நெஞ்சம் நெகிழ வைத்தது .. நேற்று நான் பார்த்த ஒரு புகைப்படம் !

இதோ ..இந்தப் படத்தின் இடது ஓரத்தில் நிற்கும் இந்த இளம்பெண் …
தன்னைத் தூக்கி வளர்த்த , தன் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்த ,
அள்ளி அரவணைத்து வளர்த்த … தன் அப்பாவின் கைகளைத்தான் நேருக்கு நேர் பார்க்கிறாள் .
கைகள் மட்டும்தான் இங்கே இருக்கின்றன ..
ஆனால் அவள் அப்பா , எப்போதோ கர்த்தரிடத்தில் போய் சேர்ந்து விட்டார் !

அந்த இளம்பெண்ணின் மனநிலை இருக்கட்டும்…
இதோ .. அவள் அருகில் நிற்கும் இந்த இளம்பெண்ணின் தாய் …
அவர் மனநிலை எப்படி இருக்கும் ..?
.
தனக்கு கை கொடுத்து வாழ்வளித்த , தன் கழுத்தில் மாலையிட்ட தன் கணவனின் கைகளைத்தான் நேருக்கு நேர் இங்கே பார்க்கிறாள் !
ஆனால் அந்த நேசமிகு கணவன் …?
அவர் இப்போது இல்லை .
என்ன ஆயிற்று அவருக்கு..?
.
அவர் பெயர் ஜோசப் .. கொச்சியை சேர்ந்தவர் . ஒரு விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து விட்டார். 2015 மே மாதம் நடந்தது இது !
.
அதே நேரத்தில் கொச்சி மாதா அமிர்தானந்தமயி மருத்துவமனையில் , வேறு ஒரு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆப்கான் ராணுவ கேப்டன் அப்துல் ரஹீம் . தீவிரவாதிகளுடன் நடந்த போரில் , ஒரு குண்டு வெடிப்பில் .. இரு கைகளையுமே இழந்து விட்டார் . இவருக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் . அதற்காகத்தான் இந்தியா வந்து , இந்த மருத்துவமனையில் காத்திருக்கிறார் அப்துல் ரஹீம் .
.
ஒரு புறம் மூளைச்சாவு அடைந்த ஜோசப் …
மறுபுறம் கைகளை இழந்த அப்துல் ரஹீம் !
.
விபத்தில் மூளைச்சாவு அடைந்து விட்ட ஜோசப்பின் கைகளை எடுத்து ,
அப்துல் ரஹீமுக்கு பொருத்தினால் என்ன..?
.
மருத்துவர்கள் சிந்தித்தார்கள்.
ஜோசப்பின் குடும்பத்தினருடன் பேசினார்கள்.
ஜோசப்பின் மனைவியும் , மகளும் யோசித்தார்கள் .
இயேசு சொன்ன வார்த்தைகள் , அவர்கள் நினைவுக்கு வந்தன :
” உன் மீது நீ அன்பு கூர்வது போல , உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக ”
“ஆமென்”
.
இறந்து விட்ட ஜோசப்பின் கைகளை எடுத்து , அப்துல் ரஹீமுக்கு பொருத்தும் சிகிச்சை தொடங்கியது ..
20 மருத்துவர்கள் கொண்ட குழு , ஏறத்தாழ 15 மணிநேர கடுமையான போராட்டத்திற்குப் பின் , வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தார்கள்.
இந்த மருத்துவக் குழுவின் தலைமை மருத்துவர் பெயர் .. சுப்பிரமணிய ஐயர் .
.
கல்லறைக்குள் போய் விட்ட தன் கணவனின் கைகளைத்தான் பக்கத்தில் நின்று பார்த்து கண்ணீர் வடிக்கிறார் இந்த மனைவி…!
அருகிலிருந்து தன் அப்பாவின் கைகளை பார்த்து … அழுது கொண்டே சிரிக்கிறாள் இந்த அன்பு மகள்..!
.
ஒரு அப்துல் ரஹீமுக்கு , ஒரு ஜோசப்பின் கைகள் , ஒரு சுப்பிரமணிய ஐயரால் பொருத்தப்பட்டது .. ஒரு இந்து மத மருத்துவமனையில் ..!
.
இந்து தெய்வம் … இஸ்லாமிய தெய்வம் ..கிறிஸ்தவ தெய்வம் …
எல்லாமும் இணைந்ததுதான் …
“மனித நேயம்” என்ற மகத்தான தெய்வம்..!
அதுவே நாம் கை கூப்பித் தொழ வேண்டிய ..
“கை கொடுத்த தெய்வம்” !
.
.
(The Times of India)