பங்களாதேஷ்: அறிவுத்துறையை தாக்கும் மதவாதம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கருத்துகளைக் கருத்துகளால் எதிர்கொள்ள, வலுவற்றோர் மலிந்த உலகில் வாழ்கிறோம் என, அங்கும் இங்குமாக உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் நிகழ்வுகள் விடாது நினைவூட்டுகின்றன. சகிப்பின்மையும் மதவாதமும் கருத்துகளை ஒடுக்கும் பிரதான கருவிகளாயுள்ளன. தென்னாசியாவில் கடந்த ஒரு தசாப்தமாக மதவெறி ஒரு வலிய நோயாக வடிவெடுத்துள்ளதோடு, பொதுப்புத்தி மனநிலையை வசப்படுத்திக் காரியங்களைச் சாதிப்பதைக் காண்கிறோம். மதங்கள் வேறுபடினும் அணுகுமுறைகளும் நடைமுறைகளும் ஒரே விதமாக உள்ளன. மதவெறிக்கு மனிதர் புலப்படுவதில்லை. இதை அண்மைய நிலைமைகள் மீண்டும் உணர்த்தியுள்ளன.பங்களாதேஷின் புகழ்பெற்ற அறிவியற் புனைகதை எழுத்தாளரும் பேராசிரியருமான முஹமட் ஷவார் இக்பால் அண்மையில் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டு மயிரிழையில் உயிர் பிழைத்திருக்கிறார்.

தாக்குதலுக்கெதிராக பங்களாதேஷ் முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அறிவுத்துறையைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்படுவது, இது முதன்முறையன்று. கடந்த 5 ஆண்டுகளாக வலுத்துள்ள இஸ்லாமிய மதவெறியினதும் வளரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் செல்வாக்கையுமே இது சுட்டுகிறது.

64 வயதான ஷவார் இக்பால் சஜலால் விஞ்ஞான, தொழிநுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியராவார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற பெல் ஆய்வுகூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றிய இக்பால் 2000ஆம் ஆண்டு பங்களாதேஷ் திரும்பினார். சிறுவர்கட்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் ஏற்படுத்தும் விஞ்ஞானப் புனைகதைகளை எழுதியுள்ளார். கடந்த மூன்றாம் திகதி பல்கலைக்கழகப் பரிசளிப்பிற் கலந்துகொண்ட போது ஓர் ஆயுததாரியால் மும்முறை கத்தியால் குத்தப்பட்ட அவரை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.

இக்பாலைக் கொலைசெய்ய முயன்றவரை மாணவர்கள் பிடித்தார்கள். 24 வயதான அவர், இக்பால் ‘இஸ்லாத்தின் எதிரி’ என்பதால் அவரைக் கொல்ல முயன்றதாகத் தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளின் முடிவில், அவரது தந்தையும் மாமனாரும் உட்பட, அம் முயற்சியுடன் தொடர்புடைய மேலும் அறுவர் கைதாகினர். அவரது தந்தை மதராசா ஒன்றில் ஆசிரியராயிருந்து ஓய்வுபெற்றவர்.

கைதானவர்கட்கும் பங்களாதேஷில் இயங்கும் இரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான அன்சர் அல்-இஸ்லாம் அமைப்புடன் தொடர்பு இருந்தமை நிறுவப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மனித உரிமைகட்காகக் குரல் கொடுக்கும் பலர் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் வலைப்பதிவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு வலைப்பதிவர்கள் ‘இஸ்லாத்தின் எதிரிகள்’, ‘இறை நம்பிக்கையற்றவர்கள்’ என்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன், பங்ளாதேஷின் புகழ்பெற்ற எழுத்தாளரான பேராசிரியர் ஹூமாயூன் ஆசாத்தும் தாக்கப்பட்டு இறந்தார். அவர் இஸ்லாமிய மதவாதிகளை அம்பலப்படுத்தியும், ஏளனஞ்செய்தும் எழுதுபவர். அவருடைய எழுத்துகளையிட்டுப் பல இஸ்லாமிய மதவெறி அமைப்புகள் எதிர்ப்பையும், மிரட்டலையும் தெரிவித்திருந்தன.

