பயிரை மேய்ந்த வேலிகள்..(19)

(மாணவர்களை நெருங்கிய காலன்)

2006ற்க்கு பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் போர் பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு பயிற்சியை பெற்றுக்கொள்ள விருமபாதவர்கள் பாடசாலைகளில் கல்வி கற்பதே சிரமம் என்கின்ற நிலையை புலிகள் உருவாக்கியிருந்தனர்.

இவர்களிக்கான பயிற்சியை புலிகள் இப்போது தொடங்கியிருந்தனர். 17-18 வயதை அடைந்த உயர்தர வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஒருமாதகால தற்காப்பு பயிற்சி என்கின்ற பெயரில் போர் பயிற்சியை தொடங்கினர். ஆனால் ஐ.நா, இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு ( SLMM) போன்றவர்களை ஏமாற்ற கல்வி அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தங்கள் மாணவர்களுக்கு தற்காப்பு சார்ந்த உடற்பயிற்சியே வழங்குவதாகவும், மாணவர்களே விரும்பி இதனை செய்ய முன்வருவதாகவும் புலிகள் கூறினர். “We can do nothing, this is a kind of drill of learning process. The students take part of it voluntarily and the educational officials approve” என்று கூறிக்கொண்டு கிளிநொச்சியில் இருந்த ஐ.நா மற்றும் போர் நிறுத்த கண்காணிப்பு குழு அதிகாரிகள் தலையை சொறிந்துகொண்டு நடப்பதை பார்த்துக்கொண்டிருப்பதை தவிர அவர்களால் வேறு எதனையும் செய்ய முடியாமலிருந்தது.

ஊடக பலமும், அதிகாரமும் கையில் இருந்தால் பொய்யை உண்மையாக்கி உலகில் எவரையும் நம்ம வைக்கமுடியும் என்பதற்கு புலிகள் இந்த மாணவர்கள் விடையத்தில் நடந்து கொண்டமையே மிகசிறந்த சாட்சியாகும்.
கைகளில் ”மண்வெட்டி பிடி” அளவிலான மரக்கொட்டான்கள் கொடுக்கப்பட்டு கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானத்தில் நகரில் உள்ள பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சியை அளிக்கப்பட்டது. இவ்வாரே முல்லைதீவு பிரதேச மாணவர்களும் பயிற்சி வழங்கப்பட்டது. ஒருமாத கால பயிற்சி முடிவில் அவர்கள் துப்பாக்கியை வைத்து பயிற்சியை பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

2006 ஆகஸ்ட் 09ல் ( இன்றைக்கு சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு) கிளிநொச்சியை சேர்ந்த மாணவர்கள் வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இருந்த போர் பயிற்சி முகாமுக்கும், மாணவிகள் புதுக்காட்டில் உள்ள பெண்கள் பயிற்சி முகாமுக்கும் அனுப்பபட்னர். முல்லைத்தீவு மாணவர்கள் நாவற்காட்டுக்கும் மாணவிகளை வள்ளிபுனம் முகாம்களுக்கு அனுப்பபட்டனர். புலிகளின் நிர்பந்தத்துக்கு பணிந்த நிலையில் பாசக்கயிற்றுடன் காலன் தங்களுக்காக காத்திருப்பதை அறியாத நிலையில் முல்லைத்தீவு மாணவிகள் புலிகளின் வாகனங்களில் ஏறிச்சென்று வள்ளிபுனம் பயிற்சி முகாமில் இறங்கியியிருந்தனர். கருணா புலிகள் இயக்கத்தில் இருந்தபோது அவரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த முகாம் இப்போது புலிகளின் மகளீர் அரசியல் பிரிவினரால் பெண்கள் பயிற்சி முகாமாக்கப்பட்ட நிலையில் இன்னும் ஐந்து நாட்களில் நடக்க போகும் பெரும் விபரீதத்தை அறியாமல் அங்கிருந்தவர்கள் இந்த மாணவிகளுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபட தொடங்கியிருந்தனர்.

தமது பிள்ளைகளை ஆயுத பயிற்சிக்காக புலிகள் கொண்டு சென்றுள்ளனர். அதனை தடுத்து நிறுத்துங்கள் என்று சில பெற்றோர்கள் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிடமும், ஐ.நாவிடமும் முறையிட முனைந்தனர். ஆனால் அவர்களோ “ We understand your feelings. But they say the training is for First Aid and Leadership and the educational officials confirmed it. So we can’t do nothing. We hope your children will be returning home soon” என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தனர்.

தொடரும்..

(Rajh Selvapathy)