பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு

இந்தப் பந்தயத்தில்தான் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இலங்கைப் பல்கலைக்கழகங்களும், இந்த நோக்கத்தை ஈடுசெய்யும் வகையில் தம்மை திரிபடையச் செய்திருந்தன என்றால் கூட அது மிகையல்ல. இதனால், ஆய்வுக்கற்கை என்பதன் முக்கியத்துவம் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்கிறது. இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரவரிசையில் பின்னடைவைச் சந்திக்க இது முக்கிய காரணம். சிலர் இதற்கு வளப் பிரச்சினைகளை மட்டும் காரணமாகச் சொல்லலாம். ஆனால் அது மட்டுமே காரணம் என்பது ஏற்பதற்குரியதொன்றல்ல. கல்வி பற்றிய எம்முடைய சிந்தனையே ஆய்வுக்கற்கையை நோக்கியதாக இல்லை. மாறாக ஒரு பட்டத்தைப் பெறுதல், அதை வைத்துக்கொண்டு நல்ல வேலையைத் தேடிப்பெறுதல் என்பதாக இருக்கிறது.

ஒரு வகையில் பார்த்தால், இது ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த “எழுதுவினைஞர்களை” உருவாக்கும் கல்விமுறையின் தொடர்ச்சியாகக் கூட கருதலாம். இங்கு கல்வி, குறிப்பாக உயர்கல்வி என்பது “தொழிற்பயிற்சி” என்று சுருங்கியே நோக்கப்படுகிறது. ஆகவேதான் பாரம்பரிய தொழிற்றுறைகளுக்கான மிகச்சிறந்த பயிற்சியை இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வழங்குகின்றன. இதனால் பாரம்பரிய தொழிற்றுறைகளைப் பொறுத்தவரையில், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தொழிலாளர் உற்பத்திக்கு நல்ல கேள்வி காணப்பட்டு வந்தது. இன்றும் கணிசமானளவு காணப்படுகிறது. ஆனால் இதன் மறுபக்கம் யாதெனில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளையும் புத்தாக்கங்களையும், சமகாலத்திற்கு அவசியமான திறன்களையும் மேம்படுத்துவதில் பின்தங்கிப்போயுள்ளன. அறிவின் பரவலுக்கு இலங்கைப் பல்கலைக்கழகங்கள் வழிவகுத்தாலும், அறிவுப் பரப்பின் விரிவாக்கத்தில் அவை பங்குவகிப்பதில்லை.

அந்தவகையில் பார்த்தால், அவை பல்கலைக்கழகங்களாக அல்லாது வெறும் பயிற்சி நிலையங்களாகச் (tutories) சுருங்கிப்போயுள்ளன என்பதுதான் யதார்த்தம். அரச பல்கலைக்கழகங்களின் நிலையே இவ்வாறு இருக்கையில், இங்குள்ள தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் நிலை இதைவிட மோசமானது. சில தனியார் உயர் கல்வி நிலையங்கள் இதற்கு விதிவிலக்காக இருக்க பகீரதப்பிரயத்தனப்பட்டாலும், எப்படியாவது ஒரு பட்டம் பெற்று விட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட சமூகத்திற்கு தமது சேவையை வழங்கும் நிறுவனங்கள், கேள்விக்கேற்ற நிரம்பலை வழங்கினால் மட்டுமே இலாபம் உழைக்க முடியும் என்ற யதார்த்தத்தை எதிர்கொள்கின்றன.

இங்கு பலரும் கல்வியின் தனியார் மயமாக்கத்தைக் கண்டிக்கிறார்கள். “பட்டக்கடைகள்” என்று தனியார் கல்வி நிறுவனங்களை விமர்சிக்கிறார்கள். தனியார் கல்வி வேண்டாம் என்கிறார்கள். ஆனால் இங்கு பிரச்சினை தனியார் கல்வியில் அல்ல. இங்கு அடிப்படைப் பிரச்சினை கல்வி பற்றிய எமது பிரக்ஞையில் இருக்கிறது. கல்வி என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தான் அடிப்படை பிரச்சினை இருக்கிறது. இங்கு கேள்வி அறிவை விரிவாக்கும் கல்விக்கானதாக இருக்கும் போது, அதனை வழங்கவே நிறுவனங்கள் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்படும். மாறாக இங்கு கேள்வி என்பது பட்டங்களுக்கானதாக இருக்கிறது. ஆகவே பட்டங்களுக்கான கேள்வியை நிரம்பல் செய்ய இங்கு நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. நிற்க.

