திலீபனுக்கு மிக அமைதியாக செலுத்தப்பட்ட அஞ்சலி!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடுப்பதற்கு சிறிலங்கா பொலீஸ் தரப்பிலிருந்து போடப்பட்ட வழக்கினை சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் மிக நிதானமாக கையாண்டு வெற்றிபெற்றிருக்கிறார்கள். இருந்தாலும், இந்த வழக்கை தங்களது தேசிய சதிராட்டத்துக்கு கிரீடமாக வைத்து எப்படியாவது தங்களது அணிக்காக ஒரு goal அடிக்கவேண்டும் என்று கடைசிவரை குறுக்காலும் மறுக்காலும் ஓடித்திரிந்த கோஷ்டிகள் தற்போது நீதிமன்றத்துக்கு வெளியில் வந்து நின்று வழக்கை வென்ற சுமந்திரனுக்கே வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீதிமன்றில் நடைபெற்றது என்ன?

* தியாகி திலீபன் நினைவுத்தூபியானது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது. அது பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலானது. அங்கு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது.

* சிறிலங்காவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகிய விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினரான திலீபனை நினைவுகூருவது சட்டத்துக்கு முரணானது.

– இவ்வாறு தெரிவித்து இந்த வழக்கு பொலீஸ் தரப்பிலிருந்து நிகழ்வினை ஏற்பாடு செய்த யாழ். மாநகர சபைக்கு எதிராக போடப்பட்டது.

இந்த வழக்கிற்காக நீதிமன்றத்தில் முன்னிலையான சுமந்திரன் –

– தியாகி திலீபனின் நினைவுத்தூபி அரச நிதியில் கட்டப்பட்டது என்று கூறி தானும் சிறிதரன் எம்.பியும் இந்த தூபி புனருத்தாரணத்துக்காக வழங்கிய நிதி ஆதார ஆவணங்களை மன்றில் சமர்ப்பித்து, அந்தத்தூபி சட்டவிரோதமானது அல்ல என்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு தடையேற்படாத வண்ணம், வீதியிலிருந்து தொலைவிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நிரூபித்தார்.

– அதேவேளை, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவுகூருவது சட்ட விரோதம் என்று பொலீஸார் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்துக்கு எதிராக சுமந்திரன் அவர்கள் தனது வாதத்தை முன்வைத்தபோது, திலீபன் வன்முறை வழியில் ஈடுபட்டு உயிரிழக்கவில்லை என்றும் அவர் அமைதிவழியில் தனது கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக வழியில் போரிட்டவர் என்றும் அந்த “வழிமுறையைத்தான்” பொதுமக்கள் நினைவுகூருகிறார்கள் என்றும் எடுத்துக்கூறியிருந்தார்.

ஆனால், இந்தவேளையில், அங்கு சென்றிருந்த “சட்டப்பண்டிதர்” – உயிரிழந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் எவரையும் நினைவு கூருவது தவறில்லை என்று நீதிபதியிடம் எடுத்துக்கூறும்படியும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகமே அதனை தெரிவித்திருக்கிறது என்று வாதத்தில் சேர்த்துக்கொள்ளுமாறும் சுமந்திரனைப்போய் நுள்ளியிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த சுமந்திரன் – “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை ஒரு நீதிமன்றத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தப்போவதில்லை என்றும் இப்போது இந்த வழக்கில் விடுதலைப்புலிகளின் எல்லாப்போராளிகளையும் நினைவு கூருவது தொடர்பான விடயத்தை நுழைத்தால் எங்கள் தரப்பு பலவீனமாவதற்கான வாய்ப்புக்கள்தான் அதிகம்” – என்றுகூறி அதனை மன்றில் வெளிப்படுத்துவதற்கு மறுத்துவிட்டார்.

சுமந்திரனுக்கு ஆலோசனை கூறப்போன சட்டப்பண்டிதர் செய்யவிருந்த மொக்குவேலை நல்ல காலம் எடுபடவில்லை. அந்த வாதம் மன்றில் முன்வைக்கப்பட்டிருந்தால், அது பொலீஸின் வழக்கிற்கு நிச்சயம் same side கோலாக முடிந்திருக்கும்.

