மனிதன்

அதில் ஒருவர் வருவார். எங்கள் ஊருக்குள் அடிக்கடி சைக்கிளில் நடமாடுவார்.
ஒரு தடவை இப்படியாகத் தான் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஊருக்குள் கசிப்புப் பிடிக்க வந்த பொலிஸ் ஜீப்பினால் வந்த களேபரத்தினால் போராளிகள் எல்லாம், அவர் உட்பட, வேலி பாய வேண்டி நேர்ந்தது.

அப்போது கிராமிய உழைப்பாளர் சங்கத்தினர் புத்தூரில் போராட்டம் ஒன்று நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் அவரும் கலந்து கொண்டிருந்தார். அவ்வப்போது பாலா அண்ணையுடன் அவரும் வருவார்.
எளிமையான மனிதர். எதுவுமே பேசியதில்லை. எனக்கோ விடுப்பு பார்ப்பதில் ஈடுபாடு.
பாலா அண்ணை எனக்கு கம்யூனிசம் கற்பிக்க முயற்சித்தார்.
நானோ பெரும் சண்டை பிடிப்பேன்.
நான் அப்போ சின்னப் பெடியன்.

உது சரிவராது என்பது என்னுடைய முடிவு.
என்னை இயக்கத்தில் சேர்க்க அவர்கள் யாருமே முயற்சிக்கவில்லை.
தேறாத கேஸ் என்று எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் எல்லாரும் பலத்த நம்பிக்கையுடன் இருந்தார்கள்.
அவர் என்னோடு எதுவும் பேசியதில்லை. நான் சிரித்ததுமில்லை. எங்கட அண்ணையை சும்மா கூட்டிக் கொண்டு திரிஞ்சு பிரச்சனைக்குள்ள மாட்டி விடப் பார்க்கிறார் என்பது என்னுடைய கோபம்.

அவர் சைக்கிளில் வருவார். அழுக்கடைந்த சாரம். சேர்ட்!
அது அயர்ன் கலையாக புது சேட்டுகளுடன், புது ஏசியா சைக்கிளில் புலிகள் பிரசாரம் செய்த காலம்.
தலை முழுகியதற்கான சான்றுகள் குறைவு. புழுதி படிந்திருக்கும். எங்கள் வீட்டில் வந்து, உடுத்த சாரத்தை மாற்றி, தோய்த்து காயப் போட்டு, வீட்டுக்கும் வேலிக்கும் இடையில் உள்ள வெளியில் வைத்து சாரத்தை மாற்றுவார்.

வீட்டுக்குள் வந்து உட்கார்ந்த ஞாபகம் இல்லை.
அக்கா பேசுவார்…
சும்மா வாறியள், போறியள், எங்கட பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு திரியிறியள்! எங்களுக்கு ஒண்டுமா விளங்கேலை!
முகத்தில் எந்த சலனமும் இருக்காது. கோபிக்கவும் மாட்டார்.
சிரித்ததையும் நான் கண்டதில்லை.
எங்கள் அம்மாவுடன் நல்ல நேசம்.

என்னுடைய அம்மா மரணப் படுக்கையில் வைத்தியசாலையில் இருந்த போது, வந்து பார்த்ததில் அம்மாவுக்கு நிறையச் சந்தோசம் என்று சொன்னார்கள்.

நாபா!
இந்த சமூகத்திற்கு அப்படியான தலைவர்களைப் பெறுவதற்கான தகுதியில்லை!