பாதிக்கப்பட்டிருக்கும் முல்லை கிராமங்கள் காட்டு யானைகள், குரங்குகளின் அட்டகாசத்தால்

(ஜது பாஸ்கரன்)
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரிய மற்றும் சிறிய காடுகளைக் கொண்ட எல்லைப்புறக்கிராமங்களிலும் இதேபோன்று வவுனியா மன்னார் போன்ற எல்லைப்புறக் கிராங்களிலும் வாழுகின்ற மக்கள் அன்றாடம் இந்த யானை பிரச்சினையால் பெரும் துன்பங்களை எதிர் கொள்கின்றனர். வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்பையும் தினமும் தேடி அலையவேண்டிய நிலையில் வாழும் இந்த மக்கள் இவ்வாறான யானைகளின் தொல்லைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

இது தவிர இந்த மக்கள் கரடி, குரங்கு போன்ற விலங்குகளிடமிருந்தும் தங்களுடைய விளை பயிர்களையும் வாழ்விடங்களையும் பாதுகாத்துக்கொள்ள போராட வேண்டியிருக்கிறது. இப்போராட்டத்தில் உயிராபத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் உள்ள கோட்டைய கட்டியகுளம், தென்னியன்குளம், உயிலங்குளம், வேட்டையடைப்பு, புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம், மூன்றுமுறிப்பு, பனங்காமம், சிறாட்டிகுளம், மேளிவனம், கருப்பட்டமுறிப்பு, ஒலுமடு, விசுவமடு, குமுழமுனை உள்ளிட்ட கிராமங்களில் தினமும் இரவு பகலாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக்காணப்படுகின்றது.

மேற்படி கிராமங்களில் யானைகள் வராத நாட்களே கிடையாது. என இந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடந்த வாரம் கூட முறிகண்டிப் பகுதியில் ஊர் மனைக்குள் புகுந்த காட்டுயானைகள் பெருமளவான தென்னை மற்றும் மா போன்ற பயன்தருமரங்களை அழித்துள்ளன.

இதேபோல் ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டுயானை உட்புகுந்து வயல் நிலங்களையும் பெறுமதி வாய்ந்த தென்னை மரங்களையும் அழித்து வருகின்றன.

வவுனியா வடக்கு எல்லையோரக் கிராமங்களிலும் மன்னார் மாவட்ட எல்லையோரக் கிராமங்களிலும் காட்டு யானைகள் அன்றாடம் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.

இதனால் தற்போது தேங்காய் ஒன்றின் விலை ஐம்பது ரூபாவிற்கு மேல் அதிகரித்துள்ளது.

இவ்வாறு முப்பது வருடங்களிற்கு மேலான வயதுடைய பயன்தரக்கூடிய பெருமளவான தென்னைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன வருகின்றன.

இதனால் இந்தத் தென்னை மரங்களின் வருமானத்தை நம்பி வாழும் மக்கள் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டியுள்ளது.

முல்லைத்தீவு மேளிவனம் பகுதியில் வாழ்ந்து வரும் சுமார் ஐம்பது வரையான குடும்பங்கள் பகலில் அன்றாட உணவிற்கும், இரவில் காட்டு யானைகளிடமிருந்து உயி ரைப் பாதுகாக்கவும் போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்தப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் விவசாயத்தினையும் கூலித்தொழிலையும் நம்பி வாழுகின்ற சமூகமாகவே காணப்படுகின்றனர்.

ஆனால், காட்டு யானைகளின் தொல்லையால் விவசாயத்தை மேற்கொள்ள முடியாதுள்ளது.

மீள்குடியேறிய காலத்திலிருந்து இன்று வரைக்கும் பல தடவைகள் தென்னை, மா, பலா போன்ற நீண்டகாலம் பயன்தரக்கூடிய பயிர்களை தமது குடியிருப்பு காணிகளில் நடுகை செய்கின்ற போதும், அவற்றை யானைகளிடமிருந்து பாதுகாக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.

