மழை வெள்ளமும் வான் பாய்தலும்

(Saakaran)

நேற்றைய தினம் வன்னி என்று பலராலும் அழைக்கப்படும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்குள் பெய்து முடித்த மழை மாங்குளத்தில் அதி உச்சமாக பெய்து சாதனைகளுடன் வேதனைகளையும் 2009 யுத்தத்தில் இருந்து மீண்டுவரும் மக்களை ஆழத்தியுள்ளது. அனைத்து குளங்களும் குளங்களின் கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலும் தமது அணைக்கட்டிற்கு மேலாக வெள்ளம் கரைபுரண்டோடி மக்கள் குடியிருப்புகள், வயல்கள், கால்நடைகள், வீதிகள் என யாவற்றையும் வெள்ளத்திற்குள் ஆழ்த்தியுள்ளது…. அழித்துள்ளது.

இந்த காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மனித உறவுகளுக்கும் நாம் எமது ஆறுதல்களையும், உதவிகரங்களையும் நீட்டுகின்றோம். இதேவேளை மீட்பு பணிகளில் ஈடுபட்ட அனைத்து மனித உங்களை நாம் வாழ்த்தி வரவேற்கின்றோம். தங்கள் பணி எப்போதும் போல் மகத்தானது, மனிதாபிமானது, நம்பிக்கையூட்டுபவனவை.

மார்கழி மாத பருவகால மழைக்கு அதிகமாக பெய்திருந்த இந்த மழை கடந்த பல வருடங்களாக தமிழ் பிரதேசங்கள் எங்கும் உள்ள குளங்களை தூர் வாராத நிலையில் மடையாற்று வெள்ளம் போல் பாய்தோடி அழிவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த காட்டாற்று வெள்ளங்களுக்கு தடைபோடும் பள்ளங்கள் இந்த குளங்கள்தான்.

யுத்தத்தின் பின்னர் வீதிகளை புனரமைத்த மத்திய அரசாக இருக்கட்டும் வடமாகாணத்தை ஆட்சி செய்த தமிழ் அரசாக இருக்கட்டும் வாழ்வாதரத்திற்கு மிகவும் அவசியமான குளங்களை தூர்வாருதல், பராமரித்தல் என்பனவற்றை இரணைமடு குளத்திற்கு அப்பால் செய்ததாக அறிய முடியவில்லை. இரணைமடுவும் இன்னமும் உயரமாக கட்டவிருந்த அணையை கட்டுவதற்கான தடைகளை கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்ற பிரதேசவாதத்தை யாழ்பாணத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்ற வகையில் 38 அடியுடன் மட்டுப்படுத்தப்பட்டதும் வரலாறு.

ஆனையிறவிற்கு தெற்காகவும் வவுனியாவிற்கு வடக்காகவும் அமைந்த நெல் வயற்பரப்புகள் 5 ஏக்கர் வயற்காணி குளத்துடன், 10 ஏக்கர் வயற்காணி குளத்துடன், 50 ஏக்கர் வயற்காணி குளத்துடன் என்றே நிலப்பரப்புகள் அதிகம் இருக்கக் காணப்பட்டன. வயலும் குளமும் குட்டையும் என விவசாயமும் கால் நடையும் வீடுகளும் அமைந்த வாழ்வியலைக் கொண்டிருந்த நிலமை மாறி குளத்தை குட்டடையை தூர்வாருவது இல்லை. குழாய் கிணறு அடித்து பார்த்துக் கொள்ளலாம் என்ற மன மாற்றமும் பெருமழை குட்டையினுள்ளும் குளத்தினுள்ளும் நிரம்பி காட்டாற்று வெள்ளத்தை கட்டுப்படுத்தும் பொறிமுறையை தகர்த்து விட்டது.

நாம் விழிப்படைய வேண்டி நேரம் இது. நீரை சேகரித்தல் இதனை விவசாயம் கால் நடை வாழ்வியலுக்கு பாவித்தல் மேலதிக நீரை கடலுக்கு அனுப்பாமல் நீர் குறைவான வரண்ட பிரதேசத்திற்கு பகிர்ந்து அளித்தல் என்ற பொறி முறையின் அவசியத்தை மக்கள் உணர்ந்தாக வேண்டும் இதற்காக குளம் குட்டை வாய்கால்களை தூர்வாரி பராமரித்து நீர்ப்பங்கீடடடை சகல தரப்பு அரசு அதிகாரங்களும் செய்ய வேண்டும் இதில் அதிகாரம் போதாது என்று அதிகாரம் போதுமான வரை தந்த பின்பு தான் இதனைச் செய்வோம் என்றிருந்தால் காட்டாற்று வெள்ளத்தை அணைப் போட்டுத் தடுக்கவும் முடியாது. பின்பு மழையற்ற காலத்தில் நீரற்று அலைய வேண்டியும் வரும். இதில் பிரதேச சபையில் இருந்து ஆரம்பித்து மகாண சபை மத்திய அரசு என்று யாவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மக்கள் வாழ்விற்கு தேவையான நீரை அழிவிற்கு அன்றி வாழ்விற்கு பயன்படுத்துவோம்.

இதில் பொது மக்கள் தமது மட்டத்தில் சிரமதான அடிப்படையில் செயற்பட்டு தமது பிரதேசத்து குட்டைகளையேனும் தூர்வார வேண்டும். இதில் ‘வேலையில்லை” என்று திரியும் இளைஞர்கள் தமது பங்கிற்கு அர்த்தமுள்ள ஆக்கபூர்வமான இளைஞர்கள் நாங்கள் என்று சிரமதானங்கள் மூலம் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும். புலம் பெயர் தேசத்து உறவுகள் உபயம் என்ற பெயர் எடுக்கும் கைங்கரியங்களுக்குள் தம்மை முடக்கி கொள்ளாமல் எமது உறவுகள் மத்தியில் உள்ள நல் உள்ளம் கொண்ட துறைசார் நிபுணர்குழுக்களை அணுகி பட்டறிவுகளையும் இணைத்து நீர் வழங்களை வாழ்விற்கு பயன்படுத்தி வெள்ள அழிவில் இருந்து மழை நீரை விரும்பும் மக்களை மழை நீரை வெறுக்கும் மனநிலையில் இருந்து மாற்றியமைப்போம்.

இயற்கையின் சீரான போக்கை மாற்றியமைத்து பருவ மழை, வெயில் செயற்பாட்டின் சூத்திரத்தை மாற்றயமைத்தன் வெளிப்பாடுகள் இந்த அதீத மழை அதீத வரட்சி என்பதை நாமும் புரிந்து கொண்டும் நாம் எமது வாழ்நாளில் சிறிது காலம் வாழ்ந்து விட்டு எமது சந்ததியின் வாழ்வதற்கு உகந்ததாக இந்த பூமித்தாய் தொடர்ந்தும் இருப்பதற்கான உலகளாவிய பொது பார்வையில் இணைந்தும் நாமும் செயற்படுவோம்.