“புலி” என்ற சொல் மட்டுமே அரசியல் பிழைப்புக்காகத் தேவைப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு புலம்பெயர் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் உதவி செய்து வரும் மாற்றுவலுவாளரைச் சந்தித்துப் பேசச் சென்றோம். நாங்க்ள் சந்தித்த அந்த மாற்றுத்திறனாளி, தன்னுடைய பிரச்சினைகளையும் துயரங்களையும் விட, தன்னைப்போலச் சிரமங்களின் (பாடுகளின்) மத்தியிலிருப்போரைப் பற்றியே பேசினார்.நண்பர் கேட்டார், “உங்களுக்கு இங்கே உதவக்கூடிய கட்டமைப்புகள் ஏதும் இல்லையா? அரசியற் தலைவர்கள் யாரும் உங்களை வந்து பாக்கிறதில்லையா?” என.

“மாற்றுத்தினாளிகளுக்கான அமைப்பு இருக்கு. நானும் அதில் உறுப்பினராக இருக்கிறன். அந்த அமைப்பு ஒரு சில உதவிகளைச் செய்யுது. ஆனால், அதனால் ஒரு அளவுக்கு மேல் செய்ய முடியாது. எங்களைப் போல எழுந்து நடமாட முடியாதவர்களுக்கு நிரந்தரமாக ஒரு உதவித்திட்டம் தேவை. மாதந்தம் கிடைக்கக்கூடிய ஒரு ஏற்பாடாக அது இருக்கவேணும். நாங்கள் ஒவ்வொரு தடவையும் போய் ஆருக்கும் கரைச்சல் (தொந்தரவு) குடுக்காமல் எங்கட வங்கிக் கணக்குக்கு வரக்கூடிய மாதிரி ஒரு ஏற்பாடிருந்தால் எங்களுக்கும் மனதுக்கு சுமையாக இருக்காது. உதவியாகவும் இருக்கும். ஆனால், இதைப்பற்றியெல்லாம் ஆர்தான் அக்கறைப்படுகினம்..?” என்று கவலைப்பட்டார்.

நண்பர் கேட்டார், “பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் எனப் பலரும் இருக்கிறார்களே. இவர்களில் யாருடனும் நீங்களோ உங்கள் அமைப்புகளோ பேசிப் பார்க்கவில்லையா?” என.

“நான் பலருக்கும் கடிதங்களைக் குடுத்திருக்கிறன். ஒரு சில இடங்களில் இருந்து பதில் வந்தது. கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கோ. உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறம். விரைவில் உங்களுக்கு நல்லதொரு பதிலைத் தருவோம் என்று. ஆனால், அதுக்குப் பிறகு இதுவரையில் எந்தவிதமான பதிலோ தொடர்போ அவர்களிடமிருந்து கிடைக்கேல்ல. எங்கட மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்கு சிலர் சிறிய அளவிலான உதவிகளைச் செய்திருக்கினம். ஆனால், அதெல்லாம் ஒரு தற்காலிக உதவிகள்தான். எங்களைப் பொறுத்தவரையில் எங்கட பிரச்சினை ஆயுள் முழுவதுக்கும் தொடருகிற ஒரு பிரச்சினை. இதுக்கான திட்டங்களே தேவை..” என்று பதிலளித்தார் அவர்.

அவர் சொல்வது உண்மைதான்.

சம்மந்தனோ, கஜேந்திரகுமாரோ, விக்கினேஸ்வரனோ, மாவிட்டபுரம் சேனாதிராஜாவோ அல்லது இவர்கள் அணியில் இருக்கும் வேறு எந்தத் தலைவரோ ஒரு மாற்று வலுவுள்ளோரைச் சந்தித்திருக்கிறார்களா என எண்ணிப் பார்த்தேன்.

ஒரு அடையாளமும் இல்லை.

எத்தனையோ பேரை எதற்காகவெல்லாமோ சந்தித்திருக்கிறார்கள். இந்த மண்ணுக்குப் பங்களித்தவர்களைச் சந்திப்பதற்குத்தான் மனசு வரவில்லை இவர்களுக்கு.

இவர்கள் எப்போதாவது ஒரு பெண்தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்குச் சென்று அவர்கள் படுகின்ற பாடுகளைப் பார்த்திருக்கிறார்களா?

தந்தையும் தாயும் இல்லாத ஒரு பிள்ளைக்கான கற்கும் செலவீனத்தைப் பொறுப்பெடுத்திருக்கிறார்களா?

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட ஒரு போராளிக்கோ அல்லது அந்த நிலையில் உள்ள ஒருவருக்கோ ஒரு படுக்கைக்கட்டில் வாங்கிக் கொடுத்திருக்கிறார்களா?

அடையாளமாக – ஒரு முன்மாதிரியாக இவர்கள் தாங்கள் பெற்ற உயரிய சம்பளத்தில் இதைச் செய்து காட்டியிருக்க வேண்டும்.

எவருமே இதைச் செய்யவில்லை.

ஏனென்றால், இவர்களில் எவருக்குமே வலி தெரியாது.

ஆனால், இதைப் புலிகள் செய்தனர். மாற்றுத்திறனாளிகாக இருந்த போராளிகளுக்குத் தொழிற்பயிற்சிகளை வழங்கினார்கள். பராமரிப்புச் செய்தனர். அவர்களுடைய உளநிலை தளர்வடையாமல் இருப்பதற்காக மகிழ்ச்சிகரமான ஏராளம் ஏற்பாடுகளைச் செய்தனர். முன்னுரிமைகளை சமநிலைப்படுத்தி வழங்கினார்கள்.

இவர்களுக்கே “புலி” என்ற சொல் மட்டுமே அரசியல் பிழைப்புக்காகத் தேவைப்படுகிறது. அவர்கள் காட்டிய அக்கறைகள் அல்ல.

Karunakaran Sivarasa
1 hr ·