பொங்கலுக்குள் பொதி…..?

(சாகரன்)
 
பொங்கலுக்குள் பொதி என்பது இலங்கைத் தமிழர்களுக்கு ஆண்டாண்டு காலமாக தமிழ் மிதவாதத் தலமைகளினால் வழங்கப்படும் வாக்குறுதி இம்முறையும் வழங்கப்பட்டுள்ளது. என்ன இம்முறை அது மாசி 4 இற்குள் என்று இன்றைய புதிய தலமையினால் தேதி தள்ளி வழங்கப்பட்டிருக்கின்றது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்” எனபதை மரபு வழியில் நம்பிய தமிழர்கள் இம்முறையும் இதனை நம்பியே? இருக்கின்றனர். ஆனால் யதார்த்தங்கள் வேறுவிதமாக இருக்கின்றன.
நல்லாட்சியுடன் அதீதமாக விதைக்கப்பட்ட இந்த நெல்லு அண்மையில் ஏற்பட்ட இரணைமடு ‘உடைப்பில்” வேளாண்மை அள்ளுப்பட்டுப் போய் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டது போல் ஆகியுள்ளது. நல்லாட்சியின் தேநிலவுகள் ஆட்சி அமைந்தவுடனேயே கசந்ததையும் இது சேடமிழுத்த நிலையில் நாலு வருடங்கள் ஓட இறுதியில் பிரதமர் பதவியை மாற்றி மகிந்தாவிற்கு கொடுத்து பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டு பின் அது தமிழ் தரப்பு தாம்பாள எதிர்கட்சித் தலைவர் பதவி பறிபோக காரணமானது. இத்தனைக்கும் ரணிலின் மேற்குலக ஆசீர்வாத அரசுக்கு அதி தீவிர முண்டு கொடுத்தது என்னவோ தமிழ் தரப்பு தான். ஏனைய சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் கழுவிய நீரில் நழுவிய மீனாக இருந்து பதவிகளையும், பொறுப்புக்களையும் பெற வெறுங்கையை சூப்பின நிலைக்கு தள்ளப்பட்டதே தமிழ் தரப்பு இராஜதந்திரம்.
 
ஆனாலும் வழமை போல் “பொங்கலுக்குள் பொதி” என்ற நம்பிகையூட்டல்களும் மகிந்தாவை கழுவில் ஏற்றாமல் விடமாட்டோம் என்று வடக்கிற்குள் முடங்கிப் போனதுதான் எமது தமிழீழக் கனவுகள். ‘காக்கா”விற் அடிக்கத்தான் வேணும் முழுமையாக வெளியேற்றத்தான் வேண்டும் என்று ‘தமிழ் தேசியம்” பேசியவர்கள் செயற்பட அது தவறு “நாம் புட்டிற்குள் மாவும் தேங்காய் பூ போல் நாம் இருக்கின்றோம்” அது எமது சகோதரத்து சமூகம் எம்மைப் போலவே உரிமை மறுக்கப்படும் சமூகம் அவளுடனும் இணைந்து பிணைந்தே நாம் உரிமைக்கான போராட்டத்தில் பயணிக்க வேண்டும் கூறியவர்களை துரோகிகள் ஆக்கி மகிழ்ந்ததே “தமிழ் (போலி) தேசியம்’.
 
தமிழ் சமூகம் பலம் மிக்க சமூகமாக தன்னைக் கட்டியமைத்த நிலையிலேயே தனது ஆயுதப் போராட்டப் பாதை ஆரம்பித்துக் கொண்டது. பலவீனமான சமூகமாக தன்னை அழித்துக் கொண்டே ஆயுதப் போராட்டத்தில் தோற்று போனது. தோற்ற பின்பு ஏற்பட்ட சூழலில் மீண்டும் தன்னை பலமான சமூகமாக கட்டியமைக்கக் கூடிய எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கும் தமிழ் தலமைகள் அதிகாரத்திற் வரமுடியவில்லை. மாறாக ஏனைய முஸ்லீம் மலையக சமூகங்கள் கிடைத்த இடைவெளியை அது யுத்த காலத்திலும் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னரான கடந்த 10 வருடத்திலும் ஓரளவிற்கு பயன்படுத்திக் கொண்டன. இதன் வெளிப்பாடுகள் இவ் இரு சமூகங்களும் ஒப்பீட்டு ரீதியில் தமிழ் சமூகத்தை விட பலமான நிலையை நோக்கிய தமது தட வழிப் பாதையில் பயணிக்க இன்று முடிந்திருக்கின்றது. இதன் அர்த்தம் இவ் இரு சமூகங்களும் பெரும்பான்மை சமூகத்திற்குரிய அதேயளவு உரிமைகளை கொண்டிருக்கின்றன என்பது அல்ல அர்த்தம்.
 
