புலம்பெயர் தேசத்து பழைய மாணவர் சங்கங்கள்

கடந்த ஐந்தாறு வருடங்களுக்குள் புலம்பெயர்ந்த மண்ணில் மிகப்பிரபலமாக வளர்ச்சியடைந்திருக்கும் துறை, ஊரிலுள்ள பாடசாலைகளின் பழையமாணவர் சங்கங்கள். அந்த பாடசாலைகளில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் திடீரென்று தங்கள் பாடசாலைகளின் மீது காதல் கொண்டு பூமியை பிளந்துகொண்டு எழுந்திருக்கும் அந்த காட்சி புல்லரிக்கவைப்பவை. சொல்லப்போனால், இந்த பழைய மாணவர் சங்கங்கள் அரசியல் கட்சிகளைவிட பலம்வாய்ந்த தரப்புக்களாக – ஆளணியும் – பணபலமும் பொருந்திய அமைப்புக்களாக – கடந்த சில வருடங்களில் வளர்ச்சியடைந்திருக்கின்றன. ஊரில் சில விடயங்களை செய்வதற்கு இந்த பழைய மாணவர் சங்கங்களை அணுகினால்தான் அது நடக்கும் என்கின்ற வரையிலான கட்டப்பஞ்சாயத்து ரேஞ்சுக்குக்கூட ஒரு சில அமைப்புக்கள் எழுச்சியடைந்திருப்பது வேறுகதை.

இவ்வாறு களம் புகுந்திருக்கும் இந்த பழைய மாணவர் சங்கங்கள் – பழைய மாணவர் குழுக்கள் மலேசியா – தாய்லாந்து என்று போய் நின்று ஒரே வண்ணத்திலான சீருடைகளை அணிந்து படம் எடுத்துப்போட்டு, ரபான் அடித்து பாட்டு பாடுவதையெல்லாம் பெரிதாக குறைகூறக்கூடாது. அது ஒரு இழப்பின் நீட்சி. நினைவிடைதோய்தல். அல்லது, தாங்கள் செல்ல விரும்புகின்ற சுற்றுலாக்களுக்கும் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தங்களின் பாடசாலைகளின் பெயரை சூட்டிக்கொள்ளுதல் என்று பகடியாக கடந்துவிடலாம்.

ஆனால், “ஊரிலுள்ள பாடசாலைகளுக்கு உதவி செய்கிறோம்” – என்ற கணக்கில் புலம்பெயர்ந்த மண்ணில் நடத்தப்படும் நிகழ்வுகளில் புரட்டப்படுகின்ற பணம், அந்த பாடசாலைகளின் பெயரால் புலம்பெயர்ந்த மண்ணில் நிறுவப்படும் பழைய மாணவர் அமைப்புக்களை – முதலிலேயே கூறியதுபோது – ஒரு அரசியல் கட்சி ரேஞ்சில் பொதுத்தளத்தில் கொண்டுபோய் நிறுத்தவது என்பவற்றுக்கு உள்ள சமுதாய பெறுமானம் என்ன? என்பது இன்று ஆழமாக உரையாடப்படவேண்டிய ஒன்று.

தாங்கள் கல்வி கற்ற பாடசாலைக்கு பழைய மாணவர்கள் உதவி செய்வது என்பதும் அதற்கான முயற்சிகளை புலம்பெயர்ந்த மண்ணில் விரிவுபடுத்துவது என்பதும் மிகச்சரியான விடயம்தான். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

ஆனால், அங்குள்ள பாடசாலைகளுக்கு உதவி செய்யவேண்டும் என்பதற்காக பழைய மாணவர் அமைப்புக்கள் செயற்படுவது என்பது வேறு.

தாங்கள் பழைய மணவர் அமைப்புக்களை நிறுவி புலம்பெயர்ந்த மண்ணில் ஒரு முகவரியை பெற்றுக்கொள்வதற்காக அங்குள்ள “பாடசாலைகளுக்கு உதவி செய்கின்றோம்” என்ற பதாகைகளை தூக்கிப்பிடிப்பது வேறு.

இந்த கேள்வியின் வழியாக இரண்டு முக்கியமான நூல்களை உரையாடுவதுதான் இந்த பத்தியின் நோக்கமே தவிர, இதில் தனிப்பட எந்த அமைப்புக்களையும் சாடுவது நோக்கமல்ல என்பதை இங்கு முன்கூட்டியே பதிவு செய்துவிடுகிறேன்.

இன்று வெளிநாடுகளிலுள்ள இந்த பழைய மாணவர் அமைப்புக்கள் தங்கள் பாடசாலைகளுக்கு வற்ற வற்ற ஊற்றெடுக்கும் உதவிகளை அள்ளிக்கொடுக்கவேண்டும், தங்கள் பாடசாலைகளை மிகச்செழிப்புடன் வளர்க்கவேண்டும் என்று வெறிபிடித்து நிற்கிறார்கள். தாங்கள் பெற்றுக்கொள்ளாத பரீட்சை பெறுபேறுகளை தங்கள் பாடசாலைகளில் கல்வி கற்கும் அடுத்த தலைமுறையினர் எடுக்கவேண்டும், போட்டிப்பாடசாலைகளின் பெறுபேறுகளை வெட்டி சாய்க்கவேண்டும் என்றெல்லாம் பதைபதைக்கிறார். கா.பொ.த. சாதரண தர, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வருகின்றபோது, பரீட்சையெடுத்த மாணவர்களின் பெற்றோர்கள் கலவரப்படுவதைவிட, வெளிநாடுகளிலுள்ள அந்த பாடசாலைகளின் பாழைய மாணவர் சங்கள தலைவர் – செயலாளர் – பொருளார்கள் படுகின்றபாடு கொஞ்ச நஞ்சமில்லை. இந்த பாடசாலைகளின் பெயரால் உருவாகியுள்ள வட்ஸ் அப் – வைபர் குறூப்கள் படுகின்ற பாடு பற்றி பேசவே தேவையில்லை.

கொஞ்சம் ஆழமாக மூச்சை இழுந்து வெளியே விடுங்கள்.

இப்போது சொல்லுங்கள்.

முதலில் அந்த பாடசாலை அமைந்த ஊர், அந்த ஊரின் தேவைகள், அங்குள்ள மக்களின் தேவைகள், அங்குள்ள மாணவர்களின் தேவைகள் போன்ற ஆழமான விடயங்கள் குறித்து இந்த பழைய மாணவர் அமைப்புக்கள் எவ்வளவு தூரம் புரிந்துவைத்திருக்கின்றன?

இன்று இந்த பாடசாலை பழைய மாணவர் அமைப்புக்களுக்குள் ஓடி ஒழித்திருக்கும் பெருவாரியானவர்களுக்கு கிடைத்திருக்கும் வசதி என்ன என்று கேட்டால், இந்த அமைப்புக்களுடன் இணைந்திருந்து ஊருக்கு உதவி செய்தால் “பிரச்சினை வராது” என்பது. இந்த “பிரச்சினை வராது” என்பதற்குள் அவர்களுக்கு பல வசதிகள் உள்ளன.

ஒன்று – இந்த அமைப்புக்களுக்கு உதவி செய்வதால் ஊருக்கு போகமுடியாது என்ற பிரச்சினை வராது.

மற்றையது, போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி என்று தங்களது கதவை தட்டும் வெளிநாட்டு அமைப்புக்களிடம், தாங்கள் தமது பாடசாலைகளுக்கு அள்ளி அள்ளி கொடுப்பதாக காரணம் சொல்லி வசதியாக ஒதுங்கிக்கொள்ளலாம்.

ஆக, இந்த பழைய மாணவர் அமைப்புக்களின் உருவாக்கம் என்பது வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு எல்லா விதத்திலும் ஒரு அரிய புகலிடம்.

ஆனால், இவ்வாறு புகலிடத்திலேயே இன்னொரு புகலிடம் அமைத்து அதிலிருந்துகொண்டு உதவிகளை அள்ளி வழங்குவதாக தங்களை முன்னிலைப்படுத்தும் இந்த அமைப்புக்கள் எவ்வளவு தூரம் தங்களது பாடசாலைகள் அமைந்துள்ள ஊரின் முழுயான தேவைகளை அறிந்து வைத்துள்ளார்கள்.

விரல் மடித்து சொல்லுங்கள்

தற்போது தங்களது ஊரின் சனத்தொகை எவ்வளவு என்று எத்தனை பழைய மாணவர் அமைப்புக்களுக்கு தெரியும்?

சரி, ஊரில் இன்னமும் விடுபடாத காணிகள் குறித்த விவரமாவது தெரியுமா, அங்குள்ள பாடசாலை மாணவர்கள் – முன்பள்ளி மாணவர்கள் குறித்த தரவுகள் தெரியுமா? அவர்களில் எத்தனைபேர் ஊரிலுள்ள பாடசாலைக்கு போகிறார்கள் – எத்தனைபேர் வெளியூர் பாடசாலைகளுக்கு போகிறார்கள் என்று தெரியுமா? எத்தனை பிள்ளைகள் கல்வி கற்பதை விரும்பவில்லை என்ற விவரம் தெரியுமா? ஊரின் கடந்த கால கல்வி வளர்ச்சி மற்றும் பெறுபெறுகளில் உள்ள எழுச்சி – வீழ்ச்சி போன்றவற்றை ஆராய்ந்து அதற்கான காரணங்களை அறித்துள்ளார்களா?

மறுபுறத்தில், குறிப்பிட்ட பாடசாலை அமைந்துள்ள ஊரின் பாரம்பரிய தொழில் என்ன, அந்த தொழில் வாய்ப்புக்களும் அந்த ஊருக்கே உரித்தான வளங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் அல்லது வெளியாட்களின் சுரண்டல்கள், இதன் வழியாக எவ்வளவு தூரம் ஊரின் கல்வித்துறை மறைமுகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான கரிசனை இவை பற்றியெல்லாம் –

வெளிநாட்டில் மிக வசதியாக “நாங்கள் எங்களின் பாடசாலை வளர்ச்சிக்காக hoppers night” நடத்துகிறோம் என்று கூறும் அமைப்புக்கள் எவற்றுக்காவது முழுமையான புரிதல்கள் உண்டா?

ஒரு பாடசாலைக்கு உதவி செய்வது என்பது அங்கு விழுந்து கிடக்கின்ற கரும்பலகையை தூக்கி நிறுத்துவதோ அல்லது தங்களது தடிப்பை காட்டுவதற்கு நான்கு கணனிகளை கொண்டுபோய் பொருத்திவிட்டு வருவதோ அல்ல. அந்த பாடசாலையின் ஊடாக வளரப்போகும் பரந்த சந்ததி ஒன்றின் சகல தேவைகளையும் ஒருங்கு சேர கண்டறிந்து நீர் ஊற்றி வளர்ப்பது. அதற்கு ஒரு ஊர் எல்லையின் விளிம்பிலிருந்து பணியாற்றத்தொடங்கவேண்டும். புலம்பெயர்ந்துள்ள பழைய மாணவர் அமைப்புக்களால் அதனை செய்யமுடியாது என்று யாரும் வாதம் செய்யவில்லை. அதற்கான சரியான அணுமுறையை யாரும் கடைப்பிடிக்கவில்லையோ என்ற கேள்விதான் இங்கு வியாபித்து நிற்கிறது.

சொல்லப்போனால், இன்று ஊரிலுள்ள பாடசாலைகளின் பெயரால் வெளிநாடுகளில் மூலைக்கு மூலை முளைத்திருக்கின்ற கிளைகளால், தாயகத்திலுள்ள அத்தனை ஊர்களையும் வேறு தளத்துக்கு கொண்டுபோக முடியும். அதற்கு சரியான அணுகுமுறை பின்பற்றப்படவேண்டும். அது என்ன அணுகுமுறை என்பதை மேலே கொஞ்சம் உரையாடியிருந்தோம்.

கருணாகரன் எழுதிய “இப்படியும் ஒரு காலம்” என்ற நூலும் சமீபத்தில் வாசித்த ஜெராவின் “நிலம் இழந்த கதைகள்” என்ற நூலும் இந்த பதிவை எழுதுவதற்கான உந்துதலை தந்தன.

ஊர்களின் செழிப்பு – அந்த ஊர்கள் இழந்துகொண்டிருக்கும் வனப்பு – இழந்துவிட்ட வளங்களின் பரிதவிப்பு போன்ற விடயங்களை கருணாகரன் தனது அனுபவத்தின் வழியாகவும் ஆய்வின் வழியாகவும் இப்படியொரு காலத்தில் எழுதியிருக்கிறார்.

ஜெரா தனது நூலில் சமூகப்பெறுமானங்களை முன்னிலைப்படுத்தி எழுதிய பிரதியாக நிலம் இழந்த கதைகளை கொண்டுவந்திருக்கிறார். மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கும் சிறிய புத்தகம்தான். ஆனால், ஆழக்கிளை பரப்பிக்கிடக்கும் பல முக்கிய விடயங்களை இந்த சிறிய நூலின் வழியாக சமூகத்திடம் உரையாடுவதற்கு முயற்சித்திருக்கிறார்.

ஊர் குறித்த ஏக்கமும் ஆர்வமும் கொண்டவர்கள் படித்துப்பாருங்கள். இப்படியான பிரதிகள் தொடர்ந்து வரவேண்டியவை.

(ப. தெய்வீகன்)