மஹிந்தவின் கட்சி வருமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பாரா? எப்போது அவர் அதனை ஆரம்பிப்பார்? யார் அதன் தலைவராகப் போகிறார்? மஹிந்தவே தானா? அல்லது அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷவா? இது போன்ற பல கேள்விகளை அண்மைக் காலமாக அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் கேட்ட வண்ணமே இருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதற்குப் புதிய அரசியல் கட்சி? அவர்தான் ஏற்கெனவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் போஷகராக இருக்கிறாரே? என, எவரும் மேற்படிக் கேள்விகளை எழுப்புவோரிடம் கேட்கப்போவதில்லை. ஏனெனில், அவர்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கடசியின் போஷகராக இருந்த போதிலும் பெயரளவிலேயே அவர் அந்தப் பதவியில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது சகலரும் அறிந்த உண்மையாகும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் ஸ்ரீலசுகவின் போஷகர்களில் ஒருவராகவே இருக்கிறார். ஆனால், இன்று அவருக்கு அக்கட்சியில் இருக்கும் செல்வாக்கும் அதிகாரமும் மஹிந்தவுக்கு இல்லை. இரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் மஹிந்தவை ஆதரிக்கவும் கூடும். ஆனால், உத்தியோகபூர்வமாகக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் சந்திரிகாவினதும் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

இந்த நிலையிலேயே மஹிந்த புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கப் போகிறார் என்று கூறும்போது, அது உண்மையாகவும் இருக்கலாம் என எவரும் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. ஆனால், மஹிந்தவின் புதிய கட்சி பற்றிய கருத்து பல மாதங்களாக உலாவி வந்த போதிலும், அக்கட்சி பிறக்க மறுக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் பொது எதிரணி என்று தம்மை அழைத்துக் கொள்ளும் மஹிந்தவின் அணி, அந்த விடயத்தில் உறுதியாக இல்லை. கட்சி வரப் போகிறது என அவ்வணி இன்று கூறுகிறது; இல்லை, புதிய கட்சி அமைக்க மாட்டோம் என அது நாளை கூறுகிறது; மீண்டும் கட்சி அமைக்கப் போகிறோம் என நாளை மறுநாள்க் கூறுகிறது.

எனவே, மஹிந்த புதிய கட்சி அமைக்கப் போகிறார் என்ற செய்தி ஓரளவுக்குச் சலித்துப் போன கேலிக்கூத்தாகியும் உள்ளது. அதேவேளை, இதனால் அவரது அணியினராவது அதனை நம்புகிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. தமக்கு எந்தவித மதிப்பையும் ஸ்ரீலசுகவின் மைத்திரி அணி வழங்காததினாலும் மைத்திரிபால தமது எதிரியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்கியிருப்பதனாலும் தமக்குள்ள ஒரே நிவாரணி தமக்கென்றே ஒரு கட்சியை உருவாக்கிக் கொள்வதே என மஹிந்தவின் அணியில் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். எனவே, அவ்வா‌றானவர்கள் மஹிந்த கட்சி அமைக்கும் விடயத்தில் ஊசலாடிக் கொண்டு இருப்பதனால் மனமுடைந்தும் இருக்கலாம்.

சிலவேளை மஹிந்த வேண்டும் என்றே, இவ்வாறு ஊசலாடிக் கொண்டு இருக்கிறார் என்றும் கருதலாம். ஏனெனில், அதன் மூலம் மைத்திரி குழுவை மிரட்டியும் குழப்பமடையச் செய்தும் தமது குடும்பத்தினர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளைத் தளர்த்திக் கொள்ளலாம் என அவர் நினைக்கிறார் என்றும் கருதலாம். அல்லது அவ்வாறு அரசாங்கத்தை குழப்பமடையச் செய்து, திடீரெனப் புதிய கட்சியை அறிவிக்கும் பிறிதொரு திட்டம் இருக்கிறதோ என்றும் சந்தேகிக்கலாம்.

ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகாவும் 2014 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் போதும் அவ்வாறானதோர் உத்தியைத் தான் கடைப்பிடித்தனர். 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவிலேயே மைத்திரிபால தான் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் என்பதைப் பற்றி ரணிலும் சந்திரிகாவும் மைத்திரிபாலவும் ராஜித்த சேனாரத்ன போன்ற சிலரும் உடன்பாட்டுக்கு வந்திருந்தனர். ஆனால் அவர்கள் கடைசி நிமிடம் வரை நாட்டைக் குழப்பிக் கொண்டுதான் இருந்தார்கள்.

நவம்பர் மாதம் நடுப்பகுதியிலும், அதாவது மைத்திரிபால பொது வேட்பாளராகத் தம்மை அறிவிக்க ஒரு வாரம் இருக்கையிலும் ஜனாதிபதி வேட்பாளரைப் பற்றி எவ்வித முடிவும் இல்லாதவர்களைப் போல் ரணிலும் சந்திரிகாவும் நடித்தனர். அந்த மாதத்திலும் ஒரு நாள் ரணிலே போட்டியிடப் போகிறார் என்ற செய்தி வரும்; கரு ஜயசூரியவே போட்டியிடப் போகிறார் என அடுத்த நாள் செய்தி வரும்; மூன்றாவது நாள் வரும் செய்தியின் படி பொது ​வேட்பாளராக போட்டியிடுமாறு ரணில், சந்திரிகாவிடம் கேட்டு இருப்பார். ஆனால், திடீரென நவம்பர் 21 ஆம் திகதி மைத்திரிபால களமிறங்கினார். புதிய கட்சி பற்றிய ஊசலாட்டமும் அவ்வாறானதோர் நடிப்பா? இவை அனைத்தும் சிறுபிள்ளைத் தனமான ஊகங்களைப் போலவும் தோன்றலாம். ஆனால் அரசியலில் எதுவும் சாத்தியம் என்கிறார்கள் அல்லவா?

ஸ்ரீலசுகவிலிருந்து பிரிந்துச் சென்று தனியானதோர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொள்வதைத் தவிர ஒரு குழுவென்ற முறையில் மஹிந்த அணியினருக்கு வேறு என்னதான் மாற்றுத் திட்டம் இருக்கிறது?

கடந்த வருடம் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமானம் செய்து கொண்டதை அடுத்து, அதுவரை காலமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவிருந்த மஹிந்த, அத் தலைவர் பதவியைத் துறக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போதும் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியிலும் மத்திய குழுவிலும் மிக அதிகப் பெரும்பான்மை பலம் மஹிந்தவுக்கு இருந்தது. நாடாளுமன்றத்தில் சுமார் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவ்வணிக்கு இருந்தது. ஆயினும் மஹிந்த தாமாகவே கட்சியின் அதிகாரத்தை மைத்திரியிடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கட்சியின் பொது உறுப்பினர்கள் மத்தியிலும் மத்திய குழுவிலும் தமக்கு அன்று இருந்த அந்தப் பெரும்பான்மைப் பலத்தைப் பாவித்துக் கட்சியின் பலத்தைத் தொடர்ந்தும் தம்கையில் வைத்திருக்க மஹிந்தவுக்கு அவகாசம் இருந்தது. ஆனால், மைத்திரிபாலவிடம் சென்றடைந்த நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தின் மீதிருந்த பயத்தின் காரணமாக அவரோ, அவரது குழுவில் இருந்தவர்களோ அவ்வாறு செய்ய முற்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் தமது எதிரிகளை அடக்கவோ இல்லாதொழிக்கவோ அந்த அதிகாரங்களை எவ்வாறு பாவிக்கலாம் என்பது மஹிந்தவுக்கும் அவரது குழுவினருக்கும் நன்றாகத் தெரியும். அவர்கள்தான் அந்த அதிகாரத்தை அந்த நோக்கத்திற்காகப் பாவித்தவர்களாயிற்றே!

