தோழர் நாபாவும்……! தோழர் விஷ்வாவும்…..!!

(தோழர் நாபாவின் பிறந்த தினம் இன்று அவரின் ஞாபகங்களை மீட்டெடுத்து தோழர் விஸ்வானந்ததேவனின் புத்தக வெளியீட்டில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சியின் முக்கியஸ்தர் தோழர் ஜேம்ஸ் புத்தக மதிப்பீட்டுரை)

விஷ்வா என்ற இடதுசாரிப் தமிழீழப் போராளி
(தோழர் ஜேம்ஸ்)

வடமராட்சிக்  கல்லுவம்,  கண்டிப் பெரதெனியா என்று தனது இடதுசாரி சிந்தனை ஊற்றையும்…. செயற்பாட்டையும் தன்னகத்தே கொண்டு உருவான சமூகப் போராளியின் நினைவு கூறலை…சிலர் கூடித் தேர் இழுக்காமல்…. பலர் கூடித் தேர் இழுத்தால் அசையாத் தேரும் நகரும் என்பதை கற்றுணர்ந்து இங்கு 25 பேர் கூடி உருவாக்கிய தேர் இது… வரலாற்றுத் தேர் இது…  புத்தக வடிவில் வந்துள்ளது. தோழர் விசுவானந்துதேவனின் நினைவு நூலாக பரிணமித்திருக்கின்றது. இந்தத் தேரை இழுக்க வடத்தை பிடிக்கும் எமக்குள் சாதி.. மதம்… இனம்…. மோழி… என்ற வேறுபாடுகள் இல்லை. நாம் அனைவரும் மனித குலத்தின் உறுப்பினர்கள் மனித நேயத்தையும், சம தர்ம சகவாழ்வையும் உறுதிப்படுத்த ஏதோ ஒருவகையில் இணைந்தவர்கள்…. பிணைந்தவர்கள்….. இந்த வடத்தில் கரம் பதித்தவர்கள் தமக்குள் பிரிவினை பார்பதில்லை, மாறாக ஐக்கியத்தை வலியுறுத்துபவர்கள். இந்த வடத்தில் கரம் பதிக்க 26 வது ஆளாக நானும் விரும்பினேன். வடம்பிடிக்க மறுக்கும் ஆதிக்க மனப்பான்மையற்ற இவர்களிடத்தும் எனது கரங்களில் மையிட்டு சில கிறுக்கல்கள் செய்ய நானும் விரும்பினேன். ஆனாலும் வாய்ப்புக்கள் தற்செயலாகத் தவறிவிட்டது. சிறிது வருத்தம்தான். ஆனாலும் மதிப்புரை வழங்க வாய்ப்பு வழங்கியமைக்கு வணங்கி வாழ்த்தி நிற்கின்றேன்.


தோழர் விஷ்வாவை நெருக்கமாக யாழ்பல்கலைக் கழக சூழலில் பல தடவைகளும், இரு தடவை தமிழ் நாட்டில் தோழர் நாபாவுடனும் சந்தித்தது ஞாபகங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கின்றது. நாபாவுடன் இணைந்த சந்திப்பில் விஷ்வா உடன் நான் அதிகம் பேசவில்லை. நான் சார்ந்த விடுதலை அமைப்பிடம் இராணுவப்பயிற்சி பெற உதவி கோரிய நிலையில் பயிற்சியும் வழங்கப்பட்டது. நாங்கள் சந்தித்த வேளை சற்று உயரமான தோற்றமுடைய தோழர் நாபாவிடம் சற்று சிறிய தோற்றம் உடைய விஷ்வா பயிற்சி எந்த அடிப்படையில் வழங்கப்படவேண்டும் என்பதையும் ஆனாலும் எமக்கிடையேயான கொள்கை முரண்பாடுகள் தொடர்ந்தும் விமர்சிக்கப்படும் என்பதை வலியுறுத்திக் கூறிய விஷவா கூரிய வார்த்தைகள் இன்னமும் என் காதுகளில் ஒலித்த வண்ணமே இருக்கின்றது. எமது முதலாளவது பேராளர் மகாநாட்டினைத் தொடர்ந்து வெளிவந்த கட்சியின் அரசியல் யாப்பும், வேலைத்திட்டமும் அடங்கிய எங்கள் வெளியீட்டிற்கு ‘இலக்கு’ தான் தனது விமர்சனத்தை வைத்திருந்ததையும் இங்கு குறிப்பி விரும்புகின்றேன்.

நீங்கள் எங்களுக்கு பயிற்சி தருகின்றீர்கள் என்பதற்காக உங்கள் அமைப்பின் கொள்கை, வேலைதிட்டம் போன்றவற்றின் மீதான எமது விமர்சனங்களை நாம் நிறுத்தாமல் என்றும் போல் காத்திரமானதாக முன்வைப்போம் என்றார் தோழர் விஷ்வா. எமக்கிடையேயான முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகள் என்று கண்டிப்புடன் கூறிய நிபந்தனை தனது கொள்கையில் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத தன்மை தோழர் விஷ்வா இடம்
பறைசாற்றி நின்றது.  நாபா சிரித்துக் கொண்டே ‘நோ புறப்ளம்’ என்று தனது வழமையான பாணியில் பதில் கூறிய வண்ணம் தனது நெஞ்சுவரை மட்டும் உயர்ந்து நின்ற விஷ்வாவை ஒரு கையினால் கட்டியணைத்த காட்சி இன்றும் மனதில் நிற்கின்றது. ஆனால் இந்த அணைப்பில் இருந்த தோழமை உணர்வு பிரபாகரனை தோழர் நாபா சக போராளியாக அணைத்த போது பிரபாகரனிடம் இருக்கவில்லை. இதனால்தானோ நாபாவை தனக்கு முன்னாலேயே ‘அணைத்து’விட்டான் பிரபாகரன். விஷ்வா அப்படிப்பட்டவர் அல்ல.

