மீனாட்சிபுரத்திலிருந்து புழல் சிறை வரை…

(ஷங்கர்ராமசுப்ரமணியன்)
ராம்குமாரை புழல் சிறை வரைக்கும் மரணம் தொடர்ந்து துரத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தச் சமூகமும் வேடிக்கை பார்க்க சுவாதியின் கொலை வழக்கு, அதற்குப் பின்னாலுள்ள எத்தனையோ ரகசிய முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதற்குச் சாத்தியப்படாமலேயே முடிந்துவிட்டது. 2012-ம் ஆண்டு வங்கிக் கொள்ளையர்கள் என்று சொல்லப்பட்டு, ஐந்து பிஹார் இளைஞர்கள் சென்னை வேளச்சேரியில் கொல்லப்பட்ட சம்பவம் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது. சம்பவம் நடந்து சில நாட்கள் தொடர்ந்த சலசலப்புகள், ஊடகச் செய்திகள் மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பொதுநினைவின் மறதியில் புதைந்துபோன பழங்கதை அது. இன்னும் எத்தனையோ என்கவுன்டர்கள் மற்றும் மர்மமான முறையில் நடந்த காவல் மரணங்கள் நமது ஞாபகத்தில் நிழலிடுகின்றன.

சுவாதியைக் கொன்றவர் என்று குற்றம்சாட்டப்பட்டு, விசாரணைக் கைதியாகச் சிறையிலிருந்த ராம்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மின் வயரை இழுத்துக் கடித்துத் தற்கொலை செய்து இறந்துