புலிகளிடமிருந்து சிறிலங்காவை காப்பாற்றிய மகிந்த! மைத்திரியிடமிருந்து ஜனநாயகத்தை காப்பாற்றி ரணில்! இந்த இருவரிடமிருந்தும் சஹ்ரான் போன்றவர்களையே காப்பாற்றி வைத்திருந்த மைத்திரி!

(ப. தெய்வீகன்)
கடந்த இரண்டு வாரங்களாகவே முஸ்லிம் மக்களின் வீடுகள், மசூதிகள் போன்றவற்றில் சிறிலங்கா பொலீஸாராலும் சிறப்பு படையினராலும் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கத்திகள் மற்றும் வாள்களைவிடவும் கூரான ஆயுதங்களோடு அந்த தம்பிமார் வீதி வீதியாக கத்தியபடி வருகிறார்கள். கடைகளின் மீது கற்களை வீசியெறிந்து உடைந்து நொருங்கும் கண்ணாடி சத்தங்களில் ஆனந்தம் கொள்கிறார்கள். மேலும் மேலும் சத்தமிட்டவாறு கையில் கிடப்பவற்றையெல்லாம் வீசியெறிந்து இயன்றளவு சேதம் செய்கிறார்கள். வீடு வீடாகவும் வீதி வீதியாகவும் கால் நடையாகவும் வாகனங்களிலும் சென்று கண்டதையும் உடைக்கிறார்கள். தீயிட்டு கொழுத்துகிறார்கள். கடைகள், மசூதிகள், வீடுகள் எல்லாம் ஒங்கிய ஒளிப்பிழம்புகளாக இரவெல்லாம் எரிந்துகொண்டிருந்தன.