கோணமலையில் கொடுத்துக் கொண்டிருந்த இராணுவவீரர். 
கிண்ணியா மணலாற்றில் விடுதலைப் புலிகளதும் ஈரோஸினதும் முகாம்களை முற்றுகையிட தரையிறக்கப்பட்ட இராணுவ அணியை வழநடத்தியவர் சுரேஸ்காசிம் தான். தரையிறக்கத்தினை அறிந்த போராளிகள் இராணுவம் தாக்குவதற்கு முன்பாகவே இராணுவதினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த இராணுவம் சிதறி ஓடியே தப்பினர். சுரேஸ் காசிம் வந்திருந்தது பின்னரே தெரிய வந்தது. விடுதலைப் புலிகளும் ஈரோஸ் அமைப்பும் இணைந்து நடத்திய ஒரேயொரு தாக்குதல் அதுவாகும் இத்தாக்குதல் “சாவாறுத் தாக்குதல்“ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் தான் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக ஈரோசினால் எறிகணைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. பெரும் எண்ணிக்கையில் இராணுவம் சாவடைந்ததுடன். பெரும்தொகை இராணுவ சுடுகலன்கள் மற்றும் தளபாடங்கள் போராளிகளால் கைப்பற்றப்பட்டன.
எவ்வளவோ முயற்சியெடுத்தும் சுரேஸ் காசிமை எதுவும் போராளிகளால் செய்ய முடியவில்லை.
2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் கொழும்பு தெஹிவளையில் மெல்பூட் வீதியில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்ப்பட்டார். அவ்வேளையில் அவர் இராணுவத்தில் இருக்கவில்லை. பொதுமக்களிடம் கப்பம் பெற்றமை நிருபிக்கப்பட்டமையினால் சுரேஸ்காசிம் பணிநீக்கம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியிருந்தது. 
கப்டன் மொஹமட் சுரேஸ் காசிம் தனது 41 வயதில் புலிகளால் உயிர் நீத்தார். சாகும் போது புறக்கோட்டை, வெள்ளவத்தை ஆகிய இடங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு தேடப்பட்டவராகவும் பாதாள உலக குழுக்களுடன் தொடர்புள்ளவராகவும் பேசப்பட்டார்.