மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’

(ப. தெய்வீகன்)

புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து, தமிழர் தரப்பில் குழப்பத்துடன் கூடிய மௌனம்தான் காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவுக்குப் பதிலாக அரச தரப்பிலிருந்து எந்தப் பயனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கடந்த வருடம் முழுவதும் கண்டுகொண்ட ஒரே விடயம்.

இது குறித்து அவ்வப்போது குரல் எழுப்புகின்ற போதெல்லாம் எல்லோரையும் பொறுமை காக்குமாறு கோருகிறது கூட்டமைப்பின் தலைமை. சிங்கள மக்களே, தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை தராத மைத்திரி அரசாங்கத்துக்கு எதிராகத் தங்களது நம்பிக்கையீனங்களை வெளியிட்டு வருகின்றபோதும், தமிழர் தரப்புத் தொடர்ந்தும் நம்பிக்கையை மட்டும் பேணவேண்டும் என்று சம்பந்தர் கூறிவருகிறார்.

அந்த வகையில் – தமிழ்க் கூட்டமைப்பினாலும் சிங்களத் தரப்பினாலும் தொடர்ந்தும் ஏமாற்றமடைந்து வருகின்ற தமிழ் மக்கள் பேரவை எனப்படுகின்ற குழு, எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் ‘எழுக தமிழ்’ நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது. புதிய வருடத்தில் தமிழ் மக்கள் தங்களது அரசியல் வேட்கை தொடர்பில் என்னவிதமான மனநிலையுடன் உள்ளார்கள் என்பதை வெளிக்காட்டுவதற்கு இந்த நிகழ்வு களம் அமைக்கப்போகிறது என்று இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளார்கள்.

‘எழுக தமிழ்’ நிகழ்வு முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டபோது, அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரணிகள் உண்மையில் மக்களது உணர்வின் வெளிப்பாடாக நடத்தப்படுபவை. பெருமளவு மக்களின் பங்களிப்பைக் கோரி நிற்பவை. இந்தப் பேரணிகளில் எத்தனை பேர் பங்குகொள்கிறார்கள் என்பதற்கு அப்பால் பங்குகொள்பவர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதிகளாக – அந்த சமூகத்தின் தேவையை முன்வைக்கிறார்கள்.

அந்தத் தேவையுடன்தான் அந்தச் சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்கள் ஜனநாயக வழியில் வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களின் உணர்வுபூர்வமான இந்தக் கோரிக்கையை ஆளும் தரப்புக்கள் நிச்சயம் செவிமடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயக மரபு. அதற்கு எவ்வாறு பதிலளிப்பது, அந்த பதில்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதெல்லாம் அடுத்த கட்டம்.

அந்த வகையில் பார்க்கப்போனால், இந்த ‘எழுக தமிழ்’ முன்னெடுக்கப்போகின்ற அரசியல் இயங்குதளம் என்ன? அது மக்களிடம் கோரிநிற்கின்ற ஆதரவு எத்தகையது என்பது குறித்து இந்த பத்திப் பேசவிருக்கிறது.

1948 இல் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தோடு இணைந்து கொள்வதற்கு முடிவெடுத்துக் கொண்ட ஜி.ஜி.பொன்னம்பலத்தின் முடிவை எதிர்த்துக்கொண்டு தமிழ் காங்கிரஸை விட்டுப்பிரிந்த தந்தை செல்வா, தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து சிங்கள ஆளும் வர்க்கத்தின் பெரும்பான்மை தேசியவாத மனநிலைக்கு எதிராக போராடிய வரலாறு அனைவரும் அறிந்த விடயம்.

இங்கே பொன்னம்பலம் அவர்களது அரசியல் செல்நெறியை நிராகரித்த தந்தை செல்வா, தமிழ் மக்களைச் சரியான வழியில் அழைத்துச் செல்வதாக ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

நம்பிக்கை மிக்க தனது வழியில் ஏனைய தமிழ்த் தலைவர்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு மக்களுக்காகப் போராடினார். மக்களின் மீதான அரசியல் அழுத்தங்களுக்கு எதிராக அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை வழிப்போராட்டங்களை சிங்கள ஆளும் வர்க்கம் நசுக்க முயன்றது.