பங்களாதேஷ் நாடாளுமன்றத்திலேயே அவரைக் கைதுசெய்து அவரது புத்தகத்தைத் தடை செய்ய வேண்டுமென்று மதவாதிகள் குரல் கொடுத்திருந்தனர். அவரது இறுதி நாவல் ஜமாத்-ஏ இஸ்லாம் என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத அமைப்பை நக்கலாக விமர்சிக்கிறது.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் இரண்டு: ஒன்று, பங்களாதேஷில் அதிகரித்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் சகிப்பின்மையும். மற்றது, 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் சுதந்திரப் போரில் பாகிஸ்தானிய இராணுவத்தினருடன் இணைந்து வங்காள இளைஞர்களைக் கொன்றவர்களையும் பெண்களை வன்புணர்வுக்கும் உட்படுத்தியவர்ககளையும் தண்டிக்கவேண்டும் என்று வலுத்துவரும் கோரிக்கை. தாக்குண்ட அனைவரும் தண்டனையைக் கோருபவர்கள்.

அண்மையில் தாக்கப்பட்ட ஷவார் இக்பால் இக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பேசியும் எழுதியும் வருபவர்.

இவ்விடயத்தில் இப்போதைய நிகழ்வுகளின் விதை, பங்களாதேஷ் விடுதலை எழுச்சியின் போதே இடப்பட்டது. அன்று, கிழக்குப் பாகிஸ்தான் எனப்பட்ட கிழக்கு வங்காளத்துக்கு, மேலதிக தன்னாட்சி உரிமை வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து 1970இல் நடந்த பொதுத் தேர்தலில், ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் போட்டியிட்ட அவாமி லீக் கிழக்குப் பாகிஸ்தானில் 99 சதவீதமான இடங்களைக் கைப்பற்றியது.

இப்பெரும்பான்மை மூலம், முஜிபுர் ரஹ்மான் முழுப் பாகிஸ்தானுக்கும் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதை, மேற்கு பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஏற்க மறுத்ததன் விளைவாக, கிழக்கு வங்காளத்தில் நாடளாவிய போராட்டங்கள் வெடித்தன.

பாகிஸ்தான் இராணுவ ஆட்சியாளர்கள் கிழக்கு வங்காள மக்கள் மீதும் அவாமி லீக் உறுப்பினர்கள் மீதும், கொடிய இனப்படுகொலையைக் கட்டவிழ்த்தனர்.

அதன்போது, ஜமாத்-ஏ இஸ்லாம் தனது மாணவர்-இளைஞர் அமைப்புகளைக் கொண்டு ரஸாக்கர்கள் எனும் இரகசிய குண்டர்படையையும் அல்-பதார் எனும் கொலைக்குழுவினரையும் அமைத்து, அவாமி லீக் முன்னணியாளர்களையும் அறிவுத்துறையினரையும் கொன்றொழித்தது.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவம், கிழக்கு வங்காளத்தின் மீது படையெடுத்தபோது, அதற்கு உதவியாகக், கிழக்கு வங்காள விடுதலைக்குப் போரிட்டோரைக் கொன்றவர்கள் ரஸாக்கர்கள். அவர்கள், பாகிஸ்தான் இராணுவத்துடன் இணைந்து செய்த கொலைகள், கணக்கிலடங்காதவை.

பங்களாதேஷ் விடுதலையைத் தொடர்ந்து, அவர்கள் ஜமாத்-ஏ இஸ்லாம் என்று தங்களை அறிவித்தனர். அரசியல் யாப்பின்படி, பங்களாதேஷ், மதச்சார்பற்ற அரசாக இருப்பதை, அவர்கள் எதிர்க்கிறார்கள்.

விடுதலைப் போரின் போது ஏராளமான வங்காளிகளைக் கொன்று ‘மீர்பூரின் கசாப்புக்காரன்;’ எனப் பெயரெடுத்த அப்துல் காதர் மொல்லா தான், இந்தக் கட்சியின் தலைவராவார்.

பங்களாதேஷ், விடுதலை எழுச்சியின்போது இராணுவ அடக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் எதிராகப் போராடிய மக்கள், முக்தி பாஹினி எனும் இயக்கத்தின் மூலம், பாகிஸ்தானிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கானப் போராட்டமாக முன்னெடுத்துச் சென்றனர்.

