மாற்று இயக்க அழிப்பின் ஏகபோகம் 30 வருடங்கள்!

1977 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐ.தே.க. அமோக வெற்றியீட்டி பதவிக்கு வந்த பின்னர் 1978 இல் புதிய அரசிலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை அறிமுகப்படுத்தி, ஜே.ஆர். ஜெயவர்த்தனா சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதியானார். இவர், தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியே இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை 1979 இல் கொண்டு வந்தார். இது தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் ரீதியான போராட்டங்களை பயங்கரவாதமெனக் கூறி நசுக்கும் நோக்குடனேயே உருவாக்கப்பட்டது. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்படும் ஒருவரை இந்தச் சட்டத்தின் கீழ் 18 மாதங்கள் தடுப்பில் வைத்து, அதன் பின்னர் அந்தத் தடுப்பினை 3 மாத காலத்திற்கு ஒருதடவை புதுப்பித்து, நீண்ட காலத்திற்கு தடுத்து வைத்திருக்க முடியும். அத்துடன் அச்சட்டத்தில் போஸ்டர் ஒட்டுவதே தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.

ஜே.ஆர். தலைமையிலான ஐ.தே.க. அரசு முற்றுமுழுதான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதினால், தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ் பேசும் மக்கள் தங்களது பரிபூரண ஆசிர்வாதத்தினை வழங்கினார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை பாவித்து அரச படைகள் சந்தேகத்திற்குரிய அனைவரையும் கைது செய்ய தொடங்கியதால், தலைமறைவு ஆயுதப் போராட்ட இயக்கங்கள் உருவாகத் தொடங்கின. இலங்கையை சிங்களவர் தேசம், தமிழர் தேசமென பிரித்துவிட்டால், இலங்கையில் தமிழர்களின் பிரச்சனை முடிந்துவிடுமென தேர்தல்களில் வாக்குக்கேட்பதற்காக முழங்கிய தமிழ்ப் பாரளுமன்ற கட்சிகள் போலன்றி, தமிழர்களுக்கென தனிநாடு ஒன்று அமைப்பதே இவர்களின் அரசியல் கோசமாக இருந்தது. இதற்கு அப்பால் வெகுஜன வேலை, மக்களை அரசியல்மயப்படுத்தல், ஜனநாயக மத்தியத்துவம், ஐக்கியப்படுதல் போன்ற விடயங்களில் போதிய அக்கறையற்றவர்களாகவே இருந்தார்கள். ஜே.ஆர். தனது இந்திய எதிர்ப்பு, மேற்கத்தைய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க, இந்த தலைமறைவு இயக்கங்களின் பின்தளம் தமிழ்நாடெனக் குற்றஞ்சாட்டத் தொடங்கினார். அதில் உண்மையும் இருக்கத்தான் செய்தது.

1983 ஆண்டு ஐ.தே.க. அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் நடந்தேறிய இனவன்செயல்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கட்டுமீறி நடந்து கொண்டிருக்கும் இலங்கையை தன்வழிக்கு கொண்டுவர இந்தியாவிற்கு நல்லதொரு வாய்ப்பினை அளித்தது. இந்திய அரசின் உளவுப்பிரிவு இலங்கைத் தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட இயக்கங்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு இந்தியாவில் ஆயுதப்பயிற்சியளிக்க முன்வந்தது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கென தனிநாடொன்றினை அமைப்பதற்கு இந்தியா உதவுவதாக நினைத்த இயக்கங்களும், தமிழ்நாட்டில் தமது தலைமையகங்களை அமைத்து, முண்டியடித்துக் கொண்டு ஆயுதப்பயிற்சிக்காக தமிழ்நாட்டிற்கு ஓடினார்கள்.