இரத்தம் சிந்திய நிலையிலும் செல்வாவின் போராட்டம் தொடர்ந்தது. தமிழ்த் தாயகத்திலும் கொழும்பிலும் சிங்கள தேசத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் அவர் மேற்கொண்ட போராட்டங்கள், அரசாங்கத்தை தமிழர் தரப்பை நோக்கி இறங்கி வரவைத்தது. பண்டா – செல்வா ஒப்பந்தம் என்றும் டட்லி – செல்வா ஒப்பந்தம் என்றும் இரண்டு உடன்படிக்கைகள்வரை அரசுத்தரப்பை இழுத்துவந்தது.

அதாவது, பேச்சுமேசை வரைக்கும் சிங்களத் தரப்பினரை இழுத்துவந்து, தமிழர்களின் பிரச்சினைகளை செவிமடுக்க வைக்குமளவுக்கு தந்தை செல்வாவின் போராட்டம் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை மிகுந்ததாக வீரியம் மிக்கதாக – தமிழ் மக்களின் அரசியல் வேட்கையை நேர்மையுடன் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

அந்தப் போராட்டம் ஒரு கட்டத்தில் தோல்வியில் முடிவடைந்தபோது, ‘கடவுள்தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று சிங்கள தேசத்தின் ஏமாற்றுத் தனத்தையும் வஞ்சகத்தையும் தந்தை செல்வா வெளிப்படுத்தினார். தந்தை செல்வாவின் இந்தப் போராட்டமும் தமிழ்மக்களின் அந்தக் காலத்து போராட்ட வடிவமும் இந்தப் புள்ளியுடன் நிறைவுக்கு வந்தது.

அதன் பின்னர், தந்தை செல்வாவின் அரசியல் செல்நெறியை அடுத்த காலகட்டத்துக்கு ஏற்றவாறும் அடுத்து வந்த சிங்களத் தரப்புக்களுக்கு புரியக்கூடிய வகையிலும் உணர்த்தும் வகையில், தமிழர்களுக்கு உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் ஆயுதக்குழுக்கள் ஆயுதமேந்தி போராடுவதற்கு களம் இறங்கினார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பு உட்பட எத்தனையோ ஆயுதக்குழுக்கள் சிங்கள அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கு களமிறங்கி, இடையில் எத்தனையோ காட்சி மாற்றங்கள் எல்லாம் நடந்து முடிந்து, இறுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பு மாத்திரம் கொழும்பில் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளோடும் மாறி மாறிப் பேச்சுக்களில் ஈடுபட்டது.

பெங்களூர் பேச்சுக்கள், டில்லி பேச்சுக்கள், திம்பு பேச்சுக்கள் என்று ஆரம்பித்து 2002 – 2003 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு கட்டப் பேச்சுவரை நடைபெற்று, ஈற்றில் 2006 ஆம் ஆண்டு பேச்சுக்களிலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பு வெளியேறியதுடன், இந்தப் பேச்சுப்படலம் நிறைவுபெற்றது.

இந்த பேச்சுக்கள், உடன்படிக்கைகள் அனைத்திலும் சிங்கள ஆட்சித்தரப்புக்களை பேச்சு மேசைக்கு அழைத்து வந்து, தமிழ் மக்களது பிரச்சினைகளைப் பேசுவதற்கான வலுவை விடுதலைப்புலிகள் அமைப்பு கொண்டிருந்தது. அவர்கள் எது செய்தாலும் மக்களின் நலன் நோக்கியதாகவே இருக்கும் என்ற இறுக்கமான உறவையும் பற்றுறுதியையும் வளர்த்துக்கொண்டார்கள்.

அவர்களது போராட்டமும் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்து, எத்தனையோ பாடங்களை? எத்தனையோ செய்திகளை? தமிழ்த் தரப்பின் சார்பாக உலகெங்கும் உரத்து சொல்லிவிட்டு அடங்கிவிட்டது.

தற்போது தமிழ் தரப்பு மீண்டும் அரசியல் வழியில் – அற வழியில் – தனது போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து ஏழு வருடங்களாகி விட்டது.

