பற்குணம் A.F.C (பகுதி 64)

பற்குணம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோதும் எந்த அரசியல்வாதிகளின் உதவியையும் நாடவில்லை.அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை நாடி வரலாம் என சிலர் நினைத்தார்கள்.அதுவும் நடக்கவில்லை.மூதூர் புதிய பா.உ ஆன மஹ்றூப் உதவி செய்யத் தயாராக இருந்தும் விரும்பவில்லை.

பற்குணம் யாழ்ப்பாணம் வருவது சாத்தியம் இல்லை என்று அறிந்த முன்னாள் பனம் பொருள் அபிவிருத்திச் சபைத் தலைவர் நடராசா பற்குணத்திடம் ஏன் பற்குணம் நீங்கள் யாழ்ப்பாணம் வரலாமே எனக் கிண்டலாக கேட்டார்.அதற்குப் பற்குணம் நான் வந்தால் நீங்கள் எந்தக் கூட்டுறவு அமைப்பிலும் தலைவராக இருக்க முடியாது என நேரடியாக பதில் சொன்னார்.நடராசா அப்போது ஆசிரியராகவும் சாவகச்சேரி தெங்கு பனம் பொருள் கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்தார்.

பற்குணத்தின் இடமாற்றம் தொடர்பாக தலைமை உணவு ஆணையாளர்அக்கறை எடுத்தார்.அவர் சிங்கள இனத்தவராக இருந்தபோதும் அவரின் நிலமைகளைப் புரிந்துகொண்டு அவருக்கு வவுனியாவுக்கு இடமாற்றம் பெற்றுக் கொடுத்தார்.ஒரு நிர்வாகசேவை அதிகாரி இவ்வளவு சிக்கலில் இருந்தபோதும் எந்த தமிழ் தேசிய அரசியல்வாதியும் உதவ விரும்பவில்லை.இதுதான் தமிழத் தேசியம்.தங்கத்துரை பதவியில் இல்லாதபோதும் அக்கறை காட்டினார்.

நாட்டு நிலமைகள் சீரடைந்ததும் பற்குணத்தைக் காண அவரோடு கொழும்பில் இருந்த வீட்டு உரிமையாளர் பத்மநாதன் குடும்ப சகிதமாக காணவந்தார்.பற்குணம் அவர்களது சுயநலம்,சந்தர்பவாதம் எதையும் கண்டுகொள்ளாமல் வரவேற்றார்.

அந்தக் குடும்பத்தினரை எனக்கும் தெரியும்.ஆபத்தில் விட்டுவிட்டு தப்பி ஓடியவரகளை ஏன் வரவேற்றார் என்றேன்.அதற்கு அவர் உயிர் ஆபத்து என்று வரும்போது எவரும் தங்களையே காத்துக்கொள்ள முயல்வார்கள்.அவரகளும் அப்படித்தான் .ஆனாலும் அவர் தன் குடும்பத்தை விட்டு ஓடாமல் அவர்களையும் கூட்டிச் சென்றுள்ளார்.அதை நாங்கள் பாராட்ட வேண்டும் என்றார்.
நான்கூட துணிவாக நின்றதால் அண்ணியைக் காப்பாற்றினேன்.நானும் கோழையாக இருந்திருந்தால் அண்ணியை பலிகொடுத்து தப்பி ஓடியிருப்பேன்.எனவே அவர்கள் மேல் கோபம் கொள்வதில் அர்த்தம் இல்லை என்றார்.ஆனால் இன்றுவரை அவர் சொன்ன சமாதானமாகவே வார்த்தைகளை ஏற்க முடியவில்லை.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)