“இந்தப்பகுதிக்கு யானைக்கான வேலிகளை அமைத்துத் தருமாறு தாங்கள் மாகான சபை அமைச்சர்கள் அதிகாரிகள் என்று எல்லோரிடமும் கோரிக்கை விடுவித்த போதும், வாக்குறுதிகள் மட்டுமே எங்களுக்கு கிடைக்கின்றன. ஆனால் வேலிகள் கிடைப்பதில்லை” என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

அண்மையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தை அண்மித்த வெடிவைத்த கல் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை கடந்த மாதம் 9ம் திகதி நெடுங்கேணி கமநலசேவை நிலையத்தின் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு விதை நெல்விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த 15 மூடை நெல் யானைகளால் சேதமாக்கப்பட்டது.

இதனால் சுமார் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட நஷ்டம் கமநலசேவை நிலையத்திற்கு ஏற்பட்டது.

முலலைத்தீவு ஐயன்கன்குளம் கிராமத்தில் யானை வேலிகளை அமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு யானைவேலிகள் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்களாகியும் இன்று வரை அந்த வேலிகளுக்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்படாததால் அந்த வேலிகள்சேதமடைந்து காணப்படுகின்றன.

யானைகளை கட்டுப்படுத்துவதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்படும்போது, யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கு தற்காலிகமாக யானை வெடிகள் மாற்றாக வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு வழங்கப்படுகின்ற யானை வெடிகளுக்கு யானைகள் தற்போது பழக்கப்பட்டு விட்டன என்கிறார்கள் ஊர் மக்கள். இலங்கையின் ஏனைய பாகங்களிலும் இதேபோன்று யானைத்தொல்லை காணப்படுகின்றபோதும், அங்கே யானை வேலிகள் அமைக்கப்பட்டு பயிர்செய்கைகள் பாதுகாக்கப்படுகின்றன.

இவ்வாறு யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகி மக்கள் மீள் குடியேறியுள்ள பின்தங்கிய எல்லையோரக்கிராமங்களில் வாழுகின்ற மக்களின் பயிர்செய்கைகளை பாதுகாப்பதற்கு மின்சார வேலிகளை அமைக்கவேண்டுமென பல்வேறு வலுவான கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும், அவை மீள்குடியேற்றப்பிரதேசங்களில் நடைமுறையில் இல்லை. ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் யானைகளுக்கான மின்சார வேலிகளை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மேற்படி மீள்குடியேற்றக் கிராமங்களில் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.

அத்துடன் யானைத் தாக்குதலில் மயிர் இழையில் உயிர்தப்பிய சம்பவங்களும் இருக்கின்றன.

ஒவ்வொரு குடும்பமும் தமக்குத் தேவையான மரக்கறிகள் இதர பயிர்செய்கைகள் வீட்டுத்தோட்டங்கள் என்பவற்றை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால், இந்தக் காட்டு யானைகளின் தொல்லையால் அதைக்கூட செய்யமுடியாமலும், ஏன் விவசாயச்செய்கை மூலம் அறுவடை செய்கின்ற நெல், கச்சான், உளுந்து போன்ற தானியங்களைக்கூட வீடுகளுக்குள் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கமுடியாது. என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மற்றொரு பாரிய பிரச்சினையாக குரங்குகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது.

பொதுவாக வீடுகளுக்குள் சமைத்து வைத்திருக்கின்ற உணவுகளைக்கூட ஆட்கள் இல்லாத வேளையில் ‘அவேஸ்’ செய்து விடுகின்றன.

அது மட்டுமா? குரங்குகள் கைத்தொலைபேசிகளை எடுத்துச்செல்கின்றன. துவைத்து உலர விடுகின்ற ஆடைகளை கொண்டு செல்கின்றன. கைதவறி எந்தப்பொருளையும் வெளியில் வைக்க முடியாதிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அண்மையில் அலுவலகங்களுக்குள் புகுந்த குரங்குகள் அலுவலக பொருட்களைச் சேதமப்படுத்தியிருந்தன.

இவ்வாறு காட்டுயானைகளிலிருந்து உயிர்களையும் உடமைகளையும் பயிர்செய்கைகளையும் பாதுகாக்க வேண்டியஒரு நிலையில் மீள்குடியேறிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.