பங்ளாதேஷ் விடுதலைப் போரின்போது, ஏறத்தாழ 3 இலட்சம் முதல் 5 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, இரண்டு இலட்சம் முதல் 4 இலட்சம் வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, 10 மில்லியன் பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.

இந்த அவலத்தைச் சாதகமாக்கி, பிராந்திய விரிவாக்க நோக்கத்துடன் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பங்ளாதேஷ் விடுதலைப் போரை ஆதரித்து, முக்தி பாஹினி இயக்கத்தின் பெயரால் இந்திய இராணுவத்தைக் கொண்டு வங்கதேசத்தில் வெளிப்படையாகத் தலையிட்டார்.

இப்போரில் பாகிஸ்தான் தோற்றதைத் தொடர்ந்து, முஜிபுர் ரஹ்மானை அதிபராகக் கொண்ட பங்ளாதேஷ் என்ற தனிநாடு உருவானது. போர் முடிவுக்கு வருமுன்னரே, பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கம் மதவாத அரசியல் கட்சிகளைத் தடை செய்தது.

புதிய நாடு உருவான பின்னர், போர்க்குற்றவாளிகட்கு எதிரான விசாரணை நடத்தித் தண்டிக்கக் கோரி மக்களின் போராட்டங்கள் தொடர்ந்தன. இருப்பினும் கொலைகள், பாலியல் வல்லுறவு போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர, மற்றவர்கட்கு 1973-இல் முஜிபுர் அரசு பொதுமன்னிப்பு அளித்தது. எனினும் குற்றவாளிகட்கு எதிரான விசாரணை தொடங்கப்படவில்லை.

1975-இல் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பில் முஜிபுர் கொல்லப்பட்ட பின், இராணுவத் தளபதியான ஸியா உர் ரஹ்மான் நாட்டின் அதிபரானதோடு மதவாதக் கட்சிகளின் மீதான தடையையும் நீக்கினார்.

கடந்த நான்கு தசாப்தங்கட்கு மேலாக நீதிவேண்டி வங்க மக்கள் போராடி வந்தார்கள். மக்கள் போராட்டங்களின் விளைவாக 2013ம் ஆண்டு விடுதலைப் போரின் போது செய்த குற்றங்கட்காக அப்துல் காதர் மொல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஏனையவர்கட்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த கொலைகள் பங்ளாதேஷ் மக்களின் மனதில் ஆறாத வடுவாக உள்ளன. எனவே, வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் தலைநகர் டாக்காவில் உள்ள ஷாபாக் சதுக்கத்திற் கூடிக் கொலையாளிகட்கு மரண தண்டனை கோரிப் போராடினார்கள்.

‘போர்க்குற்றம் நிறுவப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும், பயங்கரவாத மதவெறிக் கட்சியான ஜமாத்-ஏ இஸ்லாமியைத் தடை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் கருத்தோவியங்கள், கேலிச்சித்திரங்கள், கொடும்பாவி எரிப்பு எனப் பல்வேறு வடிவங்களில் இம் மக்கள் போராட்டம் துரிதமாக நாடெங்கும் பரவியது.

‘1971-இல் ஒவ்வொரு வங்காளிக் குடும்பமும் தமது உறவினர்களைப் பறிகொடுத்துள்ளதால், எத்தனை ஆண்டுகளானாலும் இக் கொடிய வன்கொடுமையை மக்கள் மறக்கத் தயாராக இல்லை’ என்று மக்கள் கோரினார்கள்.

இம் மக்கள் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த அதே வேளை, ஜமாத்-ஏ-இஸ்லாமியும் கொலையாளிகட்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தியது. தண்டனை கோரிப் போராடுவோர் மீது ஜமாத்-ஏ-இஸ்லாமி குண்டர்கள் ஆங்காங்கே தாக்குதல் தொடுத்தது.

மொத்தப் பிரச்சினைக்கும் மதச்சாயம் பூச வேண்டுமென்கிற வெறியில் அந்நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. அதன் மூலம் சிறுபான்மையினர் தேசத் துரோகிகளாகவும் ஒழிக்க வேண்டியோராகவும் சித்தரிக்கப்பட்டனர்.