நாபாவிற்கும், விஷ்வாவிற்கும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தன. இருவரிடத்தும் மாவோ இன் போராட்ட வழிமுறைகளின் தாக்கம் நிறையவே இருந்தன. இந்திய ஆளும் வர்க்கம் விரும்பாத போராளிகளாக இருவரும் இருந்தனர். நாபாவிடம் மாவோயிஷக் கருத்துக்களின் தாக்கம் இருந்ததை என்னால் பல தடவைகைள் உணர முடிந்தது. விஷ்வா இடம் இக்கருத்தின் தாக்கத்தைப்பற்றி நான் இங்கு குறிப்பிடத் தேவை இல்லை. இது எந்தப் பக்கம் எங்கும் வியாபித்து இருந்தது. இந்தியாவில் தமிழ் நாட்டில் நாபாவின் இடதுசாரி அரசியல் தளம் எம்எல்(ML) குறுப்தான். இது பலருக்கும் தெரியும் விஷ்வாவிற்கும் தெரியும். ஆனால் நாபா சீனா. சோவியத் என்று அந்த நாடுகளுக்கு பொருந்திய சித்தாந்த நடைமுறைகளை அப்படியே ஈழத்திற்குள் பொருத்திப் பார்க்க விரும்பும் வறட்டு சிந்தாந்தவாதியல்ல. மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு அதனை செழுமைப்படுத்தி மீண்டும் மக்களிடம் கொண்டுசெல்ல முற்பட்டவர். இந்த செயன்முறை விஷ்வாவிடமும் இருந்தது. இருவரும் தனிநாட்டுக்கான போராட்டம் ஒட்டு மொத்த இலங்கையின் புரட்சிக்கான முதல்படி என்பதில் நம்பிக்கை வைத்து போராடப் புறப்பட்வர்கள். உருவாகும் ஈழத்தைப் பின்புலமாக வைத்து ஒட்டுமொத்த இலகையிற்காக பாட்டாளிவர்க்கப் புரட்சியை நடத்துதல் என்பதை நம்பியவர்கள், செயற்பட முற்பட்டவர்கள். மக்களை அணிதிரட்டி அரசியல் மயப்படுத்தி கட்சியின் வழிகாட்டலின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முனைந்தவர்கள்.

இதுதான் விஷ்வாவிற்கும் அதன் தாய் அமைப்புக்களுக்கும் அதில் இருந்த ஒரு முனைவாதக் கருத்தாளர்களுக்கும் இடையே இருந்த முரண்பாடுகள் ஆகும. இந்த முரண்பாடுகள் பலமடைந்த போது விஷ்வாவின் அவசரங்கள் புதிய புதிய அமைப்புக்களை உருவாக்க வழிகோலின. புதிய அமைப்புக்கள் உருவாக்கம் அடைந்ததும் தாய் அமைப்புக்கள் முழுமையாக இல்லாவிட்டாலும் காலப் போக்கில் செயலிழந்து போகின. இது தோழர் விஷ்வாவின் பாதை சரியாக அமைந்தது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியே இருக்கின்றது. ஆனாலும் தோழர் விஷ்வாவின் காணமல் போனதுடன் அவரது அமைப்பும் கடந்த 30 வருடங்களாக அமைப்பு வடிவம் அற்றுப் போய் இருப்பது பல கேள்விகளை நம்பிக்கையீனங்களை எழுப்பியே நிற்கின்றது. இந்த கருத்தியல் ஓட்டம் எனது பார்வையில் மட்டும் அல்ல அவருடன் மிக நீண்டகாலமாக பயணித்து தமது கருத்துரையை கட்டுரைகளாக வழங்கிய பலரிடத்தும் இருக்கின்றது என்பதை இந்த புத்தகம் சாட்சியப்படுத்தி நிற்கின்றது.

இரண்டாம் கட்டத் தலமையை உருவாக்காமல் விட்டுவிட்டாரோ அல்லது எல்லோரும் புலிப் பாசிசத்தினால் அழிக்கப்பட்டு விட்டார்களோ? என்ற கேள்வி எழுந்து நிற்கின்ற கருத்தோட்டங்களை பலரும் தமது கருத்துக்களில் கூறியே இருக்கின்றனர். பாசிசத்திடம் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளல் என்பதுவும் ஒரு புரட்சியாளனின் வேலைத்திட்டங்கள், தந்திரோபாயங்களில் ஒன்று என்றே வரலாறு எமக்கு பாடம் புகட்டி நிற்கின்றது. இது லெனின் இல் ஆரம்பித்து கோசிமின்,காஸ்ரோ வழியாக டானியல் ஒடேகா வரை நாம் கண்ட விடயம். இவர்கள் தமது போராட்ட வாழ்வுக் காலகட்டங்களில் எதிர் புரட்சிகர சக்திகளிடம் இருந்தும் பாசிஸ்ட்களிடம் இருந்தும் தம்மை காப்பாற்றுவதில் எச்சரிகையாகவே இருந்திருக்கின்றனர். தமது நாடுகளின் எல்லைக்கு அப்பால் நாடு கடந்து பாதுகாப்பு தேடியதாகட்டும் பதவியிழந்த போது தனது நாட்டிற்குள்ளாகட்டும் கோசிமின் உம் ஒடேகாவும் காஸ்ரேவும் தமது உயிரை மக்களுக்கு சேவை செய்வதற்காக தற்காத்துக் கொண்டது நாம் வாழும் நாட்களில் கண்ட வரலாறுக் குறிப்புக்கள்.