சிறிலங்கா வர்த்தமானியில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக சேர்க்கப்பட்டுள்ள அமைப்பை நினைவு கூருவது சட்டவிரோதம் என்று பொலீஸ் தரப்பில் வழக்கு தரக்கல் செய்யும்போது, அவர்கள் காய் நகர்த்துகின்ற அதே வழியில் நின்று “இல்லை, நாங்கள் அப்படித்தான் செய்வோம்” – என்று சேர்ட்டை கழற்றிவிட்டு நின்றுகொண்டிருந்தால், நிச்சயம் இந்த வழக்கு தோற்றிருக்கும்.

வேறு வழியில் இந்த வழக்கை சாமர்த்தியமாக அணுகிய காரணத்தினால் இந்த வழக்கும் வென்றது. நினைவேந்தல் நிகழ்வுக்கும் தடை நீங்கியது.

ஆனால், நீதிமன்றத்துக்கு போன சுமந்திரன் வெளியில் வரும்போது தமிழீழத்துக்கான அங்கீகார பத்திரத்தை கோட்டு சட்டைக்குள் வைத்து வெளியில் கொண்டுவருவார் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இதனால் கொஞ்சம் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.. அத்துடன், சுமந்திரனால் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று இரவு பகல் பாராது உபவாசமிருக்கும் ஆன்மிக அரசியல் ஞானிகளுக்கும்ம்கூட இந்த வழக்குத்தீர்ப்பு கொஞ்சம் கஷ்டத்தை கொடுத்திருக்கலாம்.

ஆனால், யதார்த்தம் என்றால் என்ன? கள நிலைவரத்தை நேர்த்தியாக – நிதானமாக கையாளுவது எப்படி என்பதை சுமந்திரன் தரப்பு இன்னொரு தடவை செய்து காண்பித்திருக்கிறது.

364 நாட்களும் முகநூலில் இருந்து கடலை வறுத்துக்கொண்டிருப்பதாக போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் சேர சோழ பாண்டியர்களுக்கு ஒரே ஒரு நாள் சுமந்திரன் வந்து “தம்பி அடுப்பை பற்ற வையுங்கள்” என்று சொல்லும்போதுதான் தங்களது நிலையே புரிகிறது.

ஆனால், இந்த வழக்கு தமிழர் தரப்பிலிருந்து பார்க்கும்போது சட்டத்தின் வழியாக ஒரு நினைவேந்தல் நிகழ்வுக்கான அனுமதியை வெற்றிகொண்டதாக காணப்பட்டாலும் அரச தரப்பை பொறுத்தவரை இது நீதிமன்றுக்கு வெளியே மாபெரும் வெற்றியாகும். அவர்கள் போட்ட திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழர் தரப்பின் இயல்புநிலை திரும்பவில்லை, நல்லிணக்கம் மலரவில்லை என்றும் தொடர்ந்தும் குற்றவாளிக்கூண்டிலேயே நிறுத்தப்பட்டுவரும் சிறிலங்கா அரசு – சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்காட்டுவதற்கு முத்துப்போல ஒரு வழக்கு இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதாவது, தங்களால் தோற்கடிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் போராளி நினைவுகூரப்படுவதை தடுப்பதற்குக்கூட தங்களது படையினர் நீதிமன்றத்தைத்தான் நாடினார்கள் என்றும் – அவர்களது வழக்கு தோற்கடிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் தாங்கள் விரும்பியவாறு அந்த நினைவேந்தலை நடத்தினார்கள் என்றும் உலகின் எந்தப்பாகத்திலும் மைத்திரியோ ரணிலோ தைரியமாக சென்று பேசுவதற்கு ஒரு வழக்கினை திலீபனின் தூபி விவகாரம் ஏற்படுத்திவிட்டது.

அந்த வகையில், சிறிலங்கா அரசுக்கு இந்த வழக்கு உள்ளுரில் தோல்வியென்றாலும் உள்ளுர வெற்றிதான்.

(ப. தெய்வீகன்)