பெரியார் பற்றி இன்னொரு பார்வை

என் தமிழ்சமூகம் பின்தங்கி கிடப்பதற்கு சாதி ஏற்றதாழ்வும் மத மூட நம்பிக்கைகளும் ஒரு காரணம் என்பதால் அதை எதிர்த்து களமாடிக் கொண்டிருந்த பெரியார் என் மனதில் ஒரு இடத்தைப் பிடித்திருந்தார். அதனால், பெரியாரை கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

என் தமிழ் சமூகத்தின் இந்த நிலைக்கு காரணம் அதுமட்டுமல்ல என்பது விளங்க தொடங்கியதும் பெரியாரை விமர்சன ரீதியாக பார்க்கத் தொடங்கினேன்.

வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியிருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்த அந்த பஞ்சத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நடந்திருக்கின்றன.

அதிலும், நல்லதங்காள் காலமான தாது வருடத்தில் தமிழகத்தில், கால்வாசிக்கும் அதிகமான தமிழர்கள் பஞ்சத்தில் இறந்திருக்கின்றனர்.

இருந்தும்…
வெள்ளையர்கள், உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தாமல், பருத்தி போன்ற, அவர்களுக்கு தேவையான பணப் பயிர்களில்தான் கவனம் செலுத்தினர்.

மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து கிடைத்துக் கொண்டிருந்த சிறிதளவு உணவுப் பொருட்களும் வெள்ளையர்கள் உருவாக்கிய எஸ்டேட்டுகளால் நின்று போனது.

வடுகர்களால் நிலங்களை இழந்திருந்த தமிழர்கள், பஞ்சம் பொழைப்பதற்காக.. கிளம்பினர்.

அப்படி பஞ்சம் பொழைக்க புறப்பட்டவர்களை வைத்துத்தான் உலகமெல்லாம் காடுகளை அழித்து, எஸ்டேட் உருவாக்கப்பட்டது.

செல்வச் செழிப்போடு வாழ்ந்த தமிழர்களின் இந்த இழி நிலைக்கான காரணமான வடுகர்களின் ஆட்சியைப் பற்றியோ… வெள்ளைக்கார கொள்ளையர்கள் ஆட்சியைப் பற்றியோ பெரியார் கண்டு கொள்ளாதது, எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

இந்து மதத்தை எதிர்க்கிறார்..
இந்து வெறி நாயக்கர் ஆட்சியை கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்.

ஏன்!…இது பெரியாரின் மீது சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.

வெள்ளையர்களை எதிர்த்து நாடே போர்க் கோலம் பூண்டிருக்கையில்.. வெள்ளையர்களை ஆதரிக்கும் நீதிக் கட்சியில் செயல் படுகிறார்.

தமிழ்நாட்டில் அரசியல் செய்ய தமிழர் பெயரில் இயக்கம் உருவாக்க பலர் சொல்லியும் திராவிட கழகம் காண்கிறார்!

பின்னர் அதுதான்..
தமிழ்நாட்டை தமிழரல்லாதோர் ஆள்வதற்கு மேடை அமைத்துக் கொடுக்கிறது.

இப்பொழுது அந்த திராவிட இயக்கத்தினர்தான், தமிழ்சாதிகளுக்குள் பகை நீடிக்க முயற்சிக்கின்றனர்.

தென்பகுதியில் முக்குலத்தினருக்கும், மள்ளர்களுக்கும், இணக்கம் துளிர்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்..

காலமெல்லாம் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையில் கழித்த தேவர் மகானைப் பற்றி அவதூறாக எழுதி பதட்டத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

தமிழ்சாதிகளில் சிலவற்றை, ஆதிக்க சாதியென்றும், சிலவற்றை ஒடுக்கப்பட்டவைகளாகவும் ஆக்கியவர்களே (பிராமணர்கள் துணையோடு)வடுகர்கள்தான் என்பதை இதுவரை தமிழர்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்தார்கள்.

அந்தக் காலம் மலையேறிவிட்டது!

இனி,
தமிழ்சாதிகளுக்குள் பகைவளர்த்து…
தமிழ்சாதிகளில் பிறந்தவர்களை சாதி வெறியர்களாக சித்தரித்து ..
தமிழர்கள் அல்லாதோர் தமிழ்நாட்டை ஆள நினைப்பதை மூட்டை கட்டிக் கொள்ளுங்கள்!

தமிழ்சாதிகளில் பிறந்து உண்மையிலேயே பெரியார்களாக வாழ்ந்தவர்களைப்பற்றி தொடர்ந்து எழுதுவதாக உள்ளேன்!

பார்ப்போம்!

(பாவல் சங்கர்)