இந்தவிடயத்தில் விஷ்வா தோழர் அன்ரன் என்ற இருவரது மரணங்களும் விமர்சனத்துடன் உற்று நோகப்படவேண்டிய ஒன்றாகும். ரெலோவின் மீதான் புலிகளின் ஆயுத நடவடிக்கை மாற்றுக் கருத்தாளர்களை இல்லாமல் செய்தல் என்ற நடவடிக்கையின் பின்பு புலிகள் தமிழ்நாட்டிற்கும் தாயகத்திற்கும் இடையில் பாக்குநீரிணையை புலிகள் மாற்றுக் கருத்தாளர்களின் குருதியினால் சிவக்க வைத்த செயற்பாடுகள் ஒன்றும் புதிய விடயம் அல்ல. சிறீசபாரத்தினத்தின் உயிரைக் காப்பாற்றல் என்ற நிகழ்வில் ஏற்பட்ட தோல்விக்கு புலிகள் போட்ட இலங்கை அரசை விஞ்சும் கடல் பாதுகாப்பு வலையமும் ஒரு காரணமாக இருந்தது என்பது தோழர் மணியம் போன்றவர்கள் அறிந்த ஒன்றே.

தோழர் விஷ்வா, அன்ரன் மரணங்கள் சம்மந்தமான விமர்சனம் எனக்கு தோழர் நாபா மீதும் இருக்கின்றது. இலங்கை இந்திய ஒப்பந்தமும் இதனைத் தொடர்ந்த ஆயுத ஒப்படைப்பு என்ற சம்பிரதாயங்களும் இதனைத் தொடர்ந்த வடக்கு கிழக்கில் இந்திய அமைதிகாக்கும் படையின் பிரசன்னத்தை தொடர்ந்து ஏற்பட்ட இலங்கை அரசு, புலிகளின் அச்சுறுத்தல் இல்லை என்று நம்பப்பட்ட காலத்தில்  நாம் போராட்டத்தில் மரணித்தவர்களின் உறவுகளைச் சந்திக்க 1987 களில் கிழக்கு மாகாணத்திற்கு முதலில் புறப்படுவது என்ற விடயம் சம்மந்தமாக தமிழ்நாடு சூழைமேட்டில் நடைபெற்ற தோழர்களின் கலந்துரையாடல் ஒன்றில் நான் ‘…தாயகத்திற்கு வரமாட்டேன் புலிகள் எங்களைக் கொல்லப் போகின்றார்கள்..’ என்று ஆவேசமாக எனது கருத்தை முன்வைத்த போது தோழமையுடன் என்னை பார்த்து தோழர்கள் ‘..ஜேம்ஸ் பயப்படுகின்றார்…’ என்ற போது ‘…இல்லை புலிகள் வெல்லுவார்களே தெரியாது ஆனால் புலிகள் கொல்லுவார்கள்…’ என்றேன். ஏற்பட்ட ஒருவகையான சிரிப்பலையுடன் கூடிய இந்த சூழலை நிசப்தாமாக்கிய நாபா கூறினார் தோழர் ஜேம்ஸ் சொல்வதில்;உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றது. தற்போது எல்லோரிடமும் ஆயுதங்கள் இருப்பதினால் முழுவதையும் கொடுக்காமல் சிலவற்றை மறைத்து வைத்துக் கொண்டு தற்செயலாக தற்செயலாக தவறுதலாக என்று சில கொலைகள் நடைபெற வாய்ப்புக்கள் உண்டு. எமக்கான பாதுகாப்பை யாரும் எமக்கு வழங்குவார்கள் என்ற எதிர்பார்க்க முடியாது நாமே இருக்கின்ற நிலமைக்கு ஏற்ப எமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். நான் இதற்கு பதிலாக ‘….இல்லை புலிகள் தமது ஸ்தாபன முடிவாக இந்தக் கொலைகள் செய்யப் போகின்றார்கள்…’ என்றேன். இறுதியில் நான் மட்டக்களப்பு சென்ற நாபா, வரதர் போன்ற முன்னணித் தோழர்கள் கூட்டத்துடன் இணைந்து கொள்வில்லை.
பின்பு நடந்தவற்றை யாவரும் அறிவோம் புலிகள் முதலில் மட்டக்களப்பில் புளொட் உறுப்பினர்கள் 50 இற்கு மேற்பட்டவர்களை இரு தினங்களிலும் கொன்று குவித்தனர் இத்தனைக்கும் இந்திய அமைதிகாக்கும் படை பார்த்திருக்கு. தொடர்ந்தார் போல் எங்கள் தோழர்களைத் தேடி கொல்ல வந்துபோது நாபா போன்ற முக்கிய தோழர்கள் அருகில் உள்ள கிராமத்திற்கு சற்று முன்பு நகர்ந்த நிலையில் அங்கு வழியனுப்பிவிட்டு நின்றவர்களை புலிகள் கொலை செய்துவிட்டு எனையவர்களை பின் தொடர்ந்த போது செய்தி அறிந்து உயிர் காக்க இலங்கை அரசபடை இருப்பிடம் புகுந்து இந்திய இராணுவ உதவியுடன் உயிர் தப்பி 1990 வரை தோழர் நாபா உயிர் வாழ்ந்ததும் இன்று வரை வரதர் உயிர் வாழ்வதும் வரலாறு.

புலிகளின் பாசிச் செயற்பாட்டை முழுமையாக எடைபோட முன்பு அன்ரனும் விஷவாசும் நபாவும் கொல்லப்பட்டுவிட்டனர். வரதருக்கு மட்டக்களப்பு கொடுத்த அனுபவம் தான் ‘…அநியாயமாக புலிகளின் கைகளால் சாக மாட்டேன்…’ என்று இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையைவிட்டு தற்பாதுகாப்பு தேடிக்கொண்டார். இது இன்றுவரை தப்பி வாழ்வதும் பாசித்தின் வரலாற்றுப் போக்கில் சில எச்சரிகையான செயற்பாடுகள் ஆகும்.

