மாண்டவர்கள் நாங்கள் பேசுகிறோம்….

(தோழர்கள்)

கந்தன் கருணையில்

கருணையற்றுப் பாசிசப்புலியின்

துவக்குச் சூட்டால்

துடிக்கப் பதைக்க

மாண்டவர்கள் நாங்கள்

பேசுகிறோம்…

ஏனென்று கேட்காமல்

எதுக்கென்றும் கூறாமல்

எங்களைக் கைதுசெய்தீர்களே

எங்கேயிப்போது நீங்கள் ?

எங்களை நிராயுதபாணியாக்கி

சித்திரவதைப் பண்ணி

கொன்றுதான் போனீர்களே

எங்கே நீங்கள் ?

எங்கள் மூச்சுக்கள்

காற்றில் கலக்கும்போது

நாங்கள் விட்ட

சாபப் பெருமூச்சு

ஒருநாள் நீதிகேட்கும்…

துவக்கோடும் பீரங்கியோடும்

நவீன ஆயுதத்தோடும்

கொலைவெறித் தாண்டவமாடிய

உங்களின் நிலை

இன்று என்னாச்சு?

எங்களைத் தொலைத்த

நேசிப்புக்கு உரியவர்கள்

இன்றும் எங்களைத்

தேடிக் கொண்டிருக்கிறார்கள்

பாசிசம் முதலில்

முற்போக்காளர்களை அழிக்கும்

கடைசியில் தன்னைத்தானே

அது அழித்துவிடும்…

எவ்வளவோ உதாரணங்கள்

இருந்தும் ஏற்கமறுத்தீரே

மற்றவர் கருத்துக்கு

தலையசைக்க மறந்தீரே

உயர்த்தித் தூக்கிப்பிடித்த

உங்கள் தலைவன் மரணத்ததையே

வெளியில் சொல்லமுடியாத

நீங்களெல்லாம் போராளிகளா ?

ஈழத்தாயின் மடியில்

நித்திரை கொள்ளும்

மாண்டுபோன நாங்கள்

மீண்டும் வருவோம்

பாசிசத்தின் வேர்கள்

அனைத்தும் அறுபடும்வரை

எங்களை நினைவேந்துவோர்

இருக்கும் வரை

கந்தன் கருணையில்

மாண்டுபோன நாங்கள்

மீண்டும் வருவோம்