1971ம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்திற்கு உதவிச், சொந்த மக்களைக் கொன்று துரோகம் இழைத்த ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பினர் இன்று புனிதர்களாகவும் இஸ்லாத்தின் காவலர்களாகவும் வலம் வருகிறார்கள்.

மதச்சார்பற்ற பங்ளாதேஷில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கடந்த இரண்டு தசாப்தங்களில் வேர்விட்;டு வளர்ந்ததற்கும் ஜமாத்-ஏ-இஸ்லாமி பெரிய சக்தியாக வளர்ந்ததற்கும் பின்னால் மறைக்கப்படும் கதையொன்று உள்ளது.

கெடுபிடிப்போரின் போது குறிப்பாக ஆப்கானிஸ்தானில் சோவியத் படைகளின் நுழைவைத் தொடர்ந்து ‘சோவியத் நாத்திக கம்யூனிஸ்டுகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விரட்ட அல்லாவின் குழந்தைகளே வாரீர்’ என்ற அழைப்பு உலகளாவிய முஸ்லிம்கட்கு விடப்பட்டது. அதை ஏற்று ஏராளமானோர் ஆப்கான் முஜாஹிதின் படைகளில் சேர்ந்தார்கள்.

சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விரட்டத் தனது இராணுவத்தை நேரடியாகக் களமிறக்க விரும்பாத அமெரிக்கா, அப் போரைச் ‘சாத்தானுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்தும் ஜிஹாத்’ எனும் புனிதப் போராகச் சித்தரித்தது. சவூதி அராபிய பெட்ரோ-டொலரையும் பாகிஸ்தானின் ராஜதந்திர உதவியையும் பெற்ற அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ப்ரெஸென்ஸ்கி ஜிஹாதிகளைப் புனிதர்களாகச் சித்தரித்து விளக்கமளித்தார். காட்டரின் பின்வந்த அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் ஆப்கானிய முஜாஹிதீன் தலைவர்களை 1985ல் வெள்ளை மாளிகையில் சந்தித்து அமெரிக்காவின் முழு ஆதரவைத் தெரிவித்தார்.

இதே முஜாஹிதின்களையே 2001இல் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ‘பயங்கரவாதிகள்’ என்று கூறியதை இங்கு நினைவுகூரலாம்;. இஸ்லாமிய ஜிஹாத் என்ற இந்தப் போருக்காகப் பல நாடுகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்ளை ஆப்கானிஸ்தானை நோக்கி அமெரிக்கா அனுப்பியது.

அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களும் தமது குடிமக்கள் இன்னொரு நாட்டில் ஆயுதப் போருக்காகப் புறப்படுவதைக் கண்டு கொள்ளவில்லை – ஏனெனில், அமெரிக்காவின் ஆதரவும் ஊக்குவிப்பும் அதை அங்கீகரிக்க வைத்தது. பங்ளாதேஷுக்கு மேலும் ஒரு காரணம் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்திய பங்ளாதேஷில் ஆட்சிக்கு வந்த அவாமி லீக், மதச்சார்பற்ற கட்சியாயினும் அடிப்படையில் ஏகாதிபத்தியத் தரகர்களான முதலாளிகளின் நலன்களையே பிரதிபலித்தது.

எழுபதுகளின் துவக்கத்தில் மேற்கு வங்கமாநிலத்தில் இந்திய எல்லையில் மக்கள் ஆதரவுடன் எழுந்த நக்சல்பாரி புரட்சி பங்ளாதேஷ் கம்யூனிஸ்ட்டுகளிடையிலும் எதிரொலித்தது. பங்களாதேஷ் கம்யூனிஸ்ட்டுகள் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவாமி லீக், அரசியலில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மத உணர்வு இருப்பது எதிர்காலத்தில் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் எனக் கணித்தது.

எனவே, அது தனது தேசத்தின் இளைஞர்கள் எல்லைதாண்டி ஆப்கானிஸ்தானுக்குச் செல்வதைக் கண்டும் காணாமல் விட்டது. இன்னொரு வகையில் இவ்வாறு இளைஞர்களை மடைமாற்றுவது தனக்கு வாய்ப்பானது எனது அவாமி லீக் கருதியது.

