தோழர் வி.ஏ. கந்தசாமி -25 வது நினைவு தினம் 

இலங்கை நாட்டில் வட பிரதேச கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவராக விளங்கியிருந்த, “வீ.ஏ.” என தோழர்களால் அன்பாக அழைக்கப்படும் தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் மறைந்து 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. தலைசிறந்த இடதுசாரி பேச்சாளர்களுள் ஒருவராக திகழ்ந்திருந்த தோழர் கந்தசாமி அவர்கள் வட-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் சேவையாற்றியிருந்தமை பலரிற்குத் தெரிந்திராதது.

வலிகாமத்தைச் சேர்ந்த சுதுமலைக் கிராமத்தில் மிக வறிய குடும்பமொன்றில் பிறந்த தோழர் வீ.ஏ கந்தசாமி அவர்கள் குடும்ப வறுமை காரணமாக அய்ந்தாம் வகுப்புடன் பாடசாலைப் படிப்பை முடித்திருந்தார். அதன் பின்னர் சுருட்டுத் தொழிலாளியாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த தோழர் கந்தசாமி, அக்காலத்தில் சுருட்டுத் தொழிலாளர்கள் முதலாளிகளால் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்படுவதனைக் கண்டு அத்தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி பல்வேறு சம்பள உயர்வுப் போராட்டங்களை முன்னெடுத்ததின் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கத் தலைவராக பரிணமித்தார்.

இக்கால கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதுமல்லாமல், அக்கட்சியுடன் இணைந்தும் செயலாற்றினார். அச்சமயம் தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் என சமூகத்தின் நலிந்த பிரிவினரோடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அதேவேளை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டதாலும் அவற்றின் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டும், மார்க்ஸிய – லெனினிஸ புத்தகங்களைக் கற்றதின் மூலமும் சுரண்டலுக்குள்ளான தொழிலாளர்கள் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்கள் எனப் பல்வேறு தரப்பினர்கள் மத்தியில் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், கிராமம் கிராமமாக அரசியல் வகுப்புக்களையும் நடாத்தினார். அம் மக்கள் மத்தியிலிருந்து பல இளைஞர்களை இனங்கண்டு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைப்பதிலும் அயராது பாடுபட்டார்.

தோழர் வி.ஏ கந்தசாமி அவர்கள் அரசியல் கருத்துக்களை இலகு தமிழில் அழகுற எடுத்துரைக்கும் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கட்சிப் பத்திரிகைகளுக்கு எழுதியது மட்டுமல்லாமல,; தலைசிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி நிதிக்காக யாழ் நகர மற்றும் றிம்மர் மண்டபங்களில் தோழர் வீ.ஏ.கந்தசாமியின் சொற்பொழிவுகளை கட்டணம் செலுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கேட்கவருவதை அவருடைய சமகால தோழர்கள் இன்றும் நினைவு கூர்வர்.

வடபகுதியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வந்த தீண்டாமை கொடுமைக்கு எதிராக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி, அதன் தலைமையில், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததில் தோழர் கந்தசாமியும் முக்கிய பங்கு ஆற்றினார். 1966 ஆண்டு ஒக்டோபர் 21 ம் திகதி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தால் “சாதி அமைப்பு தகரட்டும். சமத்துவ நீதி ஒங்கட்டும்” எனும் கோஷத்துடன் சுன்னாகத்திலிருந்து யாழ்.முற்றவெளி நோக்கி உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட பிரசித்தி பெற்ற ஊர்வலத்தை தலைமை தாங்கி வழிநடத்திய சமயம், தோழர் கந்தசாமி பொலிசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர, அக்கால கட்டத்தில் வடபகுதியில் இடம்பெற்ற தொழிலாள விவசாய ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு சரியான தலைமைத்துவத்தை வழங்கி, அவர்களை வழிநடத்திச் சென்றவர்களுள் தோழர் கந்தசாமியும் ஒருவர்.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீன, ரஷ்யா சார்புக் கருத்துக்கள் பெரும்விவாதத்திற்குள்ளான சமயம், சோவியத் யூனியனின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்றிருந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் தோழர் வீ.ஏ கந்தசாமியும் ஒருவர். சோவியத் யூனியனில், அக்காலகட்டத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த தத்துவார்த்த வாதியாக திகழ்ந்த சுஸ்லோவ் அவர்களுடன் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு பற்றி பலமணிநேரம் விவாதத்தில் ஈடுபட்டு இலங்கை திரும்பியிருந்த தோழர் கந்தசாமி சீன சார்பு கருத்துக்களையே தேர்ந்தெடுத்து முன்னெடுத்து வந்தார்.

அவர் சோவியத் நாட்டுக்கு மட்டுமல்லாமல் பின்னர் அப்போது சோசலிச நாடாக விளங்கிய அல்பேனியாவிற்கும், பின்னர் மக்கள் சீனக் குடியரசிற்கும் அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளால் அழைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சீனாவிற்குச் சென்ற தோழர் கந்தசாமி சீனப்புரட்சியின் நாயகனாக விளங்கிய மாபெரும் தலைவர் மாவோ சேதுங் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் மாவோ சேதுங்கை நேரில் சந்தித்து கலந்துரையாடிய ஒருசில இலங்கையர்களில் தோழர் கந்தசாமியும் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.

