தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!

‘தமிழ் மக்கள் விடயத்தில் இடதுசாரிகள் தவறிழைத்து விட்டார்கள்’ என பொத்தம் பொதுவாகப் பேசியும் எழுதியும் வரும் தமிழர்களைக் கவனத்திற்கொண்டு, ஒரு வரலாற்று ஆவணத்தின் மீள்வெளியீடு:

தேசிய ஒடுக்குமுறைக்கும்
பிரிவினைக்கும் எதிராக
தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் குழு 1975 மே 19 இல் அன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து, குறிப்பாக தமிழர் அரசியல் குறித்து வெளியிட்ட மேற்படி தலைப்பிலான அறிக்கையை அதன் முக்கியத்துவம் கருதி 43 வருடங்களின் பின்னர் மீள் பிரசுரம் செய்கின்றோம்.

அதற்கான காரணம், இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழீழத் தீர்மானத்தை எடுத்திருக்கவில்லை. அந்தத் தீர்மானத்தின் காரணமாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் உருவாகியிருக்கவில்லை. இருப்பினும் தமிழ் தலைமை தவறான தீர்மானத்தை எடுக்கும் என்பதை முன்கூட்டியே உய்த்துணர்ந்து இந்த அறிக்கையில் கோடிகாட்டியிருப்பதுடன், அதனால் எழும் ஆயுதப் போராட்டத்தால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்பதையும், இலங்கையில் அந்நியத் தலையீடு ஏற்படும் என்பதையும் அறிக்கை சரியாகக் கணித்துக் கூறியுள்ளது.

இன்று 43 வருடங்கள் குறித்து திரும்பிப் பார்க்கையில் இந்த அறிக்கையில் கூறப்பட்டவை பெரும்பாலும் சரியாக நிகழ்ந்துள்ளதைக் காண முடியும். அதுமாத்திரமின்றி, இந்த அறிக்கையின் தலைப்பு இன்றைய சூழலுக்கும் மிகச் சரியாகப் பொருந்துகிறது என்பதையும் காண முடியும்.

இந்த அறிக்கையைத் தயாரிப்பதில் கட்சியின் அன்றைய வட பிரதேசக் குழுவின் பின்வரும் உறுப்பினர்கள் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலஞ்சென்ற தோழர்களான மு.கார்த்திகேசன், வீ.ஏ.கந்தசாமி, மு.குமாரசாமி, இ.வே.துரைரத்தினம், சி.சண்முகநாதன், மு.முத்தையா மற்றும் தோழர்கள் வ.சின்னத்தம்பி, ச.சுப்பிரமணியம், கோ.சந்திரசேகரம், சி.செல்லையா, ச.வாமதேவன்.

இந்த அறிக்கை பற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம்.

-‘வானவில்’ ஆசிரிய குழு

அறிக்கை வருமாறு:
குடியரசு தினத்தைப் பகிஸ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.

தமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்களினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பனவும், தற்பொழுது தமிழர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. அதுமட்டுமல்லாமல், இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம் இலங்கை மக்களின் பெரும்பான்மையானோரின் எதிர்ப்பைச் சம்பாதித்ததுமல்லாமல், தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும் தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

மறுபுறத்தில் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு, அரசியல் சுயலாபம் தேடும் பூர்சுவாக் கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சந்தர்ப்பவாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பதன் மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு சைப்பிரசில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையை ஏற்கெனவே உணர்ந்ததினால் போலும், இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையையும் கொள்கையையும் ‘பண்டா – செல்வா ஒப்பந்தத்தின்’ மூலம் முன்வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்து விட்டார்கள். இது இந்த நாட்டின் துர்ப்பாக்கியமாகும்.

இன்று பண்டாரநாயக்கவின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் செயல்படுத்தத் தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளி விட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விசயமல்ல.

எம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இனப் பாதுகாப்புக்கான சரத்துகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல, பதிவுப் பிரசைகளுக்கும் இலங்கைப் பிரசைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இன ரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்களப் பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்த பட்சம் பண்டாரநாயக்கவினது கொள்கையையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒருபுறத்தால் நாசம் செய்கிறது. மறுபுறத்தால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் இருப்பதின் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாசைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிராக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும், போராட வேண்டும். இதைத் தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள், தொழிற்சங்கங்கள், மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு, தமிழர் விரோதப் போக்குக்கு எதிராக ஐக்கியப்பட்டு, தமிழ் மக்களின் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஸ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக, இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ, வேறெந்த ஏகாதிபத்திய நாட்டையோ அல்லது வேறு அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வுகாண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலை பெற முடியும். தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ முடியும். பெரும் முதலாளிகளாலும், வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால் தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காட்ட முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் தீவிரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.

எமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
வட பிரதேசக் கமிட்டி
19.05.1975

(இப்பிரசுரம் நல்லூர் நாவலன் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலப்பிரதி ‘வானவில்’ ஆவணக் காப்பகத்தில் உள்ளது)