புலிகளின் சிறைச்சாலையில் தமிழ்ப்பெண்கள் (Part 4)

பதினைந்து நாட்களின் பின்னர் பல கைதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் விலங்கிடப்பட்டு ஒருவரை ஒருவர் பிடித்தபடி நடக்க உத்தரவிடப் பட்டனர். அனைவரும் வான் ஒன்றினுள் ஏற்றப்பட்டு ஓரிடத்தில் இறக்கப்பட்டு அதேபோல நடக்க வைக்கப் பட்டனர். இறங்கிய பிரதேசத்தில் அவ்வாறு நடப்பது கடினமாயிருந்தது. ஈவா அதற்கு தலைமை தாங்கினார். யாராவது ஒருவர் வரிசையில் இருந்து தவறினால் பின்னாலிருக்கும் அனைவருக்கும் தலையில் அடி விழுந்தது. அனைவரும் உரிய இடத்தை அடைந்தவுடன் முள்ளுக்கம்பி வேலிக்கு கீழால் தவழுமாறு உத்தரவிடப் பட்டனர். முள்ளுக் கம்பிக்குள் ஆடைகள் சிக்குப்பட்டவர்கள் நிற்காமல் தொடர்ந்து போக வைக்கப் பட்டதில் அவர்களது உடைகள் கிழிந்தன. பதிவான கூரையுடைய கட்டிடத்தினுள் அவர்கள் கொண்டு செல்லப் பட்டனர். பலரின் தலைகள் கூரையில் அடிபட்டன. அனைவரும் இருக்க வைக்கப்பட்டு உள்ளே தள்ளப் பட்டனர்.

