நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா?

மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டிருந்தார் என்றால் ஒரே ஒரு உரையின் மூலம் அவரே, அந்த பெயரில் 90 சத வீதத்தைக் களங்கப்படுத்திக் கொண்டார் போல்தான் தெரிகிறது.

ஊழலை ஒழித்து, ஊழலற்ற ஜனநாயக நாடொன்றை உருவாக்குவதாகத் தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பெரும் கோஷத்தை எழுப்பினர்; நல்லாட்சியே அவர்களது பிரதான கோஷமாக இருந்தது. எனவேதான், தற்போதைய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என அழைக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதியின் மேற்படி உரையை அடுத்து இந்த அரசாங்கத்தைத் தொடர்ந்தும் நல்லாட்சி அரசாங்கம் என அழைக்க முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காகவென தமது அரசாங்கமே உருவாக்கிக் கொண்ட மற்றும் பலப்படுத்திக்கொண்ட நிறுவனங்களையே அவர் கடந்த 12 ஆம் திகதி மேற்படி உரையின் மூலம் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதாகக் குற்றம்சாட்டினார். ஆனால் இரகசிய பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகிய நிறுவனங்கள் அரசியல் நோக்கத்துடன் சிலரை இம்சிப்பதாகத் தாம் கூறியதை இன்று வரை அவர் நிரூபிக்கவில்லை.

இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, இந்த நிறுவனங்கள் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதாகக் கூறியதற்குப் புறம்பாக அவர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமைக்காக இந்த நிறுவனங்களின் அதிகாரிகளைப் பகிரங்கமாகவே ஜனாதிபதி குறைகூறியிருந்தார். அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டமை குறித்துத் தமக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் அதிகாரிகளைச் சாடினார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கியமை தொடர்பான வழக்கு விடயத்தில் கைது செய்யப்பட்ட சில இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 16 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றவாளிகளாயின் அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இவற்றை வெளியில் கூறுவதைப் போலவே, இவை தொடர்பாக வெளிப்படையாகவே நடவடிக்கை எடுக்கவும் தாம் பின்வாங்கப்போவதில்லை எனவும் அவர் மிகக் கோபத்துடன் கூறினார்.

இப்போது ஜனாதிபதியின் இந்த உரைக்காக அவரை நோக்கி மலர் மாலைகளும் கல்வீச்சுக்களும் வந்த வண்ணமே இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இந்த உரையினால் தெம்பூட்டப்பட்டுள்ளனர்; குதூகலமடைந்துள்ளனர். தமது அணியினருக்கு எதிராகப் பொலிஸாரும் இலஞ்ச ஆணைக்குழுவும் அரசியல் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும் தமது அணியினரை விசாரித்து வருவதாகவும் நீதிமன்றங்களில் அலைக்கழிப்பதாகவும் தாம் கூறி வந்ததையே இப்போது ஜனாதிபதியும் கூறுகிறார் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிறுவனங்கள், அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக இருந்தால் அது யாருடைய அரசியல் நோக்கம் என மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியிருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சியையே ஜனாதிபதி குற்றம் சாட்டுகிறார் எனக் கூறி ஐ.தே.க தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக இருக்கிறது என்பதும் தெளிவானதாகும்.

இதேகேள்வியை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவும் எழுப்பியிருந்தார். ஆனால், அதில் அரசாங்கத்தின் தலைவர்களுக்கிடையே பிணக்கை ஏற்படுத்தும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், ஜனாதிபதியின் கூற்றை அடுத்து எவர் மனதிலும் ஏற்படும் ஒரு சந்தேகமாகவே ம.வி.மு தலைவர் அக் கேள்வியை எழுப்பியிருந்தார்.

ஜனாதிபதியின் கருத்து நம்பவும் முடியாத ஒன்றாக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இது அவர் தமது மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு வெளியிட்ட கருத்து என்பது தெளிவானதாகும். ஆனால் அந்தக் கருத்தைத் தாம் பாராட்டுவதாகக் கோட்டாபய ராஜபக்ஷ வெளிப்படையாகவே கூறியிருந்தார். வெளிப்படையாகவே நடவடிக்கை எடுக்கவும் தாம் பின்வாங்குவதில்லை என ஜனாதிபதி கூறியதைப் போல் செய்தும் காட்ட வேண்டும் என முன்னாள் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் 16 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோபத்துடன் கூறியதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்திருந்தார். இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் குற்றச்சாட்டுகளின்றி 16 மாதங்கள் தடுத்து வைக்கப்படுவது தவறென்றால் தமிழ் அரசியல் கைதிகள் 16 வருடங்கள் குற்றச்சாட்டுகளின்றி தடுத்து வைக்கப்படுவது எவ்வாறு அனுமதிக்க முடியும் என சுமந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்த்து, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தப் பல சிவில் அமைப்புக்கள் பெருமளவில் உழைத்தன. ‘புரவெசி பலய’ மற்றும் ‘நீதியான சமூகத்திற்கான இயக்கம்’ ஆகியன அவற்றில் முதன்மையான அமைப்புக்களாகும். ஊழலற்ற சமூகம் ஒன்றை உருவாக்குவதற்காகவும் நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்காகவுமே அவ்வமைப்புக்கள் மைத்திரிபாலவை ஆதரித்தன. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை ஜனாதிபதியே விமர்சித்ததை அடுத்து அவ்வமைப்பினர்கள் கடும்சினம் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் சிலர் ஜனாதிபதியின் இந்த உரைக்காக மிக பாரதூமான வார்த்தைகளைப் பாவித்தும் அவரை விமர்சித்தும் இருந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கும் இந்தச் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெறவிருந்தது. ஆனால், ஜனாதிபதியின் இந்த உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவ்வமைப்புக்களின் தலைவர்கள் அந்தக் கூட்டத்தைப் பகிஷ்கரித்தனர். மைத்திரிபாலவின் உரைக்கு தெரிவிக்கப்பட்ட மிகக் கடுமையான எதிர்ப்புகளில் இது ஒன்றாகும்.