யாழ் குடாநாட்டின் கடற்கரைகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான அரசியல் முன்னறிவற்ற இளைஞர்களும் யுவதிகளும் வள்ளங்களில் இயக்கங்களால் தமிழ்நாட்டிற்கு கூட்டி வரப்பட்டு பயிற்சி முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களுக்கு இயக்கவாரியாக தனித்தனியாக பிரித்து பயிற்சி வழங்கியதோடு நின்றுவிடாது, எல்லா இயக்கங்களுக்கும் தனித்தனியாக ஆயுதங்களும் இந்திய அரசினால் வழங்கப்பட்டது. 1983 ஆண்டு இனவன்செயல்கள் பல ஆயிரக்ககணக்கான இளைஞர்களை இந்தியாவிற்கு ஆயுதப்பயிற்சிக்கு அனுப்பியதோடு நின்றுவிடாது, இலட்சக்கணக்கானவர்களை அகதிகளாக இந்தியாவையும் மேற்கத்தைய நாடுகளையும் நோக்கி இடம்பெயரவும் வைத்தது.

1984, 1985 களில் ஆயுதப்பயிற்சியை முடித்துகொண்ட போராளிகளில் ஒரு பகுதியினர்; யாழ் குடாநாட்டிற்கு திரும்பத் தொடங்கினர். அரசியல் ரீதியாக வழிநடாத்தப்படாமல், ஆயுதங்களை மாத்திரமே கையாளக் கற்றுக்கொண்ட இவர்கள், பொதுவாக இலங்கை அரச படைகளை தாக்கியளிக்கும் மோகங் கொண்டவர்களாகவே இருந்தார்கள். அத்துடன் இந்த இராணுவ மனோபாவம் தமது சொந்த மக்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கு ஏதுவானதாகவும், இயக்க உள்முரண்பாடுகளை ஜனநாயக வழிகளில் தீர்த்துக்கொள்ளும் சிந்தனையை தடுப்பதாகவும், இயக்கங்களிடையே ஐக்கியம் ஏற்பட குந்தகமாகவும் இருந்தது. சகலவிதமான முரண்பாடுகளையும் ஆயுதத்தால் தீர்த்துக் கொள்ளலாமென நம்பினார்கள்.

உள்முரண்பாடுகள் கொண்ட மற்றும் மாற்றுக் கருத்துக்கொண்ட போராளிகளை கொல்லுவது என்ற நடைமுறையை ஆரம்பித்து வைத்தது, தமிழீழ விடுதலைப்புலிகளே. இதற்கு தமிழ் பேசும் மக்களிடமிருந்தோ அல்லது புலிகளுக்கு ஆயதப்பயிற்சியளித்த இந்திய அரசிடமிருந்தோ எந்தவித எதிர்ப்பும் வரவில்லை. ஆரம்பித்திலிருந்தே இந்திய அரசு இயக்கங்களை பிரித்தே கையாண்டார்கள். அதாவது இயக்கங்கள் ஐக்கியப்பட வேண்டும் என்பதற்கு எந்தவித அழுத்தமும் பிரயோகிகிக்கப்படவில்லை.

1982 இல் புளொட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சுந்தரத்தையும், பின்னர் ஒபராய் தேவன் மற்றும் மனோ மாஸ்டர் போன்றவர்களையும் படுகொலை செய்த புலிகள், தாங்கள் தெரிந்தெடுத்திருக்கும் பாதையை தெளிவுறச் செய்தார்கள். அன்று இதற்கு மாற்று இயக்கங்கள் புலிகளுக்கு சரியான பதிலடிகள் கொடுத்திருந்தால், சகல இயக்கங்களையும் முற்றுமுழுதாக அழிக்க வேண்டுமென்ற புலிகளின் எண்ணக்கருவினை முற்றாக தடுத்து நிறுத்தியிருக்க முடிந்திருக்கும். 1986 மே மாதம் முதல் வாரத்தில் ரெலோ இயக்கத்தின் 350 இற்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்று மாற்று இயக்கங்களை அழிப்பதை புலிகள் ஏகபோகமாக்கினார்கள். 1982-1986 காலப்பகுதியில் பாசிஸ்டுகளாக உருவெடுத்த புலிகள், 2009 வரை நிகழ்த்திய அனர்த்தங்களை சொல்லிமாளாது. இதனை தடுத்து நிறுத்திய சக்திகளை நாங்கள் என்றென்றும் நினைவு கூரவேண்டும்.

(வானவில் இதழ் 64)