விஷ்வா பாசிசத்தின் கொடூரங்களை சித்தாந்த ரீதியில் உணர்ந்து கொண்ட அளவிற்கு நடைமுறை ரீதியில் முழுமையாக  புரிந்து கொண்டாரா என்பது கேள்விக்குறியே..? இவரின் பாசறையில் வளர்ந்த முன்னணித் தோழர் அன்ரனின் மரணம் இதனை நிறுவியே நிற்கின்றது இதற்கு இவருடன் கூடவே செயற்பட்ட மனோ ரஞ்சன், மணியம் போன்றவர்களின் கருத்துக்கள், எழுத்துக்கள் இதற்கு சான்றாக அமைந்திருக்கின்றன. இதனைத் இப்புத்தகமும் சான்று பகன்று நிற்கின்றது.

இதே போன்ற விமர்சனம் எனக்கு என் மதிப்பிற்குரிய பல தடவைகளின் எனக்கு இன்றும் இன்னமும் ஆசானாக இருக்கும் தோழர் மணியத்திடமும் உண்டு. இவரின் கைது தவிர்க்கப்பட்டிருக்கலாம், தவிர்க்கப்படடிருக்க வேண்டும் என்பதே என்கருத்து. இதில் நாம் எனது பேராசியர் சிறிதரனின் தீர்க்கதரிசனமான நடைமுறை சார்ந்த செயற்பாட்டை உதாரணங்களாக கொள்ள வேண்டும். உதாரணங்களாக ராஜினி திரணகம போன்றவர்களின் அசட்டையீனங்களைக் கருத்தில் கொள்ள முடியாது. இந்த மரணங்கள் காணாமல் போனவர்கள் கைது நிலைக்கு போனவர்கள் எல்லோரிடமும் கூடவே நாபாவிடம்  ‘நான் நல்வன் நான் தவறு ஒன்றும் செய்யவில்லை மக்களை நேசிக்கின்றேன்..’ என்ற பொதுவான மனபாங்கு இருந்ததை அவதானிக்க முடியும்.

இதுதானே இங்கு பிரச்சனை. பாசிசத்திற்கு பிடிக்காத பண்புகள் இவர்களிடம்தானே நிறையவே உள்ளன. எனவே புலிப் பாசிசம் தனது சகல குடூரமான செயற்பாட்டையும் செய்துவிட்டு இன்று இன்னமும் காத்து நிற்கின்றது இன்னொரு கேள்வியற்ற வேள்விக்காக.  ஆனாலும் புலிகளின் கைது, வதைமுகாங்களின் பின்பு தப்பி வந்து தமது தேர்தெடுத்த வரலாற்ற அனுபவங்களின் பதிவுகளை மேற்கொண்ட மணியம், அருள்பேட், சிவகாமி, நாவாந்துறை கிறிஸ்ரியான், கந்தன் கருணைப் படுகொலையிலிருந்து தப்பிய மட்டக்களப்பு போராளி இன்ன பிறரை வாழ்த்தியே நிற்கின்றேன். இப்படியான பதிவுகள் எதனையும் மேற்கொள்ள வாய்ப்புக்கள் இன்றி விஷ்வாவின் பாசறையில் வளர்ந்தவர்கள் பலரையும் புலிகள் கொன்றுவிட்டனர் அனாமதேயமாக்கப்பட்டுவிட்டனர். இதில் தோழர் மணியம் விதிவிலக்காக அமைந்ததும் மிகப் பெரிய வரலாற்றுப் பதிவுகளை இந்தப் புத்தம் ஈறாக தொடர் கட்டுரைகளாக எழுதியிருப்பது வரவேற்கத்தக்கன.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் பலவேறு அமைப்புக்கள் தோன்றி செயற்பட்டன. இது நாம் வாழும் சூழலில் யதார்த்தமானதுதான். வர்க்கப் பிரிவுகள், சாதிய, சமூகப் அமைப்புக்கள், பிரதேச வேறுபாடுகள், இன, மொழி, மத வேறுபாடுகள், உள்ள ஒரு சமூகத்தில் இதற்கான தேவைகள் இருந்திருக்கின்றன என்பவும் உண்மைதான். ஆனால் இவற்றில் வர்க்கம் சார்ந்த பிரிவினையும் இதனை ஒட்டிய உறவுகளும் நட்புக்களும் முரணபாடுகளும் தான் இறுதியில் முன்னிலை பெறும். இதுவே ஈழவிடுதலைப் போராட்டதிலும் நடைபெற்றது.

தமிழ் மிதவாத்தின் குறும் தேசியவாதத்தின் வீரியம் கொண்ட இளைஞர் படையை தமது நாற்காலிக் கனவுகளை நிரந்தரமாக்க உசுப்பேத்தி தரப்படுத்தல் என்றும் தமிழாராட்சி மகாநாட்டுக் கொலை என்றும் தமிழனத் துரோகியென்றும் துரோகிகளை கொன்றவர்கள் மாவீரர்கள் என்றும் துரையப்பாவின் கொலையுடன் வீரியம் பெற்றதுதான் தமிழ் குறும் தேசியவாத்தின் பாதை. இதில் இளைஞர் பேரவை முன்னிலை பெற இது பின் கதவால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் உறவைப் பேணிக்கொண்டு முன் கதவால் கோவை மகேசனின் சுதந்திரன் துணைகொண்டு வீரியம் பேசிய இளைஞர்களை உருவாக்கியதும் காலப் போக்கில் இவர்களும் அம்பலப்பட்டுப் போக உருவானவைதான் பெரும்பான்மையான ஈழவிடுதலை அமைப்புக்கள்.

