பற்குணம் a.f.c (பகுதி 52 )

பற்குணம் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக பொறுப்பேற்றார்.அன்னறைய நாட்டின் சூழ்நிலையில் அரச அதிபர் பதவிக்கு அடுத்ததாக மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாக இருந்தது.அது உணவுத் தட்டுப்பாடுகள் நிறைந்த காலம்.மேலும் திருகோணமலை துறைமுக நகரம் என்பதால் பல வெளிநாட்டு உணவுக் கப்பல்கள் அங்கே வரும்.இவைகளைப் பொறுப்பேற்பது ,இங்கிருந்து உணவுகளை வெளி மாவட்டங்களுக்கு அனுப்புவது எல்லாம் அங்குள்ள உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியே.

துறைமுக நகரம் என்பதால் பல உணவுக் களஞ்சியங்கள் அங்கே இருந்தன.பெரும்பாலான களஞ்சியங்கள் விமானப்படைத் தளத்தை அண்டிய கிளப்பம்பேர்க் பகுதியில் இருந்தன.இதைவிட சென் ஜோசப் கல்லூரியின் பின்பாக மூன்று களஞ்சியங்கள் இருந்தன.அதை விடகன ரக வாகனங்கள்,படகுகள் என பல இருந்தன.நாட்டில் தொடரந்திருந்த உணவுத் தட்டுப்பாடு காரணமாக இந்த திணைக்களத்தில் ஊழல்களும் தாராளமாக மலிந்திருந்தன.
பொதுவாக இங்கே வேலைசெய்பவர்கள் பொருளாதார வளத்தில் செழிப்பாக இருந்தனர்.காவலாளி தொடக்கம் களஞ்சியப் பொறுப்பாளர்கள் வரை ஊழல்தான்.பல களஞ்சியப் பொறுப்பாளர்கள் வீடுகளும் வாழ்க்கை முறைகளும் ஆடம்பரம்தான்.அங்கே ஒரு சில அப்பாவிகளும் இருந்தார்கள்.

பற்குணம் சம்பாதிக்க நினைத்திருந்தால் இந்த திருகோணமலையில் கோடீஸ்வரனாகி இருப்பார்.அந்தளவுக்கு சட்டரீதியாகவும் புறம்பாகவும் இந்தத் துறை வசதியானதாக திறந்ததாக இருந்தது.அதை பற்குணம் செய்யவேண்டியதில்லை .அவரின் கீழே பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வீட்டுக்கே கொண்டுவந்திருப்பார்கள் .

ஆனால் பற்குணம் பற்குணமாகவே இருந்தார்.இவை எல்லாம் மாற்ற முடிவு செய்தார்.உண்மையில் எல்லாக் களஞ்சியப் பொறுப்பாளர்கள்,ஊழியர்கள் எல்லாம் இவரை தமது வழிகளுக்கு கொண்டுவர முடியும் என ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்.எவராலுமே அவரை நெருங்கவே முடியவில்லை.நெருங்கிவர நினைத்தவர்களிடம் ஆணித்தரமாக பதில் கொடுத்தார்.எல்லோரும் பயந்து பின் வாங்கிவிட்டனர்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)