மறுநாள் அதிகாலை அவர்களது கண்கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. கைவிலங்குகள் அகற்றப் பட்டன. எனினும் அவர்கள் கால்விலங்குகளுடன் அடைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அன்றிரவு ஒரு பெரிய விருந்துபசாரத்தின் பின் விடுதலை செய்யப்படுவார்களென அஷாந்தி நக்கலாகச் சொன்னார்.
அவர்களைக் குளிக்குமாறு உத்தரவிட்டார். ஏறத்தாழ 50 கைதிகள் அங்கிருந்தனர். அம்முகாம் ஒரு சிறிய ஒற்றையடிப் பாதையுடன் கூடிய தென்னந் தோப்பில் அமைந்திருந்தது. அவர்களது அன்றைய முதல் உணவாக கத்தரிக்காயும் சோறும் மத்தியானம் கொடுக்கப்பட்டது. வரப்போகும் விருந்துபசாரம் பற்றி தொடர்ந்து ஆர்வமாக திரும்பத் திரும்ப கூறப்பட்டது.
மாலை 7 மணியளவில் கைதிகள் கட்டப்பட்டு விலங்கிடப்பட்டு இருண்ட அறையொன்றினுள் கொண்டு செல்லப் பட்டனர். ஈவா ஆரம்பித்து வைக்க எதிர்பார்த்த விருந்து தொடங்கியது. ஈவா அடிப்பதை ஆரம்பித்து மற்றவர்களையும் தடிகளை எடுத்து அடிக்குமாறு கூறினார். அடிபட்டவர்களுள் பாட்டிமார்களிலிருந்து பல பிள்ளைகளுக்கு தாயானவர்களும் அடங்குவர்.
அந்நாடுகளில் சித்திரவதை தொடர்ந்தது. சிலர் அடிக்கப்பட்டனர். சிலர் கப்பிகளில் தொங்கவிடப் பட்டனர். இரத்தம் ஓட அடிக்கப்பட்ட சிலர் தண்ணீர் மறுக்கப்பட்டு வெய்யிலில் நிற்க வைக்கப்பட்டனர்.
வெய்யிலில் நின்றவர்கள் இடையிடையே நிழலுக்குள் கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஒரே மாதிரியான கேள்விகளும் குற்றச்சாட்டுகளும் இயந்திரத்தனமாக மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டன.
ஒரு நாள் பவளம்மா இரத்தம் சிந்தும்வரை அடிக்கப்பட்டார். பின்னர் வெய்யிலில் நிற்க வைக்கப்பட்டார். பலவீனமடைந்து போய் பேச முடியாதவராய் நின்ற பவளம்மா தண்ணீர் தருமாறு கேட்டார். மலகூடத்திற்கு பாவிக்கப்படும் தண்ணீர் கோப்பை அவ்வயது முதிர்ந்தவர் முன்னால் வைக்கப்பட்டது. அகலி உயர்த்திய தடியுடன் நின்றார். ஈவா பவளம்மாவை உற்றுப்பார்த்து ” உண்மையைச் சொல்! எத்தனை இந்திய இராணுவத்தினருடன் நீ கதை;திருக்கிறாய் ? ஈபிஆர்எல்எல் எத்தனை பேர்? நீ ஒரு நல்ல பெண் என்றும் தங்களுக்கு சாப்பாடு தந்தவர் என்றும் அவர்கள் எங்களுக்கு கூறினார்கள்” என்று உறுமினார்.
அன்று இரவு பவளம்மா அறைக்குள் கொண்டு செல்லப்பட்டாள். யாராவது தண்ணீர் கொடுத்தால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டது. மறுநாள் அகலி அவரை வெளியே கொண்டு போய் வெய்யிலில் நிற்க விட்டாள். சூரியன் மேலே செல்ல பவளம்மா மயங்கிப்போனார். பழைய குற்றச்சாட்டுக்கள் திரும்பவும் சுமத்தப்பட்டு, உண்மையைக் கூறுமாறு கேட்கப்பட்டது. பவளம்மா பேச முயற்சித்தார். சத்தம் வெளிவரவில்லை. அறைக்குள் அவர் விடப்பட்ட பின் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என மற்றைய கைதிகள் மீண்டும் எச்சரிக்கபடுபட்டனர்.
இவ்வாறு பவளம்மா நடாத்தப்பட்டது இது இரண்டாவது தடவையாகும். முன்னர் அவர் மூன்று நாட்கள் தண்ணீர் சாப்பாடின்றி விடப்பட்டார். ஒருநாள் பப்பி என்ற கைதி- தனது சகோதரன் ஈபிஆர்எல்எவ் இல் இருக்கிறார் என சித்திரவதை தாங்காமல் ஒப்புக்கொண்டவர்- பவளம்மாவிற்கு மிகப்பெரிய ஆபத்தின் மத்தியில் மற்றவர்களுக்குத் தெரியாமல் தண்ணீர் கொடுத்தார்.
மறுநாள் காலை பவளம்மாவிற்கு வெறும் தேநீர் கொடுக்கப்பட்டது. பின்னர் மதிய உணவும் கொடுக்கப்பட்டது. அன்று அவர் சித்திரவதைக்கு ஆளாகவில்லை. அடுத்த நாள் காலை ஈவா வந்தார். ” ஓ உனது குரல் திரும்பி விட்டது ” என அச்சுறுத்தும் வகையில் கூறினார். முதலில் பலாமரமொன்றின் கீழ் வைத்து பவளம்மா விசாரிக்கப்பட்டார். பின்னர் தொங்க விடப்படும் அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் அடித்து நொறுக்கப்பட்டு நிலத்தில் எறியப்பட்டு, சப்பாத்து கால்களால் மிதிக்கப்பட்டார். அவரது பல் உடைபட்டு ரத்தம் சிந்தியது. பவளம்மாவை தண்ணீர் எடுத்து வரவைத்து நிலத்தில் சிந்திய இரத்தத்தை துடைக்க வைத்தனர். ” நீ இனி சாகப் போகிறாய். உண்மையை கூறி விடு ” என அஷாந்தி கூறினார். பவளம்மாவின் கைகள், உள்ளங்கை உட்புறமாக இருக்குமாறு, மேசையில் கிடையாக வைக்கபட்டன. எலும்பு தெரியும் இடங்கள் தடித்த பொருள் ஒன்றினால் அடிக்கப்பட்டன. தனது குற்றங்களை ஒப்புகொள்ள முடிவு செய்யும் வகையில் இருட்டறையில் அவர் வைக்கப்பட்டார். தண்ணீர் கொடுக்கப்படவில்லை. மறுநாள் காலை ஈவா வந்து ” நீ பேசுவதற்கு முடிவு செய்து விட்டாயா?” எனக் கேட்டார். தான் எல்லாவற்றையும் ஏற்கனவே சொல்லி விட்டதாக பவளம்மா சொன்னார். உண்மையை தெரிந்து கொண்ட பின்னர் விடுதலை செய்யுமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக ஈவா சொன்னார். மூன்று நாட்களின் பின் அகலி பவளம்மாவை விசாரித்து விட்டு சுடப் போவதாக பயமுறுத்தினார். அதன் பின் எவ்வித விசாரணையும் நடக்கவில்லை.
சலீம் அதன் பிறகு வந்தார். அதிருப்தியுடன் பேசிய அவர், கைதியை அடித்துத் தான் விஷயம் எடுக்க வேண்டுமென்றும் தானே அக்காரியத்தைச் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்.
மோகனா குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலமென ஒன்றை சலீமுக்கு வாசித்துக் காட்டினார். இரண்டு நாட்களின் பின்னர் பவளம்மாவின் கைகளில் உருக்கிய மெழுகு ஊற்றப்பட்டது. தயாரிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை கைதியை வாசிக்க வைத்து வீடியோ எடுக்கப் பட்டது. இவ்வாக்குமூலத்தில், அவர் ஒருபோதுமே சொல்லாத விடயங்கள் – இந்திய சமாதானப்படைக்குச் சாப்பாடு கொடுத்தது போன்ற விடயங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் பங்கர் கட்டுவது போன்ற வேலைகளில் அவர் ஈடுபடுத்தப்பட்டார். யுத்தம் மீண்டும் தொடங்கிய பின் (யூன் 11) ஒரு நாள் விமானப்படையின் ஹெலிகொப்டர் ஒன்று மேலே வட்டமிட்டது. கைதிகள் மீண்டும் மட்டுவில் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். கால்விலங்கு மீண்டும் மாட்டப்பட்டது. அக்காலத்தில் பவளம்மாவிற்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
சிறிது காலத்தில் ஈவா இடம் மாற்றப்பட்டு, சுதா என்பவர் தலைமைக்கு வந்தார். சுதாவின் தாயாரான பரமேஸ்வரி ராஜரத்தினம் பவளம்மாவின் தாயாரினது பாடசாலை நண்பி. இக்காரணத்தால் பவளம்மாவுக்கு இனி அடிக்க வேண்டாமென சுதா உத்தரவு பிறப்பித்தார். ஏதாவது தேவையென்றால் தன்னை தனிப்பட்ட முறையில் அணுகுமாறு சுதா சொன்னார். பால் கோப்பி கொடுக்கப்பட்டு பவளம்மாவின் வயிற்றுப்போக்குக்கு சிகிச்சை செய்யப்பட்டது.

(தொடரும்…..)