எனவே, அன்று தமது கையில் இருந்த கட்சியின் அதிகாரங்களை மைத்திரியிடம் கையளிக்கும் போது, அதனால் மனமிரங்கி மைத்திரி தேர்தல் காலத்தில் கூறியவாறு தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றும் மஹிந்த நினைத்திருக்கலாம். ஆனால் மைத்திரியின் ஆட்சியில் மஹிந்தவின் குடும்ப உறுப்பினர்கள் பலர் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அவரது இரு மகன்மார்களான நாமலும் யோஷித்தவும் சில நாட்களாக விளக்க மறியலிலும் வைக்கப்பட்டார்கள். எனவே, மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் ஏதாவது ஒரு வழிமுறையைக் கண்டறிவது மஹிந்தவுக்குக் கட்டாயக் கடமையாகியுள்ளது.

மறுபுறத்தில் மஹிந்தவைக் கைவிட்டால் வேறு வழியில்லாத ஆறு சிறிய கட்சிகள் இருக்கின்றன. விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெல உருமய, வாசுதேவ நாணயக்காரவின் புதிய இடதுசாரி முன்னணி, திஸ்ஸ வித்தாரணவின் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் டியு குணசேகரவின் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இந்த ஆறு கட்சிகளில் ஒன்றுக்கும் தனியாகப் போட்டியிட்டு பிரதேச சபையொன்றில் ஓர் ஆசனத்தையாவது வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே.

எனவே, அவர்கள் ஏதாவது பிரதான கட்சியொன்றுடன் கூட்டுச் சேர்ந்தே நாடாளுமன்றத்தில் ஓர் ஆசனத்தையாவது வெற்றிபெற வேண்டும். அவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது மைத்திரிபாலவின் தலைமையிலான ஸ்ரீலசுகவுடனோ கூட்டுச் சேர்வதற்கான வாய்ப்புகள் மிக அரிது. ஏனெனில் அவ்விரு கட்சிகளும் அந்த ஆறு கட்சிகளைச் சேர்த்துக் கொள்ளும் என நம்ப முடியாது.

இந்தநிலையில், அந்தச் சிறிய ஆறு கட்சிகள்தான் ஸ்ரீலசுகவிலுள்ள மஹிந்த ஆதரவாளர்களுக்கு முன்னர் மஹிந்தவை மீண்டும் களத்திற்கு இழுக்க முன்வந்தனர். அவர்கள் தான் மஹிந்தவுடன் எழுவோம் என்ற சுலோகத்துடன் கூட்டம் நடத்தினர்.

இவ்வாறு தமது இருப்புக்காக இந்த ஆறு கட்சிகளும் ஸ்ரீலசுகவிலுள்ள மஹிந்த ஆதரவாளர்களும் புதியதோர் கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது, அந்தச் சிறிய ஆறுகட்சிகளின் இருப்பை உறுதிப்படுத்துமேயல்லாது, அந்த ஆறு கட்சிகளையும் உள்ளிட்ட மஹிந்த அணி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலோ அல்லது மாகாண சபைத் தேர்தல்களிலோ அல்லது 2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலோ பதவிக்கு வர அந்தப் புதிய கட்சி உதவும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

காரணம், மஹிந்த அணியினர் அவ்வாறு புதிய கட்சியொன்றை ஆரம்பித்த போது அது ஸ்ரீலசுகவின் பிளவை உறுதி செய்துவிடும். மஹிந்தவுக்கு அக்கட்சியின் பெரும்பாலானவர்களின் ஆதரவு இருக்கலாம். ஆனால் மைத்திரி அதிகாரத்தில் இருப்பதனால் கட்சியின் ஒரு சாரார் அவருடனேயே தொடரந்தும் இருப்பார்கள். எனவே, எதிர்வரும் தேர்தல்களின் போது அவை மும்முனைப் போட்டிகளாக நடைபெறும் வாய்ப்புள்ளது. அவ்வாறாயின் ஐக்கிய தேசியக் கட்சி அத்தேர்தல்களில் இலகுவாகவே வெற்றிபெறும் வாய்ப்பு இருக்கிறது. சிலவேளை மஹிந்த அணி இரண்டாம் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டாலும் பதவிக்கு வர முடியாது போய்விடும்.

