பற்குணம் A.F.C (பகுதி 56 )

உணவுத் திணைக்கள ஊழல்கள் ஒருவாறாக பற்குணத்தால் கட்டுப்படுத்தப் பட்டாலும் சிலர் இரகசியமாக தொடர்ந்தனர்.ஆனாலும் அவர்களால் பெரிய அளவில் தொடர முடியவில்லை.

உணவு திணைக்கள கனரக வாகனங்களை வெளியிடங்களில் தனியாருக்கு வாடகைக்கு விடுவோரை கண்டுபிடித்தார்.ஆனாலும் ஒரு சாரதி வேறு மாவட்டத்தில் வாகனம் பழுது என்று சொல்லி ,வாகன நிறத்தையும் மாற்றி போலி இலக்க தகடுகளுடன் தனியார் சேவைக்கு விட்டார்.அவருக்கு வாகனம் இல்லை என்பதால் சம்பளத்துடனான விடுமுறை வழங்கி அவரைப் பின் தொடர்ந்து அவரின் மோசடியை கண்டு பிடித்தார்.

இன்னொருவர் களஞ்சியப் பொறுப்பாளர்.பெயர் தகநாயக்கா.இவர் பொலிஸ் இலாகாவில் செல்வாக்கு உள்ளவர்.இவர் சென் ஜோசப் கல்லூரியின் பின்னாலுள்ள களஞ்சியங்களின் பொறுப்பாளர்.பற்குணம் ஒரு நாள் கொழும்பு செல்வதாக அறிவித்தார்.இதைப் பயன்படுத்தி அவர் காவலாளியை வெளியே அனுப்பிவிட்டு இரண்டு தனியார் லாறிகளில் உணவுகளை திருடி கடைக்கு விற்றுவிட்டார் .காவலாளி திரும்ப வரும்போது லாறிகள் செல்வதைக் கண்டு பற்குணத்திடம் முறையிட்டார்.

பற்குணம் காவலாளியை சம்பிரதாயபூர்வமாக பொலிஸில் முறையிடச் சொல்லிவிட்டு வேட்டையைத் தொடங்கினார்.நகர் பொலிஸ் தகநாயக்கா வின் நண்பர்கள் என்பதால் உப்புவெளி பொலிஸ் மூலம் அவரை தேடினார்.அப்போது அவருடன் கூட இருந்த நான் நமது வாடிக்கை கடைக்காரரின் லாறியில் காண அதில் சோதனை போட்டபோது உணவின் அடையாளங்கள் தென்பட்டது.உடனே தகநாயக்கா அவர்களின் வலதுகரமான பாரம் தூக்குபவர்களை பிடித்து விசாரித்தபோது உண்மைகள் துலங்கின.

உடனடியாக எமது வாடிக்கை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.அது பிரதான வீதியில் உள்ள நகரின் பிரபலமான கடை.அதையடுத்து தகநாயக்கா கபரணையில்,வைத்து நடு இரவில்,கைது செய்யப்பட்டார்.

அந்த லாறி சிலவேளை பொலிசாரின் துணையோடு இடம்மாற்றப்படலாம் என்ற சந்தேகத்தில் சிறுவனான என்னை ஒரு மூலையில் நின்று அவதானிக்கும்படி நிறுத்திவிட்டு போய் தகநாயக்காஅவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இந்த சம்பவத்தின்பின் பல நேர்மையான ஊழியர்கள் நம்பிக்கை ஏற்பட பற்குணத்துடன் ஒத்துழைக்க முன்வந்தனர்.இதன்பின் உணவுத் திணைக்கள உணவுகளை வாங்குவதில் வர்த்தகர்களும் தயக்கம் காட்டினார்கள்.கைது செய்யப்பட்ட வர்த்தகரின் கடையின் நீண்டகால வாடிக்கையாளர் பற்குணம்.

பற்குணம் ஏறக்குறைய ஊழலை கட்டுப்படுத்திவிட்டார்.முடிந்தவரை யாரையும் பாதிக்காமல் கடமையாற்றினார்.

(தொடரும்…..)
(விஜய பாஸ்கரன்)