நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள்

இவ்வளவுநாட்களாக மோடி அரசு பணமதிப்பு நீக்கம் ரிசர்வ் வங்கியின் முடிவு என்று சொல்லிவந்தது. இப்பொழுது ரிசர்வ் வங்கி இது அரசின் முடிவு என்கிறது. இது நான் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று வெளியில் செல்வதற்கு கூட தைரியமற்ற பிரதமர் தான் 56″ நெஞ்சு பற்றி (தற்)பெருமை பேசுகிறார். கோடிக்கணக்கான மக்களை ,ஒரு தேசத்தின் பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய முடிவை எவ்வித பொறுப்பும்,சிந்தனையும் இல்லாமல் மக்கள் அடையக்கூடிய இன்னல்கள்,தேசத்திற்கு ஏற்படக் கூடிய இழப்பைப் பற்றி எவ்வித அக்கறையும்,புரிதலும் இல்லாமல் சம்பந்தப்பட்ட அமைப்பை ,பொருளாதார நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட ஒரு முடிவை இந்தியா மட்டுமல்ல இன்று உலகமே விமர்சிக்கிறது.

இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய ரிசர்வ் வங்கி கவர்னர், அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் , நிதித்துறை செயலாளர், வங்கிச் செயலாளர் ஆகியோர் வாய் திறக்க மறுக்கிறார்கள்.ஏனென்றால் அவர்களிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. தவறுக்குப் பொறுப்பேற்க அவர்கள் தயாராக இல்லை.

இதைவிடவும் மோசம் பணமதிப்பு நீக்கம் தொடர்பாக ஒரு கேபினட் நோட் கூட கிடையாது

. 1%ஜிடிபி குறைந்தால் 1,50,000கோடி இழப்பு. 2%வரை குறையும் என்கிறார்கள்.

முன்னாள் ரிசர்வ் வங்கிக் கவர்னர்கள் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியும், உலக அளவிலான அதன் மதிப்பும் சரிந்துவிட்டது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

வேலை வாய்ப்புகள்50% சரிந்துள்ளதாக பொறுப்பும்,நம்பகத்தன்மையும் மிகுந்த நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவையெல்லாம் நேரடியாக நாட்டிற்கு ஏற்பட்ட,ஏற்படக்கூடிய இழப்புகள். இதுதவிர தனிமனிதர்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள்,இன்னல்கள், பொருளாதார இழப்புகள், நீண்டகால பாதிப்புகள் அளவற்றவை. கடினமான காலகட்டம் என்பது இனிமேல் தான் தொடங்க இருக்கிறது என்று நேற்று மன்மோகன்சிங் அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு குறிப்பிட்டார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்றார். ரிசர்வ் வங்கி எவ்வளவு பணம் திரும்பி வந்துள்ளது என்று வாய் திறக்க மறுக்கிறது. அச்சடிக்கப்பட்ட 15.5லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் வங்கிக்கு திரும்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

மோடியே சொன்ன சுவிஸ் வங்கியில் உள்ள 80லட்சம் கோடி கறுப்புபணம் பத்திரமாக அங்கேயே இருக்கிறது. அதை வைத்திருப்பவர்களுக்கு மோடி விளம்பர மாடலாகிவிட்டார். இன்னும் கொடுமை இந்தப் பிரபலங்கள் தான் இந்த பணமதிப்பு நீக்கத்தை விழுந்து விழுந்து ஆதரிக்கிறார்கள். இதை ஆதரிக்கும் நடிகர்களில் பலரும் முக்கால்வாசி சம்பளத்தை கறுப்பில்வாங்குபவர்கள்.

சுவிஸ்வங்கி 2019வரை எந்த தகவலையும் தராது என்று இப்பொழுது நிதியமைச்சர் சொல்கிறார். நீங்கள் தானே 100 நாட்களில் கறுப்புபணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15லட்சம் போடுவேன்னு சொன்னீங்க என்று கேட்டால் இப்படி தெருவில் நிற்கவைத்து இனி கறுப்புபணம் எங்கேன்னு கேப்பியா கேப்பியான்னு அடிக்கறாங்க ! (இனி யாராவது கேட்பீங்க?!)

கள்ளநோட்டை ஒழிக்கிறேன் என்றார். இந்திய எல்லையிலும், உள்நாட்டிலும் லட்ச லட்சமாக 2000ரூபாய் கள்ளநோட்டு பிடிபடுகிறது. ஏனென்றால் ஒரு நோட்டின் பாதுகாப்பு கோடை (security code) மாற்றுவதற்கு 6ஆண்டுகள் ஆகும். அது மிக எச்சரிக்கையான படிப்படியான நடவடிக்கை. ஆகவே பழைய நோட்டுகளில் இருந்த அதே பாதுகாப்பு கோடுதான் புதிய நோட்டுகளிலும் உள்ளது. ஜிப் உள்ளது என்று மோடி படை பரப்பிய பச்சைப் பொய்யை நிதியமைச்சரே மறுக்க நேர்ந்தது.

அடுத்து இருக்கவே இருக்கிறார்கள் தீவிரவாதிகள்! எல்லையில் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது. கடந்தவாரம் கூட மூன்று தீவிரவாதிகள் ஆர்மி கேம்புக்குள் நுழைந்து நமது ஜவான்களை கொன்றுவிட்டு தப்பியும் போய்விட்டார்கள். இராணுவம் கடந்த 8 மாதங்களில் எப்போதும் இல்லாத அளவு அதிக உயிரிழப்பை சந்தித்து வருகிறது. இராணுவ வீரர்களுக்கு ஒழுங்காக உணவு வழங்குவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்திருகிறது. மோடி மீண்டும் பாகிஸ்தானோடு உறவைப் புதுப்பிக்க சில தினங்களுக்கு முன் நவாஸ் ஷெரீப்புக்கு நீடூழி வாழ பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினார். அவர் ராஜதந்திரத்தைப் புகழ ஒரு கும்பல் தயாராகிவருகிறது!

இப்பொழுது கேஸ்லெஸ் எகானமிக்கு வந்த கையோடு பே டி எம் (Pay To Modi) விளம்பர மாடலாகவும் ஆகிவிட்டார். நமது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் காசைப் பிடுங்கிக்கொண்டே இருப்பார்கள்.

மோடி யாருக்கு உழைக்கிறார் என்பது தெளிவு!

எப்படியோ மோடி தேரை இழுத்து தெருவில் விட்டு 130கோடி மக்களையும் முட்டாளாக்கிவிட்டார்.

(Jothimani Sennimalai)