பற்குணம் (பகுதி 105 )

1988 டிசம்பரில் நடைபெற்ற ஜனதிபதி தேர்தலில் பிரேமதாசா வெற்றி பெற்றார்.எனது திருமணம் 1989 ஜனவரியில் நடந்தது.இந்த திருமணம் மகரகம அண்மித்த கொடிகமுவ என்னும் கிராமத்தில் நடந்தது.இதன் பின் நான்,மனைவி, மாமனார் குடும்பம் எல்லோரும் அந்த வீட்டில் வாழ்ந்தோம்.அயலவர்களான சிங்கள மக்கள் எந்த பிரச்சினைகளும் தரவில்லை.

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.இக் காலத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியும் உச்சம் பெற்று இருந்தது.மக்களும் இராணுவமும் அவர்களுக்கு அஞ்சிய காலம்.இதே காலத்தில் சில இளைஞர்கள் சிவப்பு தொப்பி அணிந்து வந்து தம்மை ஜே.வி.பி என அடையாளப்படுத்தி எம்மை தமிழர்கள் என்றும் அங்கே இருக்க முடியாது .வெளியேற வேண்டும் என மிரட்டினர்.நாங்கள் பணியவில்லை.எனது மாமனார் முன்னாள் விமானப்படை அதிகாரி.எனது சகலன் சிங்கள இனத்தவர்.எனவே நாங்கள் அசையவில்லை.அதன் காரணமாக அவர்கள் பின்னர் வீட்டு உரிமையாளர்களை மிரட்டினர்.

இதே வேளை எதிர்பாராதவிதமாக நான் முன்னாள் வடமாகாண ஜே.வி.பி அமைப்பாளர் ஜி.எஸ். பொன்சேகா அவர்களை கோட்டை ரயில் நிலையம் முன்பாக கண்டு கதைத்தேன்.அவர் தலைமறைவாக வாழும் காலம்.அவரிடம் நிலைமையை சொன்னேன்.அவரோ தமது அமைப்பினராக இருக்க முடியாது.சிலவேளை மக்கள் அக்கிய முன்னணியினர் (தினேஷ் குணவர்தன கட்சி) ஆக இருக்கலாம்.எனினும் மறுநாள் தன்னை சந்திக்கும்படி கூறிவிட்டு சென்றார்.

இதை எனது மனைவி வீட்டாரிடம் கூறியபோது அவர்கள் ஏன் பிரச்சினைக்குள் போனீர்கள் என்றார்கள்.இதனிடையே மாமனாரும் புதிய வீடொன்றை பார்த்துவிட்டார்.ஆனால் மறுநாள் பொன்சேகாவை கண்டேன்.அவர் சொன்னபடி அது ஜே.வி.பி இல்லை. மக்கள் அக்கிய முன்னணியினரே தொந்தரவுக்கு காரணமானவர்கள் என்றார்.எனினும் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

மறுநாள் புதிய வீட்டுக்கு இடம் பெயர்ந்தோம்.அந்த வீடு இன்றைய திறந்த வெளி பல்கலைக் கழகத்தின் அருகே இருந்தது.அந்த இடத்தில்தான் பற்குணம் 1977 இல் இன வன்முறையை எதிர்கொண்டார்.

அந்த வீட்டின் நடுப்பகுதியில் வீட்டு உரிமையாளர் குடி இருந்தார்.அந்த வளவினுள்ளே ஒரு மாடி வீடு இருந்தது.அதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இருப்பதாக சொன்னார்கள்.அந்த வளவின் ஒருபகுதியில் சிறிய வீட்டில் நாங்கள் குடி புகுந்தோம்.நாங்கள் அங்கே தமிழர் என்பதால் விரட்டப்பட்டோம்.இங்கே தமிழர் என்பதால் வரவேற்றனர்.

இந்த வீடு மாற்றம் பற்றி பற்குணத்துக்கு அறிவித்தேன்.அவர் நீ இந்த இடத்தை முன் பார்க்கவில்லையா எனக் கேட்டார்.அவர் ஏற்கனவே பிரச்சினப் பட்ட இடம் என்பதால் எங்கள் பாதுகாப்பு கருதியே கேட்டார்.அதன் பின்னரே நிலமை எனக்கு விளங்கியது.வேறு வழியில்லை. அங்கேயே இருந்தோம்.

சில நாட்களின் பின் அந்த பா.உ மனைவி என் மனைவியுடன் நட்பானர்.மனைவி என்னை அறிமுகப்படுத்தினார் .அப்போது அவர் எந்த தொகுதி எம்.பி எனக் கேட்டேன்.எட்டியாந்தோட்டை என்றார்.அவர் வேறு யாருமல்ல.கலாநிதி என்.எம்.பெரேராவை தோற்கடித்த வின்சட் பெரேரா.அதுமட்டுமல்ல புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)