நிலையியல் கட்டளையும் நிலையில்லா குழப்பமும்

கடந்த மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பிறகு பாராளுமன்ற அமர்வு இரண்டாவது தடவையும் மிகவும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. சுமார் ஏழு மணிநேரம் இடம்பெற்ற அமர்வில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றாலும் உயரிய சபையின் கண்ணியம் பேணப்பட்டிருக்கிறதென்பது திருப்தி தரக்கூடியது.

சபாநாயகரின் செயற்பாடுகள் ஒருதலைப்பட்சமானதெனக் கூறி ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கடந்த வெள்ளியன்று (23.11.2018) வெளி நடப்புச் செய்தனர். இந்த நடவடிக்கை நிலையியற்கட்டளைகளுக்கு உட்பட்டது மட்டுமல்ல; ஜனநாயகப் பண்பின் உச்ச விழுமியமும் இங்கே வெளிக்காட்டப்பட்டிருக்கிறது.

பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு அமைப்பதில் கட்சிகளுக்குள்ள பிரதிநிதித்துவம் பேணப்பட வேண்டும். நிலையியற் கட்டளை இதனை தெளிவாகக் கூறுகிறது.

இதன்படி, ஆளும் தரப்புக்கு கூடுதலான உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதற்கமைய, ஆளும் தரப்பு, ஏழு பேரின் பெயர்களை சபாநாயகருக்கு சிபார்சு செய்திருந்தது. என்றாலும், ஐந்து பேருக்கே சபாநாயகர் அனுமதி வழங்கினார். அதாவது ஆளும் கட்சிக்கு 5 உறுப்பினர்களும் எதிரணியினருக்கு 5 உறுப்பினர்களுமாக அனுமதி வழங்கப்பட்டது.

சபாநாயகரின் இந்த நிலைப்பாட்டை எதிர்த்தே ஆளும் கட்சியினர் வெள்ளிக்கிழமை வெளிநடப்புச் செய்தனர். ஆளும் கட்சியினர் சபையில் இல்லாத நிலையிலேயே அது தொடர்பான பிரேரணை 121 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பிரேரணைக்கு சபை அங்கீகாரம் வழங்கி இருப்பதாக சபாநாயகர் கூறுகிறார். ஆளும் தரப்பு இல்லாத நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்கவே முடியாது என்கிறது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத் தரப்பு.

உண்மையில், இது சட்டவாக்க சபைக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையிலான பிரச்சினையாகவே பார்க்க முடிகிறது.

அதாவது, சபாநாயகரிடமிருந்து நிறைவேற்று அதிகாரத்தைப் பாதுகாக்கும் ஒரு அதிகார மோதலாகவே இது தொடர்கிறது.

அரசியலமைப்பை கௌரவிப்பவர்களும், பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதிப்பவர்களும் எவ்வாறு செயற்படவேண்டுமென்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

சட்டவாக்கத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்குமிடையில் பிரச்சினைகள் எழுகின்றபோது, சபையின் நடுநிலைத்தலைவரான சபாநாயகர் இரண்டையும் சமமாகக் கையாளவேண்டும். இதுதான் தார்மீகமும் ஜனநாயகப் பண்பும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரையும் அமைச்சரவையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே சபாநாயகரின் நிலைப்பாடு. ஜனாதிபதியின் தீர்மானங்களை செயற்படுத்தும் அதிகாரம் பாராளுமன்றுக்கு இருக்கிறது. நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றைக் கலைக்க முடியாதென, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கூறுகிறது. ஆனாலும், நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படுமானால், பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணையைப் பெறமுடியுமென்கிறது 19ஆவது திருத்தத்தின் 33/2/சீ சரத்து.

ஆகவே, அரசியலமைப்புக்கு உட்பட்ட தனது அதிகாரத்தின் கீழ், ஜனாதிபதி புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமித்திருக்கிறார். இதனை ஏற்க முடியாதென சபாநாயகர் அடம்பிடிப்பது பாராளுமன்ற ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கியுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பை நிறுத்துமாறு கோரி 18 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவைகளை விரிவாக ஆராய்வதற்கென உச்ச நீதிமன்றம் வர்த்தமானி அறிவிப்பு மீது இடைக்கால தடைவிதித்தது. நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு சபாநாயகர் காட்டமாக நடந்து கொள்வது ஜனநாயகப் பண்பை நிராகரித்த செயற்பாடாகவே கொள்ள முடியும்.

