பா.ஜ.கவின் கூட்டணித் தூது: தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள்

(எம். காசிநாதன்)

கருணாநிதியின் புகழஞ்சலிக் கூட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்திடம், கூட்டணிக்கு அழைப்பு விடும் கூட்டமாக, ஓகஸ்ட் 30 ஆம் ​திகதி நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான நிதின் கட்ஹரி, காஷ்மிர் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்று, கருணாநிதியின் சாதனைகளை எடுத்துரைத்தார்கள்.மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்பதற்காகவும் தமிழ்நாட்டையும் தாண்டி, இந்திய அளவில் கருணாநிதி செய்த சாதனைகளையும் பட்டியலிட்டனர்.

மாலைப் பொழுதில் நடைபெற்ற அக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றின் சார்பில் பேசிய தலைவர்களின் பேச்சுகள்தான், முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றன.

பா.ஜ.க சார்பில் பேசிய நிதின் கட்ஹரி, காங்கிரஸுக்குத் தலைவலி கொடுக்கும், நெருக்கடி நிலைமை பற்றி விவரித்துப் பேசினார். “தி.மு.கவும் ஜனசங்கமும்தான் நெருக்கடி நிலைமையை முதலில் எதிர்த்தன. முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான் எதிர்த்தார். அதிலும் குறிப்பாக, தி.மு.க, அதற்காக ஆட்சியை இழந்தது. ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்கள், குறிப்பாக ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், கைது செய்யப்பட்டார்கள்” என்றெல்லாம் எடுத்துச் சொல்லி, காங்கிரஸுடன், தி.மு.க கூட்டணியைத் தொடருவது, கருணாநிதியின் அரசியல் பயணத்துக்கு மாறானது என்பதை, மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

நிதின் கட்ஹரி பேசும்போது, மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு போன்றவர்களுக்கு சங்கடத்தைக் கொடுத்தது.

ஆனாலும், “பா.ஜ.கவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பல கொள்கைகளில் ஒற்றுமை இருக்கிறது” என்று நிதின் கட்ஹரி கூறிய போது, மேடையில் இருந்த ஸ்டாலின், அவரை ஆச்சரியத்துடன் பார்த்ததைக் காண முடிந்தது. பா.ஜ.கவும் தி.மு.கவும் கூட்டணி சேராது. ஏனென்றால், அது தி.மு.கவின் கொள்கைகளுக்கு மாறானது மட்டுமல்ல, தேர்தல் இலாபத்தைத் தராது என்ற ஒரு கருத்து, சில பல வாரங்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாகத் தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் புகழஞ்சலிக் கூட்டத்தில், பா.ஜ.கவின் அகில இந்தியத் தலைவர் அமித் ஷாவே கலந்து கொள்கிறார் என்று செய்திகள் வெளிவந்ததில் இருந்து, ‘பா.ஜ.க – தி.மு.க கூட்டணி’ பத்திரிக்கைகளுக்குத் தலைப்புச் செய்தியாக ஆனது.

ஆனால், சிறுபான்மையின வாக்குகள் சிதறிப்போய் விடும் என்பதை உணர்ந்த ஸ்டாலின், தி.மு.கவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றே, ஆற்றிய முதல் உரையில், “இந்தியாவைக் காவி மயமாக்கும் நரேந்திர மோடியின் ஆட்சிக்குத் தக்க பாடம் புகட்டுவோம்” என்று கூறி, முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆனாலும், அந்தக் கூட்டணி சலசலப்பு பா.ஜ.கவைப் பொறுத்தவரை நிற்கவில்லை. தேசியத் தலைவர்கள் அஞ்சலிக் கூட்டத்துக்கு, அமித் ஷா வரவில்லையென்றாலும், அக்கட்சியின் மத்திய அமைச்சரான நிதின் கட்ஹரி வந்தார்.

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால், வாக்குகள் கிடைக்காது என்பதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய ஹட்கரி, “கொள்கைகள் மிக முக்கியம்; அதேநேரத்தில் அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக முடிவு எடுக்க வேண்டியதும் முக்கியம். கொள்கை, அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு இடையில், தொலைநோக்குப் பார்வையுடன் முடிவு எடுக்கும் தலைமைப் பண்பு உள்ளவர் கருணாநிதி” என்று பாராட்டினார்.

இந்தப் பாராட்டுதலின் பின்னணியில் இருப்பது, ஒன்றே ஒன்றுதான். கொள்கை அளவில் எங்களுடன் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அரசியல் நிர்ப்பந்தம் வரும் போது, அதற்கு ஏற்றாற்போல் முடிவு எடுப்பதுதான் தலைமைப் பண்பின் அடையாளம்” என்று, புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினுக்கு, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய மேடையில், நிதின் கட்ஹரி தூது விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆகவே பா.ஜ.கவின் பேச்சு, தி.மு.கவைக் கூட்டணிக்கு அழைக்கும் தூதாகவே அரங்கேறியது.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் சிறுபான்மையின முகமும், தி.மு.கவுடன் பல முறை கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவருமான குலாம் நபி ஆசாத் பேசினார்.