ஆண்டாண்டு காலமாக இலங்கை அரசும் தமிழ் தரப்பும் பேசியும் பேசாமலும் இணங்கியும் இணங்காமலும் ஒத்தோடியும் ஓத்தோடாமல் இருந்தும் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்கள் இலங்கையில் சம உரிமையுடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வை அடைய முடியவில்லை என்பதே வரலாறு. இந்த வரலாற்றை ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்று தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் உரிமைக்காக போராட்டத்தின் அகிம்சை வழிப் போராட்ட காலத்தில் இருந்து ஆயுதப் போராட்டம் இதனைத் தொடர்ந்த பாராளுமன்ற போராட்டம் எதிலும் பெற முடியவில்லை. அது இராமநாதனில் ஆரம்பித்து பொன்னம்பலம், செல்வநாயகம் அமிர்தலிங்கம் பிரபாகரன் என்று நீண்டு இன்று சம்மந்தன் வரை இதுதான் வரலாறு.
 
தமிழ் தரப்பிடம் ‘அபிப்பிராமே” கேட்காமல் இலங்கை அரசு, வெளிநாட்டு மூன்றாம் தரப்பான இந்தியாவும் உருவாக்கிய மகாணசபையே இன்றுவரையில் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த உயர்ந்த பட்ச நடைமுறையில் உள்ள அரசியல் தீர்வு ஆகும். இவ்விடயம் ஆழமாக அல்லது தமிழ் தரப்பு தமது அரசியல் செயற்பாடுகளில் கையாளும் இராஜதந்திரங்களை மீள்வாசிப்பிற்குள் உள்ளாக்க வேண்டி பார்க்கப்பட வேண்டிய விடயம்.
அடுத்த பொங்கல் தனிநாட்டித்தான் என்ற கோஷங்களுடன் கடந்து வந்ததே வரலாறு. இந்த அடுத்த பொங்கல் இனிப்பு பண்ட செய்தியை அதிகம் சொல்லி வருபவர்கள் சிங்களத் தலைவர்களை விட தமிழ் தலைவர்களே அதிகம். தற்போது இலங்கை சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் இற்கு தீர்வுப் பொதி கிடைத்துவிடும் என்று எந்த நம்பிகையில் இவர்கள் கூறுகின்றார்கள் என்பதை நாம் சீர்தூக்கி பார்த்து தொடர்ந்தும் கூறி வரும் பொய் புரட்டுகளை நிராகரித்து சரியான மக்களுக்கான தலமையை உருவாக்குவதில் செயற்படுவதன் மூலமே நாம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதை அர்த்த முள்ளதாக்க முடியும்.
 
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த ஜேஆர் ஜெயவர்தன, மகிந்த ஏன் நல்லாட்சி கூட்டரசாங்கத்தினால் உருவாக்க முடியாத அரசியல் அமைப்பு மாற்றத்தினூடான சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முண்டை எடுத்தால் பொறிந்துவிடும் ரணில் அரசால் எவ்வாறு நிறைவேற்ற முடியும்.
 