1980 ம் ஆண்டு நாட்டின் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்ததின் காரணமாக பல்வேறு ஆயுதக்குழுக்கள் தோன்றின. அவற்றில் பல பாசிச தன்மைகொண்டதாகவும், ஜனநாயக மறுப்பையும், மாற்றுக் கருத்துக்களை அடக்கி ஒடுக்குவதாக மட்டுமல்லாமல் இடதுசாரி கருத்துக் கொண்டவர்களை ஆயுதங்களை கொண்டு படுகொலை செய்யும் கலாச்சாரமும் உருவெடுத்திருந்தது. குறிப்பாக புலிகள் இயக்கம், இடதுசாரி பிரமுகர்களையும் தொழிற்சங்க தலைவர்களையும் படுகொலை செய்வதில் முன்னின்று செயற்பட்டது. இக்காலகட்டத்தில் ஈழ மக்கள் புரட்சி கர விடுதலை முன்னணி மட்டும் பொதுவுடமைக் கருத்துக்களை முன்னெடுக்கும் அமைப்பாகவும், இடதுசாரிகளின் கொள்கைகளை அடியொற்றியதாக இருந்தது மட்டுமல்லாமல் சாதாரண கீழ்தட்டு மக்கள் மத்தியில் செயற்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் நோக்கில் அந்த இயக்கத்தின் அப்போதைய இராணுவத்தளபதியாகவும், தற்போது அமைச்சராகவும் விளங்கும் தோழர் டக்ளஸ் தேவானந்தா, தமது தோழர்களுக்கு அரசியல் வகுப்புக்களை நடாத்த முன்வருமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களின் இயக்கப் பாசறைகளில் தங்கியிருந்து அரசியல் வகுப்புக்களை தோழர் கந்தசாமி நடாத்திவந்தார். அவரது அரசியல் வகுப்புக்களில் கலந்து கொண்ட பலர் இன்றும் முன்னணித் தோழர்களாக விளங்குகின்றனர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களாக விளங்கிய தோழர்கள் பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தோழர் கந்தசாமியின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1985 ம் ஆண்டின் டிசம்பர் மாத நடுப்பகுதியில் புலிகள் ஈ.பி,ஆர்.எல்.எப் இயக்கத்தை தடை செய்வதாக கூறி அந்த இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடாத்திய சமயம் உரும்பிராய் காரியாலயத்தில் தங்கியிருந்த தோழர் கந்தசாமியும் புலிகளின் கைக்குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து மயிரிழையில் உயிர்தப்பினார். அவர் காயமடைந்த போதிலும் மனம் தளராது சக தோழர்களினதும், நண்பர்களினதும் சேமநலன்களை அறிவதிலும், அவர்களது குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும் தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் மூலம் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்ட சமயம், தோழர் கந்தசாமி அவர்கள் மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்;;பில் இணைந்து மக்களுக்கான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்துவதிலும், சமாதான சூழலை ஏற்படுத்தும் பொருட்டும் தோழர் பத்மநாபாவுடன் இணைந்து செயலாற்றினார். அக்காலகட்டத்தில் மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, மாகாண சபை உறுப்பினர்களுக்கு சிறந்த அரசியல் வழிகாட்டியாக விளங்கினார்.

1989 ம் ஆண்டில் புலிகள் அப்போதைய ஜனாதிபதி பிரேமதாசாவுடன் அண்ணன் தம்பி உறவு கொண்டாடியதை தொடர்ந்து, புலிகள் மீண்டும் இலங்கை அரசிடம் ஆயுதங்களைப் பெற்று ஜனநாயக அமைப்புக்களை மீண்டும் அழித்தொழிக்க முற்பட்ட வேளை இந்தியாவிற்குச் சென்ற தோழர் கந்தசாமி 1992 ஆம் ஆண்டு தனது 68 வயதில் மாரடைப்பால் காலமனார். அவரது இறுதிக் கிரியைகள் தமிழ் நாட்டிலுள்ள புழல் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நீண்ட பிரேத ஊர்வலத்துடன் நடைபெற்றது. இறுதிக்கிரியைகளின் போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள், தோழர் எஸ்.சுபத்திரன் (றொபேட்) தலைமையில் உணர்வுப+ர்வமாக அணிவகுப்பு மரியாதையை செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது..

தோழர் கந்தசாமி இந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுடில்லி, போன்ற இடங்களுக்குச் சென்று, அங்குள்ள பிரபல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியதும் குறிப்பிடத்தக்கது.

இத்தனை பெருமைகள் பெற்றிருந்த தோழர் வீ.ஏ.கந்தசாமி அவர்கள் இறக்கும் வரையில்; வங்கிக் கணக்குகள் ஏதுமற்ற ஒரு அரசியல்வாதியாகவே இருந்திருந்தார்.

இலங்கை இடதுசாரி அரசியல் வரலாற்றில் வீ.ஏ. என தோழமையுடன் அழைக்கப்படும் தோழர் கந்தசாமியின் பெயரும் அழியாது இடம்பெறும். இலங்கை அரசியலில் உள்ள இடதுசாரி சிந்தனையுள்ள பல அரசியல் தோழர்களுக்கு தோழர் வீ.ஏ.கந்தசாமி அவர்கள் இன்றும் ஆதார்சபுருஷராக திகழ்ந்து வருகின்றார். இவர்களாலும், இலங்கையிலுள்ள வறிய ஏழை மக்களாலும் தோழர் வீ.ஏ.கந்தசாமி என்றும் நினைவு கூரப்படுவார்.