கல்வி பற்றிய எம்முடைய பார்வை கொலனித்துவ காலத்தைத் தாண்டாமல் இன்னும் அதனுள் தேங்கியிருப்பதுதான் “பட்டம்” மீதான இந்த ஆழ ஊன்றிய அவாவுக்குக் காரணம் எனலாம். இன்னும் பட்டம்பெறுதலை சமூக அந்தஸ்த்தின் உரைகல்லாக, பொருளாதார மேம்பாட்டின் திறவுகோலாகப் பார்க்கின்றமையால், சமூகச் சிந்தனையில் பட்டம் பெறுதலே கல்வியாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 21ஆம் நூற்றாண்டின் யதார்த்தம் வேறானதாக இருக்கிறது. இன்று வணிக முகாமைத்துவப் பட்டமொன்றைப் பெற ஏறத்தாழ பதினைந்து இலட்சம் ரூபாய்களை முதலீடாகப் போட்ட ஒருவன், மூன்று வருடங்களை “படித்து” அந்தப் பட்டத்தைப் பெற்று அவன் பெறக்கூடிய தொழில் வாய்ப்பின் அடிப்படைச் சம்பளம் ஏறத்தாழ நாற்பதாயிரம் ரூபாயாக இருக்கிறது.

மறுபுறத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில், தளபாட உற்பத்தியில் தொழிற்பயிற்சியை பெற்றுக்கொண்டால், அடிப்படை மற்றும் உயர் பயிற்சி என இரண்டு வருடங்கள் செலவாகும். பயிற்சிக்காலத்தில் பயிற்சிக்காக மாதாந்த சன்மானமாக சிறுதொகை வழங்கப்படும். தளபாட உற்பத்தியாளர்கள் நாட்சம்பளத்திற்கு வேலை செய்தாலும் கூட, ஒரு நாட்சம்பளம் ஏறத்தாழ 2,000 முதல் 2,500 ரூபாய் அளவில் இருக்கிறது. மாதச்சம்பளம் ஏறத்தாழ நாற்பதாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய். ஒருவேளை பத்து இலட்சம் ரூபாய் முதலீட்டுடன், குறித்த நபர் சொந்த புத்தாக்க தளபாட உற்பத்தியில் ஈடுபட்டால், மாத வருமானங்கள் குறைந்தபட்சம் ஒரு இலட்சத்துக்கும் மேலாக அமையும். ஆகவே “பட்டம்” பெறுதல் பொருளாதாரத்துக்கான திறவுகோல் என்பதெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத கருத்து. “பட்டம்” இருக்கிறதோ, இல்லையோ, குறித்த துறையில் தன்கருமத்தைச் சிறப்பாக முன்னெடுப்பவர்கள், சந்தையின் கேள்விக்கு உகந்த வழங்கலை மேற்கொள்பவர்கள் இங்கு வெற்றி பெறுவார்கள். புத்தாக்கம் என்பதுதான் இன்று வளர்ச்சியின் தாரக மந்திரமாக இருக்கிறது.

படித்துவிட்டால், பட்டம் பெற்றுவிட்டால், அரச உத்தியோகம், அல்லது ஏதாவதொரு நிறுவனத்தில் வேலை பெற்றுக்கொண்டுவிட்டால் அத்தோடு பிரச்சினை முடிந்தது என்ற கொலனித்துவ கால சிந்தனை பழசாகிப்போய்விட்டது. ஆகவே கல்வி பற்றிய எமது சிந்தனையில், பிரக்ஞையில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இங்கு வாழ்க்கைக்கு அவசியமானது பட்டங்கள் அல்ல. அறிவு. அறிவுதான் மேம்பாட்டிற்கான திறவுகோல். அந்த அறிவின் பரப்பையும் ஆழத்தையும் விரிவாக்குவதாகக் கல்வி இருக்க வேண்டும். வெறும் அறிவு என்பதுகூட போதாது.

அந்த அறிவை பயன்படுத்தக் கூடிய திறன்களும் கூடவே வளர்க்கப்பட வேண்டும். ஆகவே கல்வி என்பது அறிவு மற்றும் திறன்களின் வளர்ச்சியாகப் பார்க்கப்பட வேண்டும். கணினி என்றால் என்ன என்று கணினியின் வரைவிலக்கணத்தைச் சொல்லித்தரும் கல்வி வெறும் ஏட்டுச்சுரைக்காயைப் போன்றது. அத்தகைய கல்வியை மாற்றி, கணினி மொழியைப் பாலர் வகுப்பிலேயே கற்றுக்கொடுக்கும் கல்விமுறைக்கு நாம் மாற வேண்டும். ஆசிரியர் சொல்வதைத் திருப்பிச் சொல்லும் “கிளிப்பிள்ளை” பயிற்சிக் கல்வியை மாற்றி, மாணவர்கள் தைரியமாகக் கேள்விகேட்டும் கேள்விகளூடாக அறிவை விரிவுசெய்யும் கல்வி முறைக்கு நாம் மாற வேண்டும். ஆய்வுக்கல்விக்கான அடிப்படைப் பயிற்சிகள் பாடசாலைக் கல்விமுறையிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தாய்மொழியையும் மதத்தையும் கற்பிப்பதிலுள்ள ஆர்வம், கணிதம், விஞ்ஞானம், கணினி மொழி குறியீட்டு வரைபு, தர்க்கவியல், பொருளியல், நிதியியல், அடிப்படை அரசியல் மற்றும் அடிப்படைச் சட்டம் ஆகியவற்றைக் கற்பிப்பதிலும் காட்டப்பட வேண்டும். இங்கு கற்பித்தல் என்பது வெறும் சொல்வதும், கேட்பதுமல்ல. அது பயிற்சி சார்ந்ததாக, ஆய்வு சார்ந்ததாக இருக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் நிதி அறிவு நிறைந்த ஒரு சந்ததி உருவாகும்போது அது அந்த நாட்டுக்கும், அதன் எதிர்காலத்துக்கும் பெரும் வரமாக அமையும். கணிதம், விஞ்ஞானத்துறையை ஆய்வு ரீதியில் அணுகும் சந்ததி உருவாகும் போது, புத்தாக்க அதிசயங்கள் நிறைய நிகழும். வாழ்வு வளம்பெறும். ஆகவே கல்வி நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவை பயிற்சி நிலையங்களாக அல்லாமல் அறிவாராய்ச்சிக் கூடங்களாக மாறவேண்டும்.

எமது எதிர்காலம் ஏதோ ஒரு நிறுவனம் வழங்கும் பட்டங்களுக்குள் இல்லை. இதற்கு பல இலட்சக்கணக்கான சாதனையாளர்களை நாம் உதாரணம் காட்டலாம். அவர்களிடம் பட்டங்கள் இருக்கவில்லை ஆனால் அறிவும், திறன்களும், உழைப்பும், அதன்பாலான அனுபவமும், தேடலும் இருந்தது. கல்வி என்பது இவற்றை ஊக்குவிப்பதாக அமைவதே. அத்தகைய கல்விமுறையை எதிர்காலச் சந்ததிக்கு வழங்க வேண்டிய கடமை எமக்குண்டு. தொடர்ந்தும் மிகவும் பிற்போக்குத்தனமாக கொலனித்துவகால சமூக அந்தஸ்துசார் மனநிலையில் இயங்கிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தக்கன பிழைக்கும் என்பது உலக நீதியெனில், காலத்திற்கேற்றவாறு மாறுதலே வெற்றியின் சூத்திரமாகும். அழிதலை வெற்றி பெறுதல் என சிலாகித்துக்கொள்ளலாம். ஆனால் சிவப்பைப் பச்சை என்று சொல்லுவதால் சிவப்பு பச்சையாகிவிடுவதில்லை.