இதில் தமிழ் மக்கள் மத்தியில் உருவான இடதுசாரிகளின் போராட்டமும் அவர்களுக்கு கிடைத்து வந்த ஆதரவையும் குழிதோண்டிப் புதைப்பதை  தமது உள்ளக வேலைத்திட்டமாக கொண்டு செயற்பட்டதுதான் பொனம்பலம் செல்வநாயகம் அமிர் குழுவினரின் தமிழர் விடுதலைக் கூட்டணி. 1960 களின் பிற்ப்பகுதியில் யாழ்பாணத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு போராட்டமும் வன்னி விவசாய சங்கத்தின் மலையக மக்களுக்கான தர்மபுர கூலி உயர்வு, கூலி உழைப்பாளிப் பெண்கள் மீதான மானபங்கப்படுதலுக்கு எதிராக புறப்பட்டவர்களை இவர்கள் எஸ்டி பண்டாரநாயக்கா போன்ற சிங்களத் தலைவர்களுடன் உறவில் இருப்பவர்கள் சிங்களக் கட்சி என்று தீண்டத்தகாதவர்களாக என்று தமிழ் மக்களிடம் காட்ட முற்பட்டதுமே தமிழ் குறும் தேசியவாத்தின் வீறு நடையாக இருந்தது.

இதற்கு ஜேவிபியின் தமிழர்களை தவிர்த்த இலங்கைப் புரட்சிக்கான ஆயுதப் போராட்டத்தின் குறைப் பிரவசமும் அவர்கள் தம் தோழர்களுக்கு எடுத்த மலையக மக்களின் இலங்கைகான வரவு இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஒரு அங்கம் என்பதுவும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையும் இந்த வகையிற்குள் அடங்கும் என்பதுவும் மலையக மக்கள், தமிழ் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி தமிழ் குறுந்தேசியவாதத்திற்கு வலு சேர்த்தன.
இதன் தொடர்சியாக ஜேவிபின் கிளர்சியிற்கு தமிழ் பகுதியில் ஆதரவு அற்ற நிலையில் ரோகண விஜவீர போன்றவர்களின் ஆயுத நடவடிக்கை உச்சநிலையில் சிறிமாவே அம்மையார் யாழில் பாதுகாப்பாக இருக்க முடிவெடுத்ததும் கிளர்ச்சி இந்திய ஆளும் வர்கத்தின் உதவியுடன் அடக்கப்பட்டதும் கைதுசெய்யப்பட்ட ஜேவிபி கிளர்சியாளர்கள் யாழ்கோட்டைச் சிறையில் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட வரலாறும் நாம் அறிந்தது.

இந்த வரலாற்றுப் போக்கில்தான் தோழர் விஷ்வா தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைக்கு தமிழீழம்தான் சரியான வடிவம் ஆனால் இதற்கு ஒரு இடதுசாரித் தலமை அவசியம் என்பதை வலியுறுத்தி இதற்காக செயற்பட பிற்காலத்தில் இவரைத் தூண்டியிருக்கலாம் என்பது இந்தப் புத்தகத்தின் குறிப்புக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

சோவியத் யூனியன் சீனா என்று இரு சோசலிச முகாங்களின் தோற்றமும் சீனா சோவியத்திடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள அமெரிக்காவுடன் கூதல்காய புறப்பட்ட நிலமைகளும் ரொஸ்கியவாதிகளின் நான்காம் அகிலமும் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சனையை சிங்கள பௌத மாயக் கண்ணாடியூடு பார்க்க முற்பட்ட சிங்கள் இடதுசாரிகளின் பார்வையும் இதனை நியாப்படுத்த முற்பட்ட தமிழ் இடதுசாரிகளின் செயற்பாடும் தமிழ் குறும் தேசியவாதம் (சின்ன சோதி) செட்டியிலிருந்து ஆரம்பித்து பிரபாகரன் வரை வளர்ந்து இறுதியில் பாசிசம் என்ற நிலையிற்கு வளர்ந்து வர உதவிகரமாக அமைந்தது. இந்த போக்கை உள்வாங்கிய விசுவா தனக்காக வழியை தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஊடு செயற்படுத்த முற்பட்ட வரலாற்றை இந்தப் புத்தகம் பதிவு செய்திருக்கின்றது.

