திருகோணமலை: பெண்கள் உடை அமைப்பு பற்றிய எதிர் வினையாக்கம்

(சாகரன்)
 
திருகோணமலையின் ஒரு பாடசாலையின் ஆசிரியரின் உடையை மையப்படுத்திய நிகழ்வுகளும்… ஆசிரியை பாடசாலை நிர்வாகம் இடையேயான வாக்கு பிரயோகங்களும்…….. அத்து மீறல்களும்…. நிர்வாகச் செயற்பாடுகளும்….. இடமாற்றமும்…. ஒரு ஆரோக்கியான சூழலை தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே ஏற்படுவதை சற்று தடுமாற்றம் அடையச் செய்த நிகழ்வு மனதிற்கு வருத்தமானதாகவும் இது தவிர்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் என் மனமும் ஏங்கியே நிற்கின்றது.

ஆடை அணிதலை மையப்படுத்திய வாக்கு வாதங்களும் கருத்தாடல்களும் அவதூறுகளும் அனுசரணையான பேச்சுக்களிலும் பெண்களின் உடை மையப்படுத்தப்பட்டிருந்ததை எம்மால் அவதானிக்க முடிந்திருக்கும். அது முஸ்லீம் பெண் அணிந்த உடைபற்றிய கருத்தாக இருந்தாலும் இதற்கு எதிர்வினை ஆற்றி தமிழ் பெண்களின் உடையணிதல் என பரிணாமும் பரிகாசமும் இங்கு பெண்ணை ஒரு உணர்வுள்ள உணர்ச்சியுள்ள சக மனுஷியாக சித்தரிப்பதற்கு பதிலாக அவள் ஒரு போகப் பொருள் எனவே அவளின் உடலங்கள் மறைக்கப்படவேண்டும் அல்லது உடலம் தெரியப்படுதல் தூண்டுதலை ஏற்படுத்தும் என்று பெண்ணை போகப் பொருளாக ஒரு பண்டமாக இந்த சமூகத்தின் ஒரு சாரரின் பார்வையான ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு ஆகும்.

 
ஒவ்வொருவரும் தாம் கூறும் அல்லது தாம் விரும்பும் உடைகளையே பெண்கள் அணியவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் ஆண் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு ஆகும். இதுவே இங்கும் திருமலையின் பாடசாலையில் நிகழ்ந்த வேண்டப்படாத நிகழ்விற்கு எதிர்வினை, சார்புவினை ஆற்றியவர்களின் கருத்துக்களில் அதிகம் மேலோங்கி இருந்தன. தமது கருத்துக்களை நியாயப்படுத்த இவர்கள் பண்பாடு, கலாச்சாரம், ஆச்சாரம், மார்க்கம் என்ற சொல்லாடல்களை பாவித்த பலரும் இந்த உடை விடயத்தில் பெண்ணே பேசுபொருளாகவும் அவளை பண்டமாக்கி போகத்திலிருந்து காப்பாற்றுவது கலாச்சாரத்தின் அல்லது ஆண் வர்க்கத்தின் கடமை என்பது போன்ற கருத்தாக்கங்களை ஏவிவிட்டிருந்தனர். இந்த வெளிபாட்டின் ஒரு அங்கம் ஆசிரியையின் பிரச்சனையை அவரது கணவர் கையில் எடுத்துக் கொண்டதாகும். உண்மையில் இந்த பிரச்சனையை பெண்களே தீர்விற்காக கைகளில் எடுத்திருக்க வேண்டும்.
 
பெண் ஒருவள் உடையணிதல் என்பதில் ஆணுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தில் இருந்து பெண் முற்றுமுழுதாக மறுக்கப்படும் சிந்தனையின் வெளிபாடுகளே வக்கிரங்களாக வாந்தி எடுக்கப்பட்டன. இவை கண்டிக்கத்தக்கது. இதில் மதம், கலை, கலாச்சாரம், ஆச்சாரம், மார்க்கம் என்பவற்றை கடந்து ஆண்களின் மேலாதிக்க மனப்பாங்கு கோலோச்சி இருந்ததை அவதானிக்க முடியும். இனவிருத்தியில் பெண்கள் சேயை சுமக்கும் தியாகமும் இதற்கு ஆண்களின் தேவையும் இதனை ஒட்டிய மனிதர்களின் உறுப்புக்களும் இயல்பானதும் இவை மறைவானதாக இருக்கும் வண்ணம் உடையணிதல் என்பது மனித நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கில் உருவான மதிக்கத்தக்க நாகரீகங்கள்.
 
குழந்தையிற்கு தனது உதிரத்தை பாலாக்கி ஊட்டும் உணவிற்கான அவயங்கள் எல்லா மனிதர்களும் தாய் சேய் உறவு மூலம் முதலில் அறிமுகமான ஆரம்ப உணவு களஞ்சியம் என்ற சிந்தனையை நாம் மேலோக்கி எம்மை பண்படுத்திக் கொண்டால் என் தாய், சகோதரி, மகள் என்பதற்கு அப்பால் சக மனுஷிகளின் உடலின் ஏற்ற இறக்கங்களை வெறுமனவே காமுற பார்க்கும் கண்ணோட்டம் மறைந்து போகச் செய்யும். அது பெண்கள் போகப் பொருள் என்ற சிந்தனை ஓட்டத்தில் இருந்து எம்மை விடுவிக்க ஆவன செய்யும். இதனை நாம் இனிச் செய்வோம் அது மதம், மொழி, கலாச்சாரம், மார்க்கம், ஆச்சாரம் எல்லாவற்றையும் தாண்டி பிறர் அணியும் உடைகளை கண்ணியத்துடன் காணுற வாய்புக்களை ஏற்படுத்தி சகோதரத்துவத்தை வளர்க்கும். இதுவே இன்றைய உடனடித் தேவையாகும்.
 
இவற்றிற்கு அப்பால் பொதுவெளில் பிறருக்கு கண்ணியமாக தோன்றக் கூடிய வகையில் உடையணிதல் என்பது பொதுவிதியாக நாம் எல்லோரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். சிறப்பாக பாடசாலை பிள்ளைகள் ஆசிரியர்கள் தமது பாடசாலை நேரங்களில் நேர்த்தியான வரையறுக்கப்பட்ட சீரூடைகளை அணிதல் என்ற முறமை யாவரும் சமம் என்ற தோற்றப்பாடுகளை ஏற்படுத்தும். இதில் பல்லின சமூகங்களின் கலாச்சார விழுமியங்களை நாம் புறக்கணிக்க கூடாது.
 
கூடவே கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்படும் உடை நாம் வாழும் பிரதேசத்தின் தட்ப வெப்ப காலநிலையின் வெளிப்பாடுகளின் அடிப்படையில் உருவானவை என்பதை நாம் உணர்ந்து கொண்டு இதன் அடிப்படையில் நாம் வாழும் நாட்டின் காலநிலைச் சூழலிற்கு ஏற்ப மருவியுருவாகிய உடைகளை அணிதல் என்பதே சரியானது ஆகும். மேலத்தேய குளிர் நாடுகளில் நாம் எமது ஊர் உடைகளை துறந்து வயது வேறுபாடின்றி ஆண் பெண் வேறுபாடின்றி முழுக் காற்சட்டை, உள்ளங்கி, வெளியங்கி, இதற்கும் மேல் இன்னொரு அங்கி என மாற்றம் அடைந்த உடைகளை அணிவது போல் அமைய வேண்டும் என்ற புரிதல் அவசியம்.