பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )

தம்பலகாமம் உதவி அரசாங்க அலுவலகம்,தம்பலகாமம் சந்தியில் உள்ளது.இதன் பின்னால் பற்குணத்தின் அரச வீடு இருந்தது. இதனைச் சுற்றி சிங்கள மக்கள் குடியேறி இருந்தனர்.தமிழர்கள் அதில் இருந்து இரண்டு மைல் உள்ளேயே இருந்தனர்.சந்தியை அண்மித்து ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருந்தன.சந்தியைப் பொறுத்தவரை அது ஒரு சிங்கள கிராமம் போலவே இருந்தது.ஏறக்குறைய இருபது குடும்பங்கள் இருக்கலாம்.அதனை அண்மித்து விகாரை ஒன்றும் இருந்தது.

இந்தப் பிரதேசத்தில் தமிழர்களை குடியேறுமாறு பற்குணம் கேட்டார்.ஆனால் யாரும் தயாராக இல்லை.இஸ்லாமிய மக்கள் முள்ளிப்பொத்தானைப் பகுதியில் குடியேறி இருந்தனர்.அவரகள் சிங்கள மக்களோடு நல்ல உறவையும் கொண்டிருந்தார்கள்.தமிழர்கள் விலகியே இருந்தனர்.

அப்பகுதியில் சிறிபாலா என்ற சிங்களவர் இருந்தார்.இவருக்கு இரு மனைவி.ஒரு பெண் தமிழ்.அவரது பிள்ளைகள் தம்பலகாமம் மகாவித்தியாலத்தில் படித்தனர்.ஒரு நாள் ஆசிரியர் பாடசாலை சம்பந்தமாக அவரது பிள்ளையையும் சேர்த்து வேறொரு இடம் அழைத்துச் சென்றார்.

சிறிபாலா கெட்டவன்.தமிழ் பெண்ணை மணந்தாலும் இனவாதியே.இதை அறிந்த அவன் தம்பலகாமத்துக்குள் போய் அந்த பாடசாலையில் அந்த ஆசிரியரைத் தாக்கி ரைக்டரில் ஏற்றி வந்தான்.இதை அறிந்து அங்கே தமிழர்கள் திரண்டாலும் அவனைத் தாக்கும் துணிவு வரவில்லை .அவன் அந்த ஆசிரியரை ரைக்டரில் ஏற்றி சந்தியை நோக்கி வந்தான்.சந்தியில் பற்குணத்தின் அலுவலகம் வீடு என்பன இருந்தன.அவன் பின்னால் தமிழர்கள் திரண்டு வந்தனர்.

இந்த தகவலை தொலைபேசிமூலம் அதிபர் சித்திரவேல் பற்குணத்துக்கு தெரிவித்தார்.உடனே பற்குணம் அவன் இங்கேதான் வருகிறான். பிரச்சினையை ,நான் சமாளிக்கிறேன் என்றார்.

அந்த அயலில் உள்ள சிங்கள மக்களுக்கு நிலைமையை விளக்கினார்.அவரகள் பற்குணத்துக்கு மதிப்பளித்து ஆதரவு கொடுத்தனர்.அடுத்து ஒரு சிலரை அனுப்பி பின்னால் தொடர்ந்துவந்த தமிர்களை தொடர விடாமல் தடுத்தார்.காரணம் இன மோதல் ஆகாமல் தடுக்க வேண்டும்.தமிழர்கள் ஏறக்குறைய 200 யார் தொலைவில் நின்றனர்.

சிறிபாலா பற்குணம் வீட்டை நெருங்கிவர பற்குணம் ரைக்ரரை மறித்தார்.சாரதி நிறுத்தினான்.சிறிபாலாவை அந்த ஆசிரியரை இறக்கச் சொன்னார்.அவன் மறுத்தான்.அவனை இறங்கச் சொல்ல சண்டிக்கட்டுடன் கீழே இறங்கினான்.காதைப் பொத்தி ஒரு அடிதான்.மாத்தையா இறக்கிறேன் என இறக்கிவிட்டான்.அங்கே சிங்கள மக்கள் சுற்றி நின்றனர். அவரகளைப் போகச் சொல்ல அவர்களும் போய்விட்டார்கள்.சிறிபாலாவை எச்சரித்து பற்குணம் அனுப்பி வைத்தார்.

ஆசிரியரும் நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டார்.பற்குணம் இதை பொலிஸ்வரை கொண்டு செல்ல விரும்பவில்லை .இனரீதியான பிரச்சினைகள் வரலாம் எனக் கருதி தவிரத்துவிட்டார்.

அதன் பின்பு சிறிபாலா பற்குணத்தின் வீட்டின் முன்னால் போகும்போது சண்டிக்கட்டு கட்டி நடப்பான்.இதை பற்குணம் பெரிதாக எடுக்கவில்லை.அதன் பின் முன்னாலுள்ள சிரிசேன என்பவரிடம் தான் அவரின் முன்னே சண்டிக்கட்டு கட்டி நடப்பதாக கூறியுள்ளான்.இதை சிரிசேன பற்குணத்திடம் கூறினார்.
ஒரு நாள் எதேச்சையாக பற்குணம் அவனைக் காணும்போது சண்டிக்கட்டு கட்டி நடந்தான். அவனை அழைத்து இனிமேல் எங்கேயும் உன்னை சண்டிக்கட்டுடன் நான் காணக்கூடாது என் எச்சரித்து அனுப்பினார்.அதன் பின் அவன் எங்கேயும் பற்குணத்தின் முன்னே நிற்பதில்லை .

இந்த சம்பவத்தின் பின் பற்குணத்துக்கு எல்லோரும் பயம் கலந்த மரியாதை கொடுத்தனர்.எந்தவகையிலும் இவரோடு வாலாட்ட முடியாது என உணர்ந்தனர்.1996 இல் அவரது மரண சடங்கின் பின் சிலர் இச்சம்பவத்தை நினைவு கூர்ந்தனர்.
அவர் அரசியல்வாதிகளோடு மட்டுமல்ல அராஜகவாதிகளையும் கண்டு அஞ்சவில்லை.ஆனால் எந்த மனிதனும் இலகுவில் நெருங்கக்கூடிய அஅதிகாரியாகவும் இருந்தார்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)