இதில் சீனசார்பு இடதுசாரிகள் தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய சமூக முரணப்பாடுகள் சாதிய ஒடுக்குமுறைகள் தர்மபுரத்து மலையக மக்களின் போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொண்டு களத்தில் நின்றது சண்முகதாசனிடம் இருந்து இவர்கள் விலச் செல்வதற்கு காரணமாகின. விசுவானந் தேவன் இடதுசாரிகளின் செல்வாக்கு மிகுந்த வடமராட்சிக் கல்லுவத்தில் அகரம் கற்கையிலேயே இவருக்கு சிவப்புக்களை மாமா என்றும் ‘கைவீச அம்மா கைவீசு கடைக்கு போகலாம் கைவீசு’ என்ற புத்தகங்களுக்கு பதிலாக சீனாவின் மக்கள் யுத்தத்தை தாங்கிய சிறிய சிவப்பு புத்தகங்களை அறிமுகப் புத்தகமாக அறியக் கூடிய வாய்பை பலவும் ஏற்பட்டேயிருந்தது. இது பல்கலைக் கழகத்தில் மாவோ என்று விளிக்கும் அளவிற்கு வஸ்தீரணம் ஆனது
உயர்கல்வியில் 1970 களின் பேராதனைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் சண்முதாசன் வழியிலிருந்து பிரிந்த உருவான ஜேவிபி இடதுசாரித் தீவிரவாதத்தின் செயற்பாடுகள் பற்றிய அவதானிப்புக்களும், வாழும் சூழலில் ஏற்பட்ட மலையக உழைக்கும் வர்க்கத்தின் புறச் சூழலும் விசுவானந்ததேவனை தமிழ் குறும் தேசியவாத்திலிருந்து தள்ளியே வைத்திருந்தது என்பதை ஒவ்வொரு காலத்திலும் விசுவாவுடன் பயணித்தவர்கள் தமது அனுபவப் பதிவுகளாக இந்தப் புத்தகத்தில் பதிந்து இருக்கின்றனர்.
தமிழ் நாட்டில் செயற்பட்ட மார்க்ஸ்சிச லெனிச(எம்எல்) செயற்பாட்டாhளர்களிடையே எனக்கும் நெருங்கிய பழக்கம் இருந்தது. இவர்கள் யாவரும் மாவோவின் சீனாவிற்கான கம்யூனிச சிந்தனையை அப்படியே இந்தியாவிற்குள் பொருத்திப் பார்பதில் அதிகம் கவனம் செலுத்தினர.; மொஸ்கோ சார்பு கம்யூனிஸ்ட்ஸடுகளும் இதே நிலையில் சோவியத் யூனியனை இந்தியாவிற்குள் இந்திய சூழலுக்கு புறம்பாக போட்டுப்பார்க்க முற்பட்டனர். இந்த அணுகு முறை இலங்கையில் செயற்பட்ட பாரம்பரிய இடதுசாரிகளுக்கும் பொருந்தியே இருந்தது. ஆனால்  சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுக்கள் சற்றுத் தீவிரமான செயற்பாட்டை எடுப்பது போல் தலைமறைவு வாழ்வையும் தனக்குள் கொண்டிருந்தனர். இந்திய ஆளும் வர்க்கத்தை தமது பிரதான எதிரியாக இனம்காட்டி செயற்பட்டுவந்தனர்.
இதன் காரணமாக இந்திய அரசுக்கு எதிராக செயற்படும் யாவரும் முற்போக்கானவரகள் சரியான செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலைப்பாட்டிற்குள் தம்மை சுருக்கிக் கொண்டனர். துமிழ்நாட்டில் செயற்படும் மா.லெ செயற்பாட்டாளர்கள் இந்தப் பார்வையுடனேயே ஈழவிடுதலை அமைப்புக்களை பார்க்க முற்பட்டனர் இந்தப் போக்கு பெரும்பாலும் 1985 களின் பின்பே அதிகம் வளர்சியடைந்திருந்தது. புலிகளின் பன்முகப்படுதப்பட்ட தன்மையை மறுத்தல் ஐக்கிய முன்ணிக்கு விரோதமான செயற்பாடு இதன் தொடர்சியான பாசிச் செயற்பாடுகளை ஒரு புறம் தள்ளிவிட்டு இவர்கள் ஒடுகப்படும் தேசிய இனம் ஒன்றிற்காக போராடும் முற்போக்கானவர்கள் இந்திய அரசின் மேலாதிகத்தை தகர்க்க முற்பட்வர்கள் என்ற பிழையான பரிதல்களுக்குள் மூழ்கிப் போயினர். இதே மாதிரியான ஒரு கருத்துப் போக்கு புலிகளிடத்தில் என்எல்எவரி இற்கு ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டதின் விளைவுகளை இந்தப் புத்தகம் விமர்சனப் பார்வையில் அணுகியும் இருக்கின்றது.
அதுவும் விஷ்வா போன்ற சீனச் சார்பு விடுதலை அமைப்பு புலிகளால் தடை செய்யப்பட்டும் இதன் உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டு சிறைப்பிடிகப்பட்டபின்னரும் இதனை கேள்விகளுக்கு உள்படுத்தாது தொடர்ந்தும் புலிகளை ஆதரித்து வந்தனர் வருகின்றனர் தமிழ் நாட்டின் மாவோயிஸ்ட்கள். புலிகளின் பாசிம் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை மாறாக இந்தி ஆளும் வர்கத்திற்கு எதிராக துப்பாக்கி தூக்கியவர்கள் என்ற புழகாங்கிதம் இவர்களின் கண்களை மறைத்துதுவிட்டன. வீரசந்தானம் போன்றவர்களே இதற்குள் வீழ்ந்துவிட்ட பரிதாபநிலை இருக்கின்றது. இதே போல் ஒரு காலகட்டத்தில் தேசியவிடுதலைப் போராட்டத்தில் புலிகளுடன் இணைந்து செயற்படவேண்டும் என்ற விசுவானந்ததேவனின் பாசறையில் வளர்ந்தவர்களின் நிலைப்பாடும் இதற்கான விசுவானந்த தேவனின் இணக்கப்பாடான செயற்பாடும் இவரின் முன்னாள் சகாகக்களால் கடுமையான விமர்சனங்களுக்குள் உள்ளாக்கபட்டு ஆரம்பத்தலேயே தடைபட்டது என்னமோ வரலாற்று உண்மையாகிவிட்டது.  இந்த விடயம் தமிழ்நாட்டு எம்எல்(M.L) குழுக்களிடையே புலிகள் பற்றி ஏற்பட்ட மயக்க நிலையை ஒத்ததாகவே பார்க்கப்படுகின்றது.

இவ்விடயத்தில் இந்திய ஆளும் வர்கத்துடனான முரண்பாட்டை நாம் எவ்வாறு சிறப்பாக கையாளுவது என்பதை நேபாள மார்க்ஸிட் கட்சி நோபள காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சியமைத்த பின்பு எவ்வாறு தமது உறவை இந்திய அரசுடன் ஏற்படுத்திக் கொண்டது, இதில் அவர்கள் எவ்வாறான தந்திரோபாயத்தை கடைப்பிடிக்கின்றார்கள் என்பதை நாம் பாடங்களாக கற்றுக் கொள்ளவேண்டும்.
மாக்ஸ் ஏங்கல்ஸ லெனின் மாவோ போன்றவர்கள் சோவியத் சீனா நாட்டில் பிரயோகித்து நடைமுறைகளை முற்று முழுதாக தமது நாடுகளில் அச்சொட்டாக பாவிக்காமல் தமது நாடுகளின் சூழலுக்கு ஏற்ப எவ்வாறு பாவித்து வெற்றி கொண்டார்கள் என்பதை வியட்நாம் தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்தும் கியூபாவிலிருந்தும் கற்றுக் கொள்ளவேண்டும்.