இத்தனைக்கும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஏதிரான இனவாதத்தின் பிதாமகன் ஜேஆர் இன் பாசறையில் வளர்ந்தவர் அவரின் மருமகன்னான ரணில். கூடவே சந்திரிகா அம்மையார் கொண்டு வந்த சமஷ்டி யிலும் அதிக உரிமையுளள்ள பொதியை பாராளுமன்றத்தில் சம்மந்தருடன் இணைந்து புலிகளின் ஆசீர்வாதத்துடன் எரித்தவர். மேற்குலகின் கைபாவையாக செயற்படுபவர் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான தீர்வை பொங்கல் பொதியாக தருவார் என நம்புங்கள் ‘சுமந்தி” வகையறாக்கள் “நம்புங்கள் நாளை தமிழீழம் பிறக்கும்” என்பது போல் கீறுபட்ட ரெக்காட் போல் திரும்ப திரும்ப கூறுவது எந்த வகையில் ஏற்புடையது அல்ல.
 
ஜேஆரின் மேற்குலக அரசிற்கு பின்பு இலங்கையில் அது போன்ற ஒரு அரசை உருவாக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மேற்குலகிற்கு இருந்தே வந்தது. இதற்கு மாற்றீடாக சரத் பொன்சேகாவை கூட ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கி இதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை(உடைய முன்னரான) ஆதரவளிக்கச் செய்தும் தமது ஆளை வெல்ல வைக்க முடியாத சூழலில் மைதிரியை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரித்தெடுத்து மகிந்தாவின் ஏதேச்சாகரப் போக்கை தமக்கு சாதகமாக்கி ரணிலுடன் இணைத்து தமக்கான அரசை இலங்கையில் நிறுவிக் கொண்டதில் மேற்குலகம் தற்காலி சந்தோஷத்தை மட்டுமே ஏற்படுத்திக் கொண்டது.
 
அது நீண்ட காலம் நீடிக்க முடியவில்லை உள்ளுராட்சி தேர்தலில் மகிந்த அணியினரின் வெற்றியும் செயற்படாத அரசு என்ற நல்லாட்சி அரசும் மீண்டும் மகிந்த வெற்றி பெற்றுவிடுவார் என்பதை ஆய்வறிந்த மேற்குலகம் சொந்த காசில் சூனியம் வைத்த நிலைக்கு தள்ளி செயற்பாடுதான் மைதிரியின் புதிய பிரதமர் மகிந்தவின் நியமனம் பாராளுமன்ற கலைப்பு மீண்டும் ரணில் பிரதமர் தமிழ் தரப்பு உயர்நீதி மன்றத்தில் ரணில் மீண்டும் பிரதமர் ஆவதற்காக தீர்பிற்கான வழக்கு என்ற எல்லாம் இதற்கான கதை திரைக்கதை வசனம் நெறியாழ்கை இசை என்று எல்லாம் மேற்குலகம்hன். இதன் மூலம் மீண்டும் சீனாவிற்கு தளம் அமைக்கு ‘முழுமையாக’ ஆதரவளிக்கு மகிந்த அணியினரை தோற்கடிக்க மக்கள் மத்தியில் ஆதரவு தளத்தை குறைக்க ஆடிய ஆட்டம்தான்.
 
இரண்டு பிரதமர் இரண்டு எதிர்கட்சித் தலைவர் என்று ஆரம்பித்து இன்று ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று முடிந்திருக்கும் ஆட்டங்கள் எல்லாம். இந்த ஆட்டத்தின் முடிவில் சமையலே முடியாத இடத்தில் மடை நடத்தப் போகின்றோம் என்பது போல் ‘பொங்கலுக்குள் பொதி என்பது மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே இதில் சிங்களத் தரப்பை விட தமிழ் தரப்பே அதிக வீச்சில் செய்படுவதே வருத்தத்திற்குரியது.
 
என்றும் போல் பௌத்திற்கு முன்னுரிமை ‘ஏக்ஜ ராஜ்யம்” இணைப்பிற்கு எதிர்பு சமஷ்டி வாசனையே இருக்க கூடாது என்ற கோஷங்கள் ஐதே கட்சியல் பின் வரிசை உறுப்பினர்களிடம் வர முன்பே மாண்பு மிகு பிரதமர் ரணிலின் வாயில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடைன் தேநிலவு கொண்டாடிய மறுதினமே வெளியில் வரத் தொடங்கிவிட்டது. நம்பினால் நம்புங்கள் மக்களே “பொங்கலுக்குள் பொதியாம்”