இனி வரப்போகும் முதலாவது தேர்தலில் அவ்வாறு நடந்தால் ஐ.தே.க ஏனைய தேர்தல்களின் போது மென்மேலும் பலம்பெறுவதையும் தடுக்க முடியாது. ஏனெனில் மக்கள் வெற்றிபெறும் கட்சிக்கு வாக்களிக்கவே விரும்புவர்.

அதேவேளை, புதிய கட்சி ஆரம்பித்தால் இதுவரை தாம் வெளியிடாத இரகசியங்களை வெளியிடுவேன் என மைத்திரி மிரட்டுகிறார். மஹிந்தவைப் பற்றிய இரகசியங்கள் இருப்பின் அவர் புதிய கட்சி ஆரம்பித்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றை வெளியிடுவது ஜனாதிபதியின் கடமையாகும். ஆனால், அவர் அவற்றை வெளியிடாத வரை, அவை என்னவாக இருக்குமோ என மஹிந்த சிந்திப்பாரேயானால் அதுவும் நியாயம்தான். எனவே, புதிய கட்சி ஆரம்பிக்கும் விடயத்தில் மஹிந்த திரிசங்கு நிலையில் இருக்கிறார் என்பது தெளிவானதாகும்.

அதேவேளை, மைத்திரி, மஹிந்தவை குழப்புகிறார் போலும் இருக்கிறது. அண்மையில் மைத்திரி தமது தூதுவர் ஒருவரை மஹிந்த அடிக்கடி போகும் நாராஹேன்பிட்டி விகாரையொன்றின் பிரதம பிக்குவைச் சந்திக்க அனுப்பியதாக சில சிங்களப் பத்திரிகைகள் கூறின. தமது குடும்பத்தினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் காரணமாக மஹிந்தவுக்கு இவ்வேளையில் மைத்திரியின் நட்பு இறைவன் தந்த வரமாகவே இருக்கும். எனவே, அவ்வாறானதோர் தோற்றத்தை உருவாக்கி மஹிந்தவின் திட்டங்களைக் குழப்ப ஜனாதிபதி முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆனால், மஹிந்தவுக்கு வேறு வழியும் இல்லை. எனவே, அவர் எதற்கும் தயாராக மக்கள் ஆதரவைத் திரட்டும் பணியைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். அவரது தோல்விக்குப் பிரதான காரணமாக இருந்தவர்கள் சிறுபான்மை மக்களே என்பதை அவர் இப்போது உணர்ந்து இருக்கிறார். மைத்திரி பெற்ற சிறுபான்மை மக்களின் வாக்குகளை தமிழீழத்தின் வாக்குகள் எனச் சிங்கள மக்கள் மத்தியில் ஏளனம் செய்த மஹிந்த, சிறுபான்மை மக்களின் வாக்குகள் தமக்கு கிடைக்காமையிட்டு இப்போது பகிரங்கமாகவே கவலை தெரிவித்து வருகிறார்.

குறிப்பாகத் தமிழ் வாக்குகளை விட மிகவும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவிருந்த முஸ்லிம் வாக்குகளை இழந்ததையிட்டு அவர் பகிரங்கமாகவே வருத்தம் தெரிவித்து வருகிறார். அண்மையில் அவர் ஜப்பானுக்கு விஜயம் செய்தபோது, அங்கு ‘ஜப்பான் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின்போதும் அவர் முஸ்லிம் மக்களின் வாக்குகளை இழந்தமையினாலேயே தாம் தோல்வியடைந்ததாகக் கூறியிருந்தார்.

எனவே, இப்போது அவர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக அவரோடு இருக்கும் சில முஸ்லிம்களைக் கடந்த வாரம் அவரது அலுவலகத்திற்கு அழைத்து, ஒரு கூட்டத்தை நடத்தி, அதற்குத் தமிழ் ஊடகங்கள் மூலம் பெரும் பிரசாரத்தை பெற்றுக் கொடுத்தார். தாம் முஸ்லிம் மக்களை எதிர்ப்பவர் அல்லவென்றும், முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, அதனைத் தடுத்தவர்கள் இன்று மைத்திரியின் அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருப்பதாகவும் அவர் அந்தக் கூட்டத்தின் போது கூறினார்.

அத்தோடு கடந்த வாரம் அவர் தமிழ் ஊடகவியலாளர்களுடன் தனியானதோர் சந்திப்பை நடத்தினார். அதன்போது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்லவென்றும் கூறினார்.

ஆனால், இது போன்ற வாதங்களால் மஹிந்தவுக்கு தமிழ், முஸ்லிம் மக்களைத் தம் பக்கம் வளைத்துக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. ஏனென்றால், இந்த வாதங்களே அவரை அம்மக்கள் முன் குற்றவாளியாக்கி விடுகிறது. உதாரணமாக, முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, அதனைச் சிலர் தடுத்தனர் என்ற அவரது கூற்றின் மூலம், தமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர் ஏற்றுக் கொள்கிறார். அதேவேளை, ஒரு சிலர் தடுத்தார்கள் என்பதற்காக நாட்டில் சமாதானத்தையும் இன சௌஜன்யத்தையும் ஒரு சிலர் சீரழிக்கும் போது, ஒரு நிறைவேற்று ஜனாதிபதி எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கைகட்டி நின்றார் என அவரே ஏற்றுக் கொள்கிறார். அவ்வாறாயின் அவரது எதிர்கால ஆட்சியொன்றின் போதும் அதேநிலைமை மீண்டும் ஏற்படாதா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ் அரசியல்க் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மஹிந்த கூறும் போது, அவரது குழுவினர் அரசாங்கம் கடும் பயங்கரவாதிகளை விடுதலை செய்யப் போகிறது எனக் கூறிச் சிங்கள மக்களைத் தூண்டி வருகின்றனர். அவர் அவ்வாறு தூண்டுபவர்களைத் தடுத்து நிறுத்த ஒருபோதும் எதனையும் செய்யவில்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். கடந்த காலத்தில் அரசாங்கம் சில தமிழ் அரசியல்க் கைதிகளை விடுதலை செய்த போது மஹிந்தவும் அரசாங்கம் மோசமான பயங்கரவாதிகளை விடுதலை செய்வதாக விமர்சித்தார்.

விக்னேஸ்வரன் இனவாதியல்ல, என மஹிந்த கூறும் போது அவரது அணியின் முக்கிய நபரான கம்மன்பில, விக்னேஸ்வரனைக் கைது செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். மஹிந்த பதவியில் இருந்தால் விக்னேஸ்வரன் இவ்வாறு வாலாட்ட மாட்டார் என அவரது அணியின் முக்கியஸ்தர்கள் அண்மையில் கூறித் திரிந்தனர். மஹிந்த அதனை விமர்சித்து ஒரு வார்த்தையாவது வெளியிடவில்லை. எனவேதான் மஹிந்தவுக்கு தமிழ், முஸ்லிம் மக்களை வளைத்துப் போட முடியாது என்கிறோம்.

தமிழ், முஸ்லிம் மக்கள் என்ன முடிவு எடுத்தாலும் தனிக் கட்சி அமைப்பதைத் தவிர மஹிந்த அணியினருக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவே இல்லை.அவ்வாறு கட்சியொன்றை ஆரம்பித்தாலும் அதனை இப்போது பதிவு செய்ய முடியாது. ஏனெனில் 2011 ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் மரிடைம்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் இன்னமும் நடைபெறவில்லை. தேர்தலொன்று பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் புதிய கட்சிகள் பதிவு செய்யப்படுவதில்லை. எனவே, தனிக் கட்சி அமைத்தாலும் மஹிந்த தமது அணியில் உள்ள ஆறு சிறிய கட்சிகளில் ஒன்றின் பெயரிலேயே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட வேண்டியிருக்கும்.

(எம்.எஸ்.எம்.ஐயூப்)