இந்தப் புத்தகத்தில் வரலாற்றில் தவறவிடப்பட்ட சில விடயங்களை என் சம்பந்தபட்ட அனுபவங்களில் இருந்து செழுமைப்படுத்த விரும்புகின்றேன்.
1.    பேராதனைப பல்கலைக கழகத்தில் 1982 ம் ஆண்டு தமிழ் மாணவர்களை இனவாத சிங்கள மாணவர்கள் தாக்க முற்பட்ட சம்பவத்திற்கு காரணிகளாக அமைந்ததில் ஒன்று வவுனியாவிலிருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தை பார்வையிட வந்த தமிழ்ச் சுற்றுலாப் பயணிகள் சுவரில் எழுதிவிட்டுச் சென்ற தனிநாட்டு(தமிழீழம்) இற்கு ஆதரவான விடயம். கூடவே சேரன் என்ற பெயருடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பத்மநாபா மலையகத்தில் மக்கள் மத்தியில் வேலை செய்யும் காலங்களில் பல இரவுகள் இந்த விடுதியில் தங்கியிருந்தது சிங்கள் மாணவர்கள் சிலருக்கு அரசல் புரசலாக தெரியும். அதாவது வெளியாட்கள் அதுவும் தனிநாடு கோரும் பிரிவனைவாதிகள் இவ்விடுதியை தமது தளமாக பாவிகின்றார்கள் என்பதும் இன்னொரு முக்கிய காரணியாவும் இருந்தது. கூடவே புத்தகத்தில் குறிப்பிட்ட விடயம் மாணவர் என்ற வகையில் பலராலும் இலகுவில் அடையாளப்படுத்தப்பட்ட விடயமாக இருந்தது நிதர்சனமான உண்மை. இந்த குறிபிட்ட மாணவன் இனவாத சிங்கள மாணவர்களிடம் இருந்து தப்பி ஓட முற்படுகையில் விழுந்த போது முன் கதவால் மெதுவாக நழுவ முற்பட்ட சேரன் தனது உயிருக்கு மிக ஆபத்து இருக்கும் என்று தெரிந்தும் திரும்பி வந்து காப்பாற முற்பட்ட சம்பவம். அப்போது ஒருவருக்கும் அவர் பத்மநாபா என்பது தெரியாது சிலருக்கு சேரன் என்று தெரியும்.

2.    மற்றயது சிவசண்முகமூர்த்தி கொலை இதனைத் தொடர்ந்த இறைகுமாரன் உமைகுமாரன் இன்பம் செல்வம் போன்ற படுகொலைகளை கண்டித்து றோணியோவில் துண்டுப் பிரசுரத்தை ஈழமாணவர் பொது மன்றம் வெளியிட்டும் இருந்தது. இதற்கான அச்சிடுதல் அன்றைய காலத்தில் யாழ்பல்கலைக் கழக கணித பீடத்தின் தலைவர் அலுவலகத்தில் உள்ள இயந்திரத்தினால் என்னால் பிரசுரிக்கப்பட்டது என்பதையும் பதிவு செய்ய விரும்புகின்றேன். ரெலோ மீதான் தடையை எதிர்த்து மானிப்பாயிலிருந்து யாழ் வரை அன்றைய புலிகளின் ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ‘காளியம்மா…’ என்ற கவிதையுடன் மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தியது வரை சகலவிதமாக கொலைகளையும் உட்கட்சிப் படுகொலைகளையும் கண்டித்தவர்கள் இதற்கு எதிராக செயற்பட்ட வரலாற்றை என்எல்எவ்ரி இற்கு அப்பாலும் நாம் உட்பட பல்வேறு அமைப்புக்களும் செயற்படுத்தின.

3.    1984 இல் நடைபெற்ற இடம் பெயர்ந்த மாணவர்களின் போராட்டத்தில் யாழ்பல்கலைக் கழக செயற்படும் குழு (இது மாணவர் அமைப்பிற்கு புறம்பாக விமலேஸ்வரன் தலமையில் செயற்பட்டது) இந்தப் போராட்டதை முன்னெடுத்தது. போராட்டம் நடைபெற்ற முழுநாட்களும் அச்சூழலில் இருந்தவன் நான் கலந்து கொண்டவன் எனக்கு இந்த போராட்டக்குழுவுடன் நெருக்கமான உறவும் இருந்தது இதில் குறிப்பாக இருவர் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் பாத்திரத்தை எடுத்ததும் இவர்கள் புலிகளுக்கு சகல தகவல் பரிமாற்றங்களையும் செய்தனர். புலிகளுக்கும் இந்தப் போராட்டக்குழுவிற்கும் நல்ல உறவு இருக்கவில்லை. இதற்கு காரணம் விஜிதரனின் சம்பவம் மற்றையது இந்த போராட்டக்குழுவிற்கு தலமைதாங்கிய விமலேஸ்வரனின் அரசியல் பின்புலம் போன்றவை ஆகும். எனது அமைப்பு சார்பில் இந்த செயற்குழுவுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருந்தேன். இந்த சாகும் வரை உண்ணவிரதத்தில் எமது பெண்கள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரும் ஈடுபடுத்தப்பட்டார். உண்ணாவிரதிகளை சாகவிடுவது என்பது அல்ல போராட்டக்குழுவின் திட்டம். கடத்தப்படுவதற்கு மறுதினம் இதனை நிறுத்தி தொடர்சியான வெகுசனப் போராட்டமாக பரிணாமம் அடைய வைப்பது என்பதுவே செயற்குழுவின் திட்டமாக இருந்தது. இது புலிகளுக்கு ஒவ்வாத விடயம் இதுவே அவர்கள் அடாவடித்தனமான கடத்தி ஒரு இயல்பாக உறுதியாக மேலெழுந்த வெகுஜனப் போராட்டதை மழுங்கடித்த பெருமை புலிகளையே சாரும்.