இந்த ஏழு வருட காலப்பகுதியில் தமிழர்களது அரசியல் சிங்கள தேசத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பாடங்களைவிட, தங்களுக்கு இடையிலான, தமிழ் அரசியல் தரப்புக்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

அதன் ஒரு பகுதியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக பரிணமித்தனர். அதற்கு பிறகும் கூட்டமைப்பில் எஞ்சியிருந்தவர்கள் தற்போது, பிரிந்து செல்லாமல், தமிழ் மக்கள் பேரவை என்ற இன்னொரு விதமான அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் சரி, தமிழ் மக்கள் பேரவையும் சரி, அவை தோற்றம் பெற்ற காலம் முதற்கொண்டு இதுவரை மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்?

அன்று காங்கிரஸை விட்டுப் பிரிந்த செல்வாவுக்குத் தமிழரசுக்கட்சி என்ற அடையாளத்தை கொடுத்த மக்கள் இறுதிவரை அவரோடு இறுக்கமாக நின்றதற்கும், அதன் பின்னர் எத்தனையோ ஆயுதக்குழுக்கள் தமிழ் மக்களுக்காக போராடுவதற்காக புறப்பட்டபோதும் அவர்களுக்கு எதிராக எத்தனையோ கசப்பான சம்பவங்களில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டபோதும் எல்லாவற்றையும் மீறி, அந்த அமைப்பின் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கும் இப்போதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் தமிழ் மக்கள் பேரவையினரும் கோரி நிற்கும் மக்கள் ஆதரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மக்களை தங்களுக்கு பின்னால் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கும் இந்த ‘எழுக தமிழ்’ அமைப்பினர், தமிழ் மக்கள் அவ்வாறு ஒரு முடிவை எடுக்குமளவுக்கு செய்த நம்பிக்கையான காரியங்கள் என்ன?

சரி, இதுவரை எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. இனிச்செய்யப்போவதாக இந்த இரு தரப்பினரிடமும் உள்ள எதிர்கால செயல்திட்டங்கள் என்ன?

இந்த பின்னணிகளில் வைத்து பார்க்கும்போது, மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ நிகழ்வும் – தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலத் திட்டங்களை அறிவிக்கும் நிகழ்வாகவும் அமையுமா?

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கும் ‘எழுக தமிழ்’ நிகழ்வு துண்டுப்பிரசுரங்களை மட்டக்களப்பில் முன்னாள் எம்.பி. கஜேந்திரன் மோட்டார் சைக்கிளில் ஓடியோடி கொடுத்துக்கொண்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் அவரே பகிர்ந்திருக்கிறார்.

ஆனால், போர்க்காலத்தின்போது நடைபெற்றது போல, இப்போதும்கூட சர்வதேச சமூகம் சிங்கள தேசத்தைத்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்பது தமிழ் மக்கள் பேரவைக்கு தெரியாதா? இனியும் அந்த நிலையிலிருந்து இறங்கி வருவதற்கான எந்த சகுனங்களையும் காணவில்லை என்பதுகூட தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் தெரியவில்லையா?

அப்படியானால், இவை எல்லாவற்றையும் துவம்சம் செய்யக்கூடிய சம்பந்தனையும் சுமந்திரனையும் துச்சமென்று தூக்கியெறிந்துவிட்டு முதலமைச்சரின் தலைமையிலான பேரவையின் கீழ் ஒட்டுமொத்த தமிழர் தாயகமும் நம்பிக்கையுடன் அணிவகுத்து நின்று ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பின்னரான அரசியல்’ என்ற யுகத்துக்குள் அழைத்துச் செல்வதற்கு வலுவாக தமிழ் மக்கள் பேரவையிடமுள்ள தந்தை செல்வா காணாத, பிரபாகரன் அறியாத, சம்பந்தனும் சுமந்திரனுக்கும் புரியாத, வழிகாட்டும் வரைபடம் என்ன?

மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ இதற்கு பதில் கூறுமா? இவை அனைத்தும் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரான கேள்விகள் என்றோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவான கேள்விகள் என்றோ கழித்துவிடாமல், மக்களின் பார்வையில் முன்வைக்கப்படுகின்ற கேள்விகளாக உள்வாங்கி ‘எழுக தமிழ்’ பதில் தருமா?