அதனை அடுத்து, இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான தில்ருக்ஷி விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை தமது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். ஜனாதிபதியின் உரைக்கு எதிரிப்புத் தெரிவித்தே அவர் தனது இராஜினாமாக் கடிதத்தை அனுப்பினார் என்று கூறுவதற்கு இக்கட்டுரை எழுதப்படும் நேரம் வரை ஆதாரங்கள் இருக்கவில்லை. ஆனால், ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவர் தமது பதவியை இராஜினாமா செய்யப் போகிறார் என்ற செய்தி ஏற்கெனவே பரவியிருந்தது.

அதேவேளை, அவர் வேறு காரணங்களுக்காகத் தமது பதவியை இராஜினாமாச் செய்திருந்தால் அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. ஏனெனில் இச்சந்தர்ப்பத்தில் அவர் எதற்காக இராஜினாமாச் செய்திருந்தாலும் அவர் ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இராஜினாமாச் செய்ததாகவே நாடு ஏற்றுக் கொள்ளும்; அது ஜனாதிபதியை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும்.

உண்மையில், ஜனாதிபதியின் இந்த உரை எவரும் எதிர்பாராத ஒன்றாகும். தாம் இதைப் பற்றி ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என ராவயப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன் கூறியுள்ளார். இவரைப்போன்றே நாட்டில் பெயர் பெற்ற அரசியல் ஆய்வாளர்கள் பலர் கூறிய போதிலும் அவர்களும் உண்மையிலேயே இதனை எதிர்ப்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. அதேவேளை இந்தக் கூற்றில் வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா? என்பதும் இன்னமும் தெளிவாகவில்லை.

ஐ.தே.கவுக்கும் மைத்திரிபாலவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கத்தின் பேரில் இரு கட்சிகளினதும் கூட்டாட்சியொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ள போதிலும், இக் கட்சிகளுக்கிடையில் உண்மையிலேயே இருக்கும் பிளவையே இது காட்டுகிறது எனவும் பலர் கூறுகின்றனர்.

அதில் எந்தளவு உண்மை இருக்கிறது என்பது தெளிவில்லை. ஆயினும் நம்ப வேண்டியவர்கள் அதனை நம்பக் கூடிய விதத்தில்தான் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் ஆலோசனைப்படி செயற்பட வேண்டியவர்தான் பிரதமர். ஆனால் ஆளுமை வித்தியாசங்களின் காரணமாகவோ என்னவோ தற்போதைய பிரதமர் சுதந்திரமாகச் செயற்பட்டு வருகிறார். எனவே, தமது அதிகாரத்தை ஐ.தே.க தலைமைக்கு எடுத்துரைப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு ஒரு போடு போட்டுள்ளார் என்றும் கருதலாம்.

ஆனால், அதன் விளைவு பாரதூரமானதாகவே இருக்கும் எனக் கருதலாம். அதேவேளை, அவரது கருத்துச் சரியானது எனவும் ஏற்றுக் கொள்ள முடியாது. இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை தற்போது அனேகமாகக் கடந்த அரசாங்கத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் செய்ததாகக் கூறப்படும் குற்றச் செயல்களையே விசாரித்து வருகின்றனர். அவற்றில் எந்தக் குற்றச்சாட்டும் அரசியல் நோக்கம் கொண்டதாகத் தெரியவில்லை.

