மனோவின் கூற்று முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவாதத்துக்கான தலைப்பு

‘நாங்கள் சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் எங்களோடு படித்த முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக சல்வாரும் முக்காடும் அணிந்துதான் படித்தார்கள். இப்படிக் கறுப்பால் மூடிக்கொண்டு, முழுமையாக மறைத்துக் கொண்டு யாருமே இருக்கவில்லை. இப்போது ஏன் திடீரென்று இப்படி மாறி விட்டார்கள் என்ற அச்சமும், மத்திய கிழக்குக் கலாச்சாரம் இங்கு ஏன் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்ற சந்தேகமும் ஏற்படுவது நியாயம்தானே?’

Conflict & Peace Studies பட்டப்பின் படிப்பின் வகுப்பறையொன்றில், கலந்துரையாடலொன்றின் போது எனது விரிவுரையாளர் சொன்ன கருத்துதான் இது. எமது Batch இல் இருவர் தான் முஸ்லிம்கள். இருவரில் அடுத்தவர் மலே சகோதரர். பெரிய பதவியொன்றில் இருப்பவர். ஏனைய அனைவரும் பௌத்தர்களும், சிங்களக் கிறிஸ்தவர்களுமாவர். பலரும் அரசின் பல்வேறு உயர்பதவிகளிலும், மீடியாக்களிலும் இருப்பவர்கள்.

மாதிரி ஆய்வொன்றின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்றே திசை மாறி மேற்கூறிய இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தது.

நான் அமைதியாக இருந்தேன்.

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் கலந்துரையாடல் நகர்ந்து சென்றது.

பலரும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருந்தனர்.

‘மேடம், கென் ஐ எக்ஸ்ப்ரஸ் மை வீவ் ஒன் திஸ்?’ என்று சாதாரணமாய்க் கேட்டுக் கொண்டு எழுந்து நின்றேன். ‘யாஹ், வை நொட்?’ என்ற கேள்வி அனுமதியாய்க் கிடைத்தது.

மேற்கொண்டு நடந்தவை யாவும் கலந்துரையாடல் வடிவில் தமிழில் கீழே தரப்படுகின்றன.

‘மேடம், தயவு செய்து என்னைத் தப்பாக எடுக்க வேண்டாம், நீங்கள் சட்டக்கல்லூரியில் படித்த காலத்தில் அணிந்த அதே வகையான ஆடைகளைத்தான் இப்போதும் அணிகிறீர்களா? அல்லது வேறு வகையான ஆடைகளையா?!, இங்கே படிக்கின்ற சகோதரிகள் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு அணிந்த அதே வகையான ஆடைகளைத்தான் இப்போதும் அணிகின்றார்களா?!’ மிகவும் பணிவான குரலில் நான் கேட்டேன்.

‘ஆம் அது மாறியிருக்கின்றது, உண்மைதாண்……’

‘ஆகவே எல்லோரது ஆடையமைப்புகளும் காலவோட்டத்தில் மாறியிருக்கின்றன, ஆனால் அந்த மாற்றத்திலும் ஒரு பெரிய வித்தியாசமிருக்கின்றது, தெரியுமா மேடம்?, அதாவது கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் இலங்கை வாழ் அனைவரது ஆடையமைப்புகளிலும் படிப்படியான மாற்றம் ஏற்பட்டாலும், முஸ்லிம் பெண்கள் தமது உடம்புகளை அதிகமாக மறைத்துக் கொள்ளும் வகையில் தமது ஆடையமைப்பை மாற்றியிருக்கிறார்கள், முஸ்லிமல்லாத பெண்கள் தமது உடம்புகளை அதிகமாக வெளிக்காட்டும் வகையில் தமது ஆடையமைப்புகளை மாற்றியிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தில் வெளிக் கலாச்சாரங்கள் பெருமளவில் பங்களிப்புச் செய்திருக்கின்றன. முஸ்லிம்களின் ஆடையமைப்பில் மத்திய கிழக்கும், சிங்களவர்களின் ஆடையமைப்பில் ஐரோப்பாவும், தமிழர்களின் ஆடையமைப்பில் இந்தியாவும் பாதிப்புச் செலுத்தியிருக்கின்றன. இதில் எப்படி ஒன்று சரியாகவும் இன்னொன்று பிழையாகவும் இருக்க முடியும் மேடம்?. கலாச்சாரம் என்பது தாக்கம் செலுத்தும், தாக்கம் பெறும் இயல்புகளைக் கொண்டது, அது எப்படி ஒரு கலாச்சாரம் வேறொரு கலாச்சாரத்தால் தாக்கம் பெறுவது இயல்பானதாகவும், மற்றொரு கலாச்சாரம் அதுவல்லாத கலாச்சாரமொன்றால் தாக்கம் பெறுவது சந்தேகத்துக்குரியதாகவும் அமைய முடியும்?, இதோ இங்கு குட்டைப் பாவாடை அணிந்திருக்கும் சகோதரிகள் தூய இலங்கை பௌத்த கலாச்சாரத்தைப் பின்பற்றியா அதை அணிந்திருக்கின்றார்கள்?, அது ஐரோப்பிய இறக்குமதி. கலாச்சாரத் தாக்கங்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க ஆடையமைப்புகளில் பரிணாம மாற்றம் ஏற்படும் என்று மார்ட்டின் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கின்றார் மேடம். அது போக, ஆடையைக் கூட்டுவதற்கும் குறைப்பதற்குமுள்ள உரிமை ஜனநாயக உரிமை அல்லவா?! 😊’

‘யேஸ், யூ ஆர் ரைட்…….. பை தி வே…ஆர் யூ அ முஸ்லிம் 😊?’

‘யேஸ் மேம், ஐ ஆம் அ முஸ்லிம்’

அதன் பின்னர் அந்தத் தலைப்பு அப்படியே நீர்த்துப் போனது.

பாட நிறைவில் விரிவுரையாளர் Hurt ஆகவில்லை என்பதை தனிப்பட்ட முறையில் உறுதிசெய்து கொண்டேன்.

வெளியே வரும்போது நண்பர்கள் சொன்னார்கள்…

‘மச்சாங் உம்ப நியம உத்தரயக் துன்னெ பங், நெத்தங் மேக வென பெத்தகடய் யன்னெ!’

‘உம்பலட அவ்லக் நே நே’ – நான்

‘நே பங், உம்ப எத்த னே கிவ்வெ!’

சம்பவம் இனிதே நிறைவு பெற்றது.

இது சுமார் 8-9 மாதங்களுக்கு முன்பு நடந்த விடயம். இதை எழுதுவோம் என்ற எண்ணமே இருக்கவில்லை. ஆனால் மனோ கணேசன் எழுத வைத்துவிட்டார். மனோவின் கூற்று முஸ்லிம் சமூகத்தின் உள்ளக விவாதத்துக்கான தலைப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்தக் கூற்றின் உள்ளடக்கம் மற்றும் Timing என்பன மிகவும் பாரதூரமானதும் ஆபத்தானதுமாகும்.

‘கலாச்சார பரிணாமம்’ என்பதை ஏற்றுக்கொண்டாலும் இன்னொரு கலாச்சாரத்தின் மீதான overexposure நிச்சயம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இயல்பான கலாச்சார பரிணாமத்தை யாரும் குறை காண முடியாது. ஆனால் அரபுலகக் கலாச்சாரத்தை இஸ்லாமிய கலாச்சாரமாக சித்தரிக்கும், அதனை இஸ்லாத்தின் அடையாளமாக முன்வைக்கும் தீவிரம் மாற வேண்டும் என்பது கட்டாயம். முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே முழுமையாக அங்கீகாரம் பெறாத கலாச்சாரத் திணிப்புகளை தேசிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதாக மாற்றுவது கடினத்திலும் கடினம்.

குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லலாம், வாதாடி வெல்லலாம், தர்க்கத்தில் மேலே வரலாம். ஆனால் உள்ளங்களில் இடம் பிடிக்க முடியாது. நாம் நாமாக, நமது தேசத்தின் மைந்தர்களாக, இயல்பான கலாச்சார பரிணாமத்தைக் கைக்கொள்பவர்களாக மாற வேண்டும் என்பதுதான் எனது அவாவும். இஸ்லாம் ஆடைக்கு வரையறைகளைத்தான் தந்திருக்கின்றதேயன்றி வடிவங்களைத் தரவில்லை.

*Affan Abdul Haleem*