பற்குணம் A.F.C (பகுதி 68 )

இனக் கலவரத்தின் பின் பற்குணம் தனக்காக ஒரு வீடு தேவை என்கிற அவசியத்தை உணர்ந்தார். இதன் காரணமாக அவரது மனைவிக்கு சொந்தமான காணியில் வீடு கட்ட ஆரம்பித்தார். அவரிடம் பொருளாதார வளம் இல்லாததால் மனைவி பெயரால் வங்கி மூலம் கடன்வாங்கி அந்தப் பணி தொடங்கினார்.

பற்குணம் குழந்தைகளில் அதிக நேசம் உள்ளவர்.எந்தக் குழந்தைகளைக் கண்டும் அருவருப்பது இல்லை. அவருக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. இதற்கான முயற்சியை பிரபல பெண் மருத்துவ நிபுணர் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் மூலம் காங்கேசந்துறை ஈஸ்வரி மருத்துவமனையில் திருமதி பற்குணம் அவர்களுக்கு சத்திர சிகிக்கை நடந்தது. இதன் பின் அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்.

பற்குணம் வவுனியாவில் பணிகள் தொடங்கியபின் அவரை எதிர்க்க பலர் சாதிரீதியாக அணிதிரண்டாலும் நேரடியாக முகம்கொடுக்கும் துணிவு வரவில்லை. இந்த நிலையில் லங்காநேசன் அவர்களும் பற்குணத்துடன் நின்று பிரச்சினைகள் பெரிதாக வண்ணம் பார்த்துக்கொண்டார்.இறுதியில் எல்லோரும் நினைத்ததுபோல எளிதாக கட்டுப்படுத்தக் கூடிய மனிதராக அவர் இருக்கவில்லை. எனவே தாங்களாகவே அடங்கினர். இனவாதத்துக்கு முகம் கொடுக்கும் வவுனியாவில் சாதிவாதமே தமிழர்களுக்கு முக்கியமாகிருந்தது.

பற்குணம் பணியாற்றும் காலத்தில் வவுனியா பிரதேசத்தில் ஒரு உதவி அரசாங்க அதிபர் பணிபுரிந்தார். நல்ல மனிதர் என பெயர் எடுத்தவர். இவருக்கு தன் பகுதியில் உள்ள பல கிராமங்களின் விவசாயிகள் பெயர்கள் தெரியும். தனக்கும் தன் குடும்ப தேவைகளுக்கும் ஏதாவது தேவைகள் என்றால் இந்த விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று சுகம் விசாரிப்பார். அந்தவிவசாயிகள் என்ன பயிர் செய்கிறார்களோ அதை அவரின் வாகனத்தில் ஏற்றுவார்கள். ஏற்றி முடிந்தபின் ஏன் ஏற்றினாய் என நல்லவன் போலகடிந்து நாடகம்ஆடுவார். ஆனால் இதை கிழமைக்கு மாதத்துக்கு இடங்களை மாற்றி தொடந்து செய்துவந்தார்.

இவர் ஒருநாள் தன்னைப்பற்றி பற்குணத்திடம் பெருமையாக சொன்னார். அதற்கு நேரடியாகவே நீங்கள் இதைவிட ஒரு பணக்காரன், வர்த்கர் ஆகியோரிடம் லஞ்சம் வாங்கலாம். அதுவும் ஏழை விவசாயிகளிடம் அவர்களின் சிறிய வருமானத்தை அன்பு என்ற பெயரால் கொள்ளையடிக்க தேவை இல்லை என்றார். அந்த உதவி அரசாங்க அதிபருக்கு பதில் வரவில்லை. உடனே போய்விட்டார்.

இதன் போது அருகில் இருந்த ஒரு ஊழியர் பலரிடம் சொல்லியுள்ளார் .அதன் பின்பே அந்த உதவி அரசாங்க அதிபர் எப்படி இலஞ்சம் வாங்கினார் என்ற உண்மையைப் பலர் புரிந்தனர்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)