மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.

(மாதவன் சஞ்சயன்)

1970 பதுகளில் அறக்கொட்டியான் எனும் பூச்சி பரவலாக நெல் பயிரை தாக்கியது. இந்த பூச்சித் தாக்கத்துக்கு உள்ளான பயிர்களை பார்த்தால் ஏதோ மாடுகள் தான் வயலுள் புகுந்து பயிரை மேய்ந்து விட்டனவோ என எண்ணத் தோன்றும். அந்தளவு தூரம் அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்தில் இருந்து தம் விளைந்த பயிர்களை காக்க சிறீமா காலத்தில் பரவலாக செயல்பட்ட, விவசாய விஸ்தரிப்பு நிலையங்களில் மானிய கடன் அடிப்படையில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி பாவித்ததால் பயிர்கள் தப்பிப் பிழைத்தன.

ஆனால் 2005 தில் ஆரம்பித்த கட்டாய ஆட்சேர்ப்பின் போது, பாடசாலைப் பிள்ளைகளை காவுகொடுக்க புலி கிங்கரர்கள் வந்தபோது, மனிதாபிமான அடிப்படையில் கூட சிந்தியாது தனது பாடசாலையில் உள்ள திடகார்த்தமான மாணவர் பற்றி தகவல் சொல்லி, மரண வியாபாரியாய் செயல்பட்டு இன்று தேசியம் பேசி அரசியல் செய்பவர், தமிழினி என்கின்ற சிவகாமி மரணவீட்டில் பேசிய பேச்சு தமிழருக்கு அழிவு வேற்று இனத்தால் அல்ல, நெல் பயிர் அழிவுப் பூச்சி அறக்கொட்டியான் போன்ற அரசியல் வாதிகளால் என்பது தெளிவாகிற்று.

மரணங்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. ஆனால் யாருக்கு, எவரால் என்ற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை. அழைப்பு கிடைத்து போவது விழாக்கள். கூக்குரல் கேட்டதும் செல்து அவல நிகழ்வுகள். இன்று மரணத்தை விதைத்தவரும் பலருக்கு மரணத்தை கொடுத்தவரும் ஒன்று கூடி அனுதாபத்தை தேடுவதும் வழமையாகி விட்டது . ஒருவரின் இறப்பில் கூட அரசியல் லாபம் கிடைக்கும் என நினைப்பவர் மத்தியில், நாம் வாழும் கேவலமான சூழ்நிலை.

தனது 19 வயதில் சிவகாமி என்ற இளம் பெண் தமிழினி என களம் புகுந்தாள். 43 வயதில் காலனுடன் சென்றுவிட்டாள். அவள் விடுதலையை நேசித்தே களம் புகுந்திருப்பாள் என்பதை எண்ணும் போது மனம் கலங்குகிறது, விழிகளில் நீர் கசிகிறது. காரைநகர் களத்தில் பலியான முதல் பெண் போராளி சோபாவின் இழப்பில் கதறிய உறவுகள் நினைவு வருகிறது. இன்று சிவகாமி மறைவால் கதறும் உறவுகள் கதறலையும் அதே மன நிலையில் என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் போராட்ட காலத்தில் தனது தலைமை சென்ற தவறான பாதையில் தானும் தொடர்ந்ததே.

2009 பேரழிவின் பின் நலன்புரி முகாமில் தலைவிரி கோலமாக சாதாரண பெண் போல் இருந்த அவரை, அவர் புலிகளின் சீருடையில் இருந்த போது செய்த செயல்தான் காட்டிக் கொடுத்தது. அவரால் யுத்தத்துக்கு என கட்டாயமாக இணைக்கப்பட்டு பலி கொடுக்கப்பட்டவரின் உறவுகளே அவரை பழி வாங்கினர். விதைத்த வினை அவரை எதிரியின் கையில் சிக்கவைத்தது. கிடைத்த புனர்வாழ்வு அவர் மனத்தை மாற்றி இருக்க வேண்டும். அதனால் தான் அவர் மரண வியாபாரிகளின் வாக்கு அரசியலுக்குள் பிள்ளையான், கருணா போல் கால் பதிக்கவில்லை.

அந்த வகையில் அவர் போராளியாக முடிவெடுத்த செயலையும், பின் புனர்வாழ்வு பெற்றபின் அனந்தி போல் ஆட்டம் போடாமல், அமைதியாய் குடும்ப நிம்மதிக்காய் கிட்டாதாயின் வெட்டென மற, என வாழ்ந்த வாழ்க்கைக்காய் தலை வணங்கி, அவர் குடும்பத்தினர் துயரில் என் மனம் பங்குகொள்கிறது. புலியாய் புறப்பட்டவள் அமைதிப் புறாவாக வாழ்ந்து மறைந்தாள் என்பது பொறுக்காத அரசியல் பருந்துகள், இப்போது அவள் மரண வீட்டை தம் சுயநல காரியத்துக்காக வலம் வருகின்றன.

கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோய் வந்து அவர் பாதிக்கப்பட்டதோ, மகரகமை வைத்திய சாலையில் அவர் சிகிச்சை பெற்றதோ இந்த வாக்குப் பிணம் தின்னி அரசியல் கழுகுகளுக்கு தெரியாதா. தங்கள் வாக்கு அரசியலுக்கு பயன்படமாட்டார் என்றதும் அவரை கை கழுவியவர்கள், இன்று மரண வீட்டில் விளம்பரம் தேடுகின்றனர். அங்கு பிலாக்கணம் பாடிய அறக்கொட்டியான் அரசியல்வாதி, முன்பு அழித்தது போதாதென்று இன்னமும் அழிவுக்கு களம் தேட புலம் பெயர் புலிப் பினாமிகளுக்காக இணையத்தின் மூலம் தேசியம் பேசுகிறார்.

தம்மை போராளிகளாக மாற்ற துணிந்த எத்தனை சிவகாமிகளை, தங்கள் தவறான பாதையில் கூட்டிச் சென்று தமிழினி யாழினி எனப் பெயர் மாற்றிய புலிகளின் புகழ் பாடித்தான், தம் அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என்ற வாக்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் அறிவாரா, இதுவரை வாழ்ந்த தனது வழி மாறிய போராட்ட வாழ்க்கை போதும் இனி என்று சிவகாமியாய் வாழ நினைத்த தமிழினி, தன் போராட்ட வாழ்வில் தவிர்க்க இயலாமல் செய்த தவறுகளினால் தானா, என்னை புற்றுநோய் பீடித்தது என தன்னுள் புலம்பியது?

விடுதலையை நேசித்த அந்தப் பெண் நீங்கள் செய்யும் மக்களை ஏமாற்றும் கேவல பதவி அரசியலை செய்ய விரும்பாமல் தானே, தன் குடும்ப நிழலில் ஒதுங்கினாள். அவளது மரணத்தை சாட்டி அங்கு பிரசன்னமான அரசியல்வாதிகள் எவரும் அவளின் மரண செய்தி வரும் வரை அவளையோ, அல்லது அவளைப் போல போராடச் சென்று சமூகத்தில் அநாதரவாக நிற்கும் பெண்களின் இருப்பு நிலை என்ன என்று தேடிச்சென்று உதவினார்களா. புலி ஆதரவு வாக்குகள் பெறுவதற்கு இவர்களுக்கு தமிழினி மரணம் பயன்படும் என்பதால் தான் இந்த பிரசன்னம்.

கல்கியின் காவிய நாயகியே! சிவகாமியே! 19 வயதில் விடுதலைக்காய் சபதமேற்றாய். வழி தவறிய போராட்டத்தில் நீ பலிக்கடா ஆனாய். அதனால் பழி சுமந்த உன் உயிர் நீர்த்த உடலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த முயலும் இவர்கள், உன்போல் நல்ல மேய்ப்பன் கிடைக்காது வழி தவறிய போராளி பெண்களின் மரண வீட்டிலும் தம் பிலாக்கணத்தை தொடர்வர். 43 வயதில் விடுதலைப் போராளி என்ற புகழ் சுமந்த உன் உடல் தீக்கு இரையாகும் போது நீ செய்ததாக கூறப்படும் தீமைகளும் எரிந்து போகும். முடியுமானால் நீ எரியும் தீச் சுவாலை கொண்டு இந்த வாக்கு அரசியல் வல்லூறுகளின் சிறகுகளை பொசுக்கிவிடு.

– மாதவன் சஞ்சயன் –