4.    வித்தியானந்தனின் பெரதெனியா விடுதி வார்டன் செயற்பாடும் அரிசிக் களவும் கால ஓட்டத்தில் யாழ்பல்கலைக் கழக தலைவர் பட்டத்தையும் குறிப்பிட்டு ‘அரசன் எவ்வழியோ அவ்வழியே மக்கள்’ என்றும் பெரதெனியாவிற்கும் யாழ்பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான விடயத்தை கொச்சைப்படுத்தி ஒப்பிட்டது என் பார்வையில் கண்டனத்திற்குரியது. இது ஒருவகை நிலப்பிரவுத்துவ சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். இதன் முதலாவது தலைவராக கைலாசபதி இருந்தததையும் இங்கு நினைவு கூறல் வேண்டும். 1980 நடுப்பகுதிவரை பல மாணவ எழுச்சிப் போராட்டங்களை உருவாக்க காரணமாவும் அவற்றில் பல போராட்டங்களை முன்னிட்டு நடத்தியதும் யாழ் பல்கலைக் கழகம் ஆகும். இங்கு நிலவிய பன்முகப்படுத்தப்பட்ட தன்மை 1980 களின் நடுப்பகுதியில் புலிகளின் ஏகபோக செயற்பாட்டினால் உறைநிலைக்கு போனது உண்மையே. ஏன் அண்மைய கண்டி நடனப் பிரச்சனைக்கு சில தினங்களின் பின்பு யாழ் பல்கலைக் கழகம் சென்ற போது இனங்களுக்கிடேயான சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பெரும்பாலான மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட சுவரொட்டிகள் பல்கலைக் கழகத்திற்குள் ஒட்டப்பட்டிருந்ததையும் என்னால் காண முடிந்தது. உண்மையில் பெரதெனியா பல்கலைக் கழகத்தை விட கொழும்பு பல்கலைக் கழகம் பேரினவாத்திற்கு எதிரான பல முற்போக்கான போராட்டங்களை அதுவும் ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுத வடிவில் பரிணமித்த காலங்களில் அதிகம் செய்தது என்பதுவும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியவையே.

இலங்கையில் இருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒருபக்கத்து வரலாற்றை அனுபவங்களின் அடிப்படையில் பதிவு செய்திருக்கும் ஒரு முக்கிய ஆவணமாக பார்க்கலாம் இந்த புத்தகத்தை. சீனசார்பு இடதுசாரிகளில் ஒரு பிரிவினர் சிவசேகரம் உட்பட தமிழ் மக்கள் மத்தியில் வாழும் பாசிச செயற்பாட்டிற்கு துணைப் போனவர்களாகவும் புலிகளின் பாசிசத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் இருக்க மறுபுறத்தில் புலிகளின் இந்த போக்க=கை தமது உயிர்களையும் அர்பணித்து இன்றுவரை விடாப்படியாக அமபலப்படுத்துபவர்களாகவும் இருக்கும் இணையாத இரு கோடுகள் ஒரு புள்ளியிலிருந்து இருந்து உருவானது எவ்வாறு…? என்பது ஆய்வுக்குள் உள்படுத்தப்படவேண்டிய ஒரு விடயம்.

பல்வேறு இடதுசாரி அமைப்புக்களின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த அனுபவம் மிக்க தோழர் விஷ்வா தனது மரணத்தின் பின்பு தான் சார்ந்த அமைப்பின் முழுமையான செயற்பாட்டின் தன்மையை இழக்கும் ஒருசில நிலையிலேயே அவ் அமைப்பை விட்டுச் சென்றுள்ளார் என்பது அவர் புரட்சிகர தலமைகளை உருவாக்குவதில் தோற்றுவிட்டாரே என்பது எனது கேள்வியாகி இங்கு நிற்கின்றது. இவரின் அரசியல் பாதையில் நீண்டகாலம் பயணித்த பலரும் இந்தப் புத்தகத்தில் செயல் இழந்து போன என்எல்எவ்ரி, பிஎல்எவ்ரி போன்ற அமைப்புகளின் தற்போதைய நிலையை எடுத்தியம்பி இருப்பதை நான் இங்கு எனது கருத்திற்கு வலுச் சேர்பதற்கு எடுத்துக் கொள்கின்றேன்.
தமிழ் பிரதேசம் எங்கும் வியாபித்திருந்து பாசிசம் பல்வேறு அமைப்புக்களைத் துவஷம் செய்திருந்தாலும் மீண்டும் தழைப்பது போன்று எழுந்து நிற்க முயலும் நிலையில் விஷ்வாவுடன் பயணித்த நல்ல தோழர்களை, போராளிகளை மட்டும் தனியே விட்டுச் சென்றிருக்கின்றது என்ற உணர்வுகள் எனக்குள் இல்லாமல் இல்லை இவர்கள் எமது சமூகத்தில் உசாத்துணை நூல்கள் போன்று செயற்படும் மகத்தான ஆவணங்களுக்கு அப்பால் தலமை கொடுக்கும் பண்புகள் நிறைந்தவர்கள்.

இந்த 30 வருட காலக் கடப்பிலும் அமைப்பு வடிவம் பெறாத இவர்கள் விஸ்வாவின் சிந்தனைக்கு உருவம் கொடுத்து அமைப்புருவாக்கத்தை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன். தனிநபர்கள் அல்ல ஸ்தாபனமே எப்போதும் பலமானது என்பதை மற்றய எவர்களையும் விட நிறையவே புரிந்துகொள்ளும் பாசறையிலிருந்து வந்தவர்கள் நீங்கள் இதனை செயலூக்கத்துடன் செய்வீர்கள் என்று நம்புகின்றேன் 25 பேர் கூடி இழுந்த இந்தத் தேர் வீதிவலம் வந்து தனது முழுமையான ஓட்டத்ததை நிறைவு செய்யும் என்று நம்புகின்றேன். இதில் கரம் கொடுக்க நாமும் என்றும் உங்களுடன்.