இங்கு ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அமைதியான அமர்வின்போது சபாநாயகர் சபை உறுப்பினர்களை அழைத்த விதம் ஏற்புடையதல்ல.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவர் பிரதமர் என அழைக்கவில்லை. ஆளும் தரப்பு பிரதம கொறடாவை பதவி நிலை கூறி அழைக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பியை ‘எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்’ எனக் கூறி அழைத்தார்.

பிரதமரும் இல்லை, ஆளும் கட்சி பிரதம கொறடாவுமில்லை என்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் எப்படி வந்தார்? என்பது சபாநாயகரின் சார்பு நிலையையும் ஒருதலைப்பட்சத்தையும் காட்டுகிறது.

இன்னுமொரு சந்தேகத்தையும் இவரின் செயற்பாடு ஏற்படுத்துகிறது. சபாநாயகர் ஏதாவது, அழுத்தத்தின் பின்னணியில் இருந்து செயற்படுகிறார் என்பதே ஆளும் தரப்பு எம்.பிக்களின் பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது. இதனை உறுதிப்படுத்துவது போலவே சபாநாயகரின் நடவடிக்கைகள் தென்படுகின்றன.

ஆகவே, சட்டவாக்க சபைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகார மோதலுக்கு உச்ச நீதிமன்றம் எதிர்வரும் ஏழாம் திகதி (07-.12-.2018) தீர்ப்பு வழங்கி இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென்பது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.

என்றாலும், மக்கள் ஆணையைப் பெறுவதே முழுமையான தீர்வுக்கு வழிபிறக்கும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக தொடர்ந்தும் அழுத்தமாக கூறுகிறார்.

ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் மக்களிடம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறார். ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்டன போல் தெரிகிறது. ஆகவே, மக்கள் வழங்கும் தீர்ப்புத்தான் நாட்டை ஸ்திரமாக வழிநடத்தும் தீர்ப்பாக அமையும்.

ஒரு விடயத்தை நாம் இங்கு அழுத்தமாக சொல்லவேண்டியிருக்கிறது.

தெரிவுக்குழு தொடர்பாக சபாநாயகர் நடந்து கொண்டவிதம் நிலையியற் கட்டளையைப் பேணியதாகத் தெரியவில்லை. தெரிவுக்குழு என்பது பாராளுமன்றத்துக்கு வழிகாட்டி சரியாக செயற்படுத்துவதற்கென உருவாக்கப்பட்டதாகும்.

பிரிட்டிஷ் முறையிலிருந்து தோன்றியதாயினும் இலங்கையில் நடைமுறையிலுள்ள தெரிவுக் குழுக்கள், கூடிய அதிகாரங்களைக் கொண்டுள்ளன. அதேவேளை, பாராளுமன்றத்தின் நாளாந்த அலுவல்களுக்கு அவை பெறுமதிமிக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.

தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளையும் முடக்கும் வகையிலேயே சபாநாயகரின் செயற்பாடு அமைந்திருக்கிறதென்பது கவலை தரும் விடயம்.

அரசியலமைப்பின்படி, 12க்கும் மேற்படாத எண்ணிக்கையிலான உறுப்பினர்களை ஒரு தெரிவுக்குழு கொண்டிருக்கும். ஆயினும் பாராளுமன்றத்தின் அனுமதியுடன் இதனை அதிகரிக்கவும் முடியும். ஆனால், என்ன நடந்தது?

12 பேரைக் கொண்ட தெரிவுக் குழுவுக்கு ஆளும் தரப்பு சார்பில் 5 பேரும் எதிரணியின் சார்பில் 5 பேரும் நியமிக்கலாமென சபாநாயகர் அறிவித்தார். சிறுபான்மைக் கட்சிகள் சார்பில் இரண்டு உறுப்பினர்களை அவர் ஒதுக்கியுள்ளதாகவும் கூறினார். ஆனால், ஆளும் தரப்புக்கு கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டுமென்பதே நிலையியற் கட்டளை. ஆனால், அது மறுக்கப்பட்டுள்ளது.

இங்கே, சபாநாயகரின் அதிகாரம் நிறைவேற்று அதிகாரமாக பயன்படுத்தப்படுகிறதென்பது தெளிவாகின்றது.

இறையான்மையுள்ள ஒரு சட்டவாக்க சபையின் செயற்பாட்டை சபாநாயகர் எப்படி முடக்குகிறார் என்பதற்கு கடந்த வெள்ளியன்று நடந்த சபை அமர்வு சான்றாக அமைகின்றது.

ஆகவே, இந்தப் பாராளுமன்றை ஜனநாயகப் பண்போடு நடத்த வேண்டுமாக இருந்தால் மக்கள்தான் தீர்ப்பு வழங்க வேண்டும்.

(Thinakaran)