1984ஆம் ஆண்டு தொட்டு நான்கு ஆண்டுகளில் சுமார் 3000 பங்ளாதேஷ் இளைஞர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட போதும் பின்னர் 10 உலாமாக்கள் மட்டில் ஆப்கானிஸ்தான் சென்ற போதும் பின்னர் 1992இல் காபூலை முஜாஹிதீன்கள் கைபற்றிய போது அவர்களின் பங்ளாதேஷ் பங்காளிகள் அதை வெளிப்படையாக வெற்றி விழாக் கொண்டாடிய போதும் பங்ளாதேஷ் ஆளும் வர்க்கம் அவற்றை அனுமதித்தது. ஆப்கானிஸ்தான செனறு திரும்பிய வங்காள முஜாஹிதீன்கள் தங்களோடு வகாபிசத்தையும் அழைத்து வந்தனர்.

தொண்ணூறுகளின் மத்தியில் துவங்கி அடுத்த பத்தாண்டுகட்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி, வகாபிய இஸ்லாத்தைத் தீவிரமாக முன்னெடுத்தது. அக் கட்சி தனக்கென ஒரு வர்த்தக அமைப்பாக இஸ்லாமி வங்கிகளைத் துவங்கி நிதிதிரட்டலில் வெளிப்பட ஈடுபட்டது.

டிகந்தா தொலைக்காட்சி, நயா டிகந்தா தினசரி, அமர்தேஷ், சங்க்ராம் நாளேடு, உள்ளிட்ட ஊடகங்களைத் துவக்கி கடுங்கோட்பாட்டு இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யத் துவங்கிய ஜமாத்-ஏ-இஸ்லாமி, பல்வேறு பெயர்களில் பண்பாட்டு நிறுவனங்களையும் ஆயிரக்கணக்கான மதரசாக்களையும் திறந்தது.

2001ம் ஆண்டு தொடங்கிய ‘பயங்கரவாத்திற்கு எதிரான போர்’ இஸ்லாத்திற்கு எதிரான மேற்குலகின் போர் என்ற எண்ணத்தை இவ்வமைப்பு மக்கள் மத்தியில் கொண்டு சென்றது. ஜமாத்-ஏ-இஸ்லாமி அல் கைடாவுடன் கைகோத்து பங்ளாதேஷில் பயங்கரவாதத்தில் இறங்கியது.

2013ம் ஆண்டு முதல் ஏராளமான பயங்கரவாத நிகழ்வுகள் புனிதப் போரின் பெயரால் அரங்கேறின. இன்று முன்னிலும் அதிக மதவாதச் சமூகமாக பங்ளாதேஷ் மாறியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தனது கால்களை பங்ளாதேஷில் பதித்துள்ளது.

2013ம் ஆண்டு மக்கள் போராட்டங்களின் பிரதானமான கோஷம் ‘நீ யாரென்று கேட்டால், நான் வங்காளி என்று சொல்!’ என்பதாகும். வங்கதேச மக்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய மதவெறியையும் விட வங்காள தேசியத்தைப் பெருமிதத்துடன் கருதுகின்றனர்.

இது இஸ்லாமிய அடிப்படைவாதிகட்கு மிகப்பெரிய சவால். அதேவேளை, கோட்பாட்டுத் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் அடிப்படைவாதிகட்கு எதிரான பெரிய சவாலை அறிவுத்துறையினரும் கலைத்துறையினரும் இளைஞர்களும் வழங்குகின்றனர்.

அதனாலேயே அவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். அறிவை மழுங்கடிப்படிப்பதன் மூலமும் சிந்தனையையும் விவாதத்தையும் விமர்சனத்தையும் தடுப்பதன் மூலமே மதத் தீவிரவாதம் தன்னை தக்கவைக்க முடியும்.

பங்ளாதேஷில் மட்டுமன்றி இலங்கை இந்தியா உள்ளிட்ட எல்லாஇடங்களிலும் இது நடக்கிறது. அதற்கெதிராகப் போராடுவதே எம்முன்னுள்ள ஒரே வழி.