அவர் பேசும் போது, “கலைஞர், தன் கொள்கை கோட்பாடுகளை, எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காதவர். அவர் அண்மைக் காலமாக, உடல்நிலை குன்றி இருந்தார். இல்லாவிட்டால் மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோதத் திட்டங்கள் பலவற்றைக் கடுமையாக எதிர்த்திருப்பார்” என்று பூடகமாகப் பேசி, ஸ்டாலின் தலைமையில் தி.மு.க, மத்திய அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்கவில்லை என்பது போன்ற தோற்றத்தை மேடையில் ஏற்படுத்தினார்.

அத்துடன் அவர் நிற்கவில்லை. “தந்தையின் உண்மையான மகனாக, மு.க. ஸ்டாலின் திகழ்வார் என்று நம்புகிறேன். கலைஞர் 75 ஆண்டு காலம் எழுப்பிய குரலுக்கு ஏற்ப, ஸ்டாலின் செயல்படுவார் என்று, இங்கே கூடியுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் நம்புகிறார்கள்” என்றார்.

காங்கிரஸ் தரப்பில் மட்டுமின்றி, மேடையில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களும் பா.ஜ.க எதிர்ப்பில் தி.மு.க இன்னும் உறுதியாகவும் தீவிரமாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதை, வெளிப்படையாகவே அறிவித்தார். அந்தநேரத்தில், பா.ஜ.க சார்பில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்ஹரி, மேடையில் இல்லை. மற்ற மதசார்பற்ற கட்சித் தலைவர்கள் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தார்கள்.

குலாம் நபி ஆசாத்தின் பேச்சில், பா.ஜ.கவுடன் கடுமையாக மோதுவதற்கு, தி.மு.க தயாராக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருப்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் மரணங்களுக்குப் பிறகு, தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் நட்பு அதிகமாகி வருகிறதோ என்ற அச்சம், காங்கிரஸ் மனதில் உதித்திருப்பதும் அவரது பேச்சில் எதிரொலித்தது.

ஆகவே, காங்கிரஸைப் பொறுத்த மட்டில் பா.ஜ.கவையும் மத்திய அரசாங்கத்தையும் ஸ்டாலின் இன்னும் கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்பதும், அதன் மூலம் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற எண்ணத்தை, தி.மு.க முழுமையாக விட்டுவிட வேண்டும் என்றும் எண்ணுவதாகவே, குலாம் நபி ஆசாத்தின் பேச்சில் எதிரொலித்தது.

அதேசமயத்தில், மேற்கு வங்கத்திலிருந்து வந்த திரினாமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓப்ராயின் பேச்சு, “காங்கிரஸுடன், தி.மு.க சேர வேண்டும்” என்பதற்குப் பதிலாக, “மாநிலக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து, பா.ஜ.கவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்” என்று முன் மொழிந்தார்.

இது, காங்கிரஸும் வேண்டாம், பா.ஜ.கவும் வேண்டாம் என்ற மம்தா பனர்ஜியின் வியூகமாகவே இருந்தது. காஷ்மிரிலிருந்து வந்த பரூக் அப்துல்லா பேச்சும் சற்று விலகியே எதிரொலித்தது. அவரது பேச்சு, முழுக்க முழுக்க மதசார்பின்மை, சமத்துவம் போன்றவற்றுக்கு, பா.ஜ.க அரசாங்கத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றி விளக்கி, இதைத் தடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்றார்.

அவரைப் பொறுத்த மட்டில், காங்கிரஸ், மாநில கட்சிகள் என்று தனித் தனியாகப் பிரிந்து நின்று, பா.ஜ.கவுக்கு மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் வாய்ப்பை, 2019இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்து விடக்கூடாது என்பதை வெளிப்படுத்தியது.

இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய சுதாகர் ரெட்டியும் மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேசிய சீத்தாராம் எச்சூரியும் “காங்கிரஸ் வேண்டாம், பா.ஜ.க வேண்டாம், மம்தா பனர்ஜி வேண்டாம், ஆனால், மதசார்பற்ற சக்திகள் எல்லாம் கொம்யூனிஸ்ட் தலைமையில் ஒன்று சேர வேண்டும்” என்பது போல அமைந்திருந்தன.

இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணியா, காங்கிரஸ் கூட்டணியா என்று முடிவு எடுக்க வேண்டிய நிலையில், தி.மு.கவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் இருக்கிறார்.

‘பா.ஜ.கவைக் கடுமையாக எதிர்த்துப் பேசுங்கள்’ என்று, என்னதான் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் பேசினாலும், ராகுல் காந்தியோ, அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களோ, மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க அரசாங்கம் பற்றியோ, அ.தி.மு.க பற்றியோ எந்த விமர்சனமும் செய்வதில்லை என்பதையும் ஸ்டாலின் கவனிக்கத் தவறவில்லை. அதேநேரத்தில், நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி, அவர் தமிழகத்தில் முதலமைச்சராகும் வாய்ப்புக்கு ஏற்ற கூட்டணி அமைப்பதில், நெருக்கடியை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் தெளிவாகவே காய் நகர்த்துகிறார்.

அதனால்தான், “இந்தியா முழுவதும் காவி பூச நினைக்கும் மோடி அரசாங்கத்துக்குப் பாடம் புகட்டவும், முதுகெலும்பு இல்லாத மாநில அரசாங்கத்தை நீக்கவும் உழைப்போம்” என்று புதிய தலைவராகப் பொறுப்பேற்றவுடன் நிகழ்த்திய உரையில் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியா, தமிழக முதலமைச்சர் பதவியா என்ற சவாலை ஸ்டாலின் எப்படிக் கையாளப் போகிறார் என்பதில்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.