உண்மையிலேயே மைத்திரிபாலவினாலும் ஐ.தே.கவினராலும் முன்னாள் ஆட்சியாளர்கள் தேர்தல் காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபா மோசடி செய்ததாகவே குற்றம்சாட்டப்பட்டனர். ஆனால் அவ்வாறு குற்றம் சாட்டியவர்கள் பதவிக்கு வந்ததன் பின்னர் முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிராகச் சிறுசிறு குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதாகவும் அவை தொடர்பான விசாரணைகள் அநாவசியமாக இழுத்தடிக்கப்படுவதாகவுமே இதுவரை குற்றம் சாட்டப்பட்டு வந்தது. எனவே, முன்னாள் ஆட்சியாளர்களின் தேவைப்படியே விசாரணைகள் நீண்ட காலமாக தாமதப்படுத்துப்பட்டு வருகிறதேயல்லாது ஜனாதிபதி கூறுவதைப் போல் அரசியல் நோக்கத்துடன் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகத் தெரியவில்லை. அந்த நோக்கத்துடன் அந்நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்படவுமில்லை.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் கடற் படை தளபதிகளும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகப் பெரும் பங்கை ஆறினர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் பொலிஸார் அவற்றை விசாரிக்கக் கூடாதா? அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை பிழையென ஜனாதிபதி கூறுகிறார். இது என்ன சட்டமாக இருக்கலாம்? இது என்ன நல்லாட்சியாக இருக்கலாம்? ஒருவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்படுமேயானால் அந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்காமல் என்ன செய் வது? அதற்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படாமல் எவ்வாறு வழக்கு விசாரிக்கலாம்?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் கடற்படைத் தளபதிகள் தொடர்பான விசாரணைகளைப் பற்றித் தமக்கு அறிவிக்கவில்லை என ஜனாதிபதி விசாரணைகளை மேற்கொள்ளும் மேற்படி நிறுவனங்களின் அதிகாரிகளைச் சாடுகிறார். ஜனாதிபதிக்கும் அந்த விசாரணைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? விசாரணை நடத்தும் நிறுவனங்கள் சுயாதீன நிறுவனங்களாக இருப்பின் அவை ஜனாதிபதிக்குத் தமது விசாரணைகளைப் பற்றி அறிவிக்கவே தேவையில்லை. அவ்வாறு அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி கூறுவாரேயானால் அவை தொடர்ந்தும் சுயாதீன நிறுவனங்களாகக் கருத முடியாது.

போருக்குத் தலைமை தாங்கியவர்கள் என்பதற்காக சட்ட விவகாரங்களின் போது சிலர் விடயத்தில் மிருதுவாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கூற முடியாது. அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றுதான் மஹிந்த அணியும் வாதாடுகிறது. ஆனால் மஹிந்த பதவியில் இருக்கும் போது ஆதாரமே இல்லாத குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எவ்வாறு கவனிக்கப்பட்டார் என்பது நாடே அறிந்த விடயமாகும்.

போரின் போது நாட்டுக்கு பெரும் சேவை செய்தார்கள் என்று தான் ஜனாதிபதி மேற்படி நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை தவறு என்கிறார். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்திருந்தால் இந்தப் போர் வீரர்கள் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் எதற்கும் இலக்காதவராக இருந்தாலும் மைத்திரிபாலவை என்ன செய்திருப்பார்கள்?

அதேபோல் கோட்டாபய அதிகாரத்தில் இருக்கும் போது போர் வெற்றிக்காக முக்கிய பங்காற்றியவர்களை என்ன செய்தார்? போரின் போது முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆற்றிய பங்கை விடக் கூடுதலான பங்கை ஏனையவர்கள் ஆற்றினார்கள் என்று கூறலாமா? அவ்வாறான பொன்சேகாவுக்கே மஹிந்த, கோட்டாபய ஆகியோர் என்ன செய்தார்கள்? அவர் சிறையிலடைக்கப்பட்டு அவரது ஓய்வூதியம், பதக்கங்கள், இராணுவ வரலாற்றில் அவரது பெயர் ஆகியன அனைத்தும் பறிக்கபப்பட்டன.

சட்டம் என்று வரும் போது அது சாதாரண மக்களுக்கும் படை வீரர்களுக்கும் படை அதிகாரிகளுக்கும் மதகுருமாருக்கும் வித்தியாசமாக செயற்படுவதில்லை. சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டம் சமமாக செயற்படவில்லை என்பது ஜனாதிபதி மைத்திரிபாலவினதும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலின் போது ஆதரவு வழங்கியோரினதும் பிரதான குற்றச்சாட்டாகியது. அவ்வாறிருக்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கும் சட்டத்தின் முன் சிறப்புரிமை வேண்டும் என்று ஜனாதிபதியே கூறுவது பொருத்தமாகாது. எனவே, அவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தியமை தவறு என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பாதுகாப்புத் துறையினர் தொடர்பாக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளைப் பற்றித் தமக்கு அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி, இரகசிய பொலிஸ், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை இந்த உரையின் மூலம் பணிக்கிறார். எந்தச் சட்டத்தின் அடிப்படையில் அவ்வாறு ஆணைக்குழுக்கள் ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும்? அவ்வாறு அறிவிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது நீதித்துறையில் தலையிடுவதாக அமையாதா?

ஜனாதிபதியின் இந்த உரை நிச்சயமாகச் சட்டம் ஒழுங்குத்துறையை பாதிக்கவே செய்யும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தாம் சுயாதீனமானவர்கள் என்று எண்ணிச் செயற்பட்ட இத்துறையின் அதிகாரிகள், இனி ஜனாதிபதியிடம் அடி வாங்கிக் கொள்ளக்கூடாது என்ற அச்சத்துடன் செயற்படும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

(எம்.எஸ்.எம். ஐயூப்)