நாகாலாந்து பிரச்சினை: ஜேபி தந்த பாடம்

மத்திய அரசுக்கும் ‘நாகாலாந்து சோஷலிஸ்ட் கவுன்சில்’ (என்எஸ்சிஎன்-ஐஎம்) அமைப்புக்கும் இடையில் 2015 ஆகஸ்ட் 3-ல் கையெழுத்தான கட்டமைப்பு ஒப்பந்தம் குறித்து பக்கம் பக்கமாக பலரால் விமர்சனங்கள் எழுதப்பட்டுவிட்டன. அந்த ஒப்பந்தம் நாகா மக்களிடையே நம்பிக்கையை அதிகப்படுத்தியது. அதேசமயம், பக்கத்தில் உள்ள அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் லேசான கலக்கத்தையும் ஏற்படுத்தியது. அதில் நியாயமும் உண்டு. ஏராளமான அம்சங்களைக் கவனத்தில் கொண்டு பரிசீலித்து, அதன் பிறகு மாநிலங்களின் எல்லைகளும் பரப்பளவும் தீர்மானிக்கப்பட்டு மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, அதில் மாறுதல் என்றால் சற்றே பதற்றமும் அமைதியின்மையும் ஏற்படுவதற்கு இடமுண்டு. எல்லைகள் மாறும் என்பது மட்டும்தான் பிரச்சினையா, வேறு உண்டா என்றும் பார்க்க வேண்டும்.

நாகர்களிலேயே நன்கு படித்தவர்களும் விவரம் தெரிந்தவர்களுமான ஒரு பிரிவினர், ‘இந்தக் கட்டமைப்பு ஒப்பந்தத்தை ஏன் இவ்வளவு ரகசியமாக வைத்திருக்க வேண்டும், வெளிப்படையாக விவாதித்து முடிவுசெய்யலாமே?’ என்கின்றனர். இன்றும்கூட நம்மை ஆட்சிசெய்வது ‘பணநாயகம்’தானே தவிர, எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் ஏழைகள் அல்ல. எனவே, வெளிப்படையாக விவாதிப்பதுதானே ‘ஜனநாயகம்’ என்பவர்கள் எந்த ‘நாயகத்தை’ப் பற்றிப் பேசுகிறார்கள்? நாகர்களின் இருப்பு பற்றிய நெருக்கடியை, இந்தக் கட்டமைப்பு பற்றிய விவாதங்கள் தீர்த்துவிடுமா? எனக்கு இதில் நம்பிக்கையே இல்லை.

என்எஸ்சிஎன்-ஐஎம் என்றாலே நாகாலாந்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள். ஏனென்றால், இதன் தலைவர் மணிப்பூரைச் சேர்ந்த தங்குல் நாகர். நாகாலாந்து நாகர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு தங்குல் நாகர் யார் என்று சமூக வலைதளங்களில் கேட்கின்றனர். அதேசமயம், அவர் ஏன் பேசக் கூடாது என்று எதிர்க் கேள்வியும் கேட்கத் தோன்றுகிறது. தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களைத் துப்பாக்கியால் சுட்டு, வாயை அடைப்பது என்எஸ்சிஎன்-ஐஎம்மின் வழக்கமாக இருந்தது. அமைதிக்கான நடைமுறையைக் கையாள உருவாக்கப்பட்ட ‘நாகா சமரச அரங்கு’ போன்றவற்றையும்கூட செயல்பட முடியாமல் அவர்கள் தடுத்தனர். அதேசமயம், மத்திய அரசிடமிருந்து தங்களுக்குக் கவுரவமான தீர்வு ஏற்பட நாகர்கள் இடைவிடாமல் முயற்சிகளை மேற்கொண்டுவருவதையும் பாராட்டியாக வேண்டும். இந்திய அரசிலும் நாகர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதில் வெவ்வேறு படிநிலையில் உள்ள அதிகாரிகளிடையே வெவ்வேறு விதமான விருப்பு-வெறுப்புகள் உண்டு. பாதுகாப்பு அமைச்சகத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் பலர், நாகர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்று கேட்டுப் புரிந்துகொள்ளக்கூட தயாரில்லை.

ஜேபி தந்த பாடம்

‘லோக் நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் இந்திய ஜனநாயகத்துக்கே பெருமை சேர்க்கும் தலைவர்கள். நாகாலாந்தின் குறுக்கிலும் நெடுக்கிலும் பயணித்து அவர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு ‘நாகாலாந்தில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகள்’. நாட்டில் அரசியல் ஒற்றுமை ஏற்படுவதற்கு முன்னால், வெவ்வேறு மக்கள் குழுக்களிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று முதல் முறையாக வலியுறுத்திய தேசியத் தலைவரும் அவர்தான். நம் நாட்டுக்கு ‘இந்தியா’ என்ற பெயர் வருவதற்கு முன்பிருந்தே நாட்டின் கிழக்குப் பகுதியில் இந்தப் பழங்குடிகள் வசித்துவருவதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்போதும்கூட இம்மக்கள் நாட்டின் பிற பகுதிகளில் நிலவும் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடவில்லை, தங்களுடைய தனித்தன்மையை இன்னமும் தொடருகின்றனர்.

எல்லாப் பிரச்சினைகளையும் இந்திய அரசியல் சட்டப்படிதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடிக்காமல், காரிய சாத்தியமான வழிகளைக் கையாளுங்கள் என்று டெல்லியில் உள்ள எஜமானர்களைக் கேட்டுக்கொள்ள நாகர் மக்கள் குழுத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் அடிக்கடி வந்துசெல்கின்றனர். மேகாலயத்தைச் சேர்ந்த காசி தலைக்கட்டுகள், மணிப்பூர் மகாராஜா, திரிபுராவை ஆண்ட மன்னர் ஆகியோரைப் போல தங்களுடைய பிரதேசத்தை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் தாங்கள் எப்போதும் கையெழுத்திட்டதில்லை என்பதை நாகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தங்களின் பங்களிப்பு இல்லாமலேயே உருவான அரசியல் சட்டத்துக்கும் தங்களால் கட்டுப்பட முடியாது என்றும் கூறுகின்றனர். நாகர்களின் நிலை இப்படியிருக்கும்போது அவர்களுடன் சரிக்கு சரியாக அமர்ந்து பேசி, விருந்துண்டு இணக்கமான உடன்பாட்டைக் காண ஜெயப்பிரகாஷ் நாராயணைப் போன்ற ராஜதந்திரி இப்போது யாருமே இல்லை.

தனிமைப்படுத்திக்கொள்வது தவறு

அதேவேளையில், இதர இந்தியர்களுடன் தாங்களும் நெடுந்தொலைவு பயணப்பட்டுவந்துவிட்டதை நாகர்களும் ஒப்புக்கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் இணக்கமாகப் போகும் அம்சங்கள் பல இருக்கின்றன. எனவே, அரசியல்ரீதியிலான கர்வங்களை விட்டொழித்து நாகர்களின் அடுத்த தலைமுறையின் நலனைக் கருத்தில்கொண்டு அரசுடன் பேச வேண்டும். தாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக இத்தனைக் காலம் கருதிவந்த நாகர்கள் மெல்ல மெல்ல அந்த உணர்வைக் குறைத்துக்கொண்டுவிட்டனர். இந்தியாவை எதிரியாகப் பார்த்த பார்வையும் மாறிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் சார்பில் அவர்களுடன் பேச்சு நடத்தும் ஆர்.என். ரவி, நாகர்களின் அனைத்து தரப்பினரிடமிருந்து வரும் யோசனைகளையும் பரிசீலிக்கிறார், கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார், சுமுகமாகப் பழகுகிறார்.

பரஸ்பரம் மரியாதையுள்ள இந்தச் சூழலில்தான் ஒப்பந்தத்துக்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறார் ரவி. எதிர்தரப்பு வாதத்தைக் கேட்க மாட்டேன் என்று தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதும், எதற்கும் ஒத்துவராமல் தட்டிக்கழிப்பதும் நாகர்களுக்கு எந்த நன்மையையும் ஏற்படுத்திவிடாது. அரசியல் சட்ட அடிப்படையில்தான் சமாதான ஒப்பந்தம் என்கிறது அரசு. ஆனால், இதற்கெல்லாம் பன்மைத்துவம்தான் அடிக்கல்லாகத் திகழ முடியும். இந்தியா போன்ற நாட்டில் எத்தனையோ மொழிகள், இனங்கள் இணக்கமாக வாழ்வதைச் சுட்டிக்காட்டி நாகர்களையும் இணங்கச்செய்வதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். அவர்களுடைய அச்சங்களை நீக்கி, நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும். அதுவே தீர்வுக்கு வழிவகுக்கும்!

– பேட்ரீசியா முகிம், ‘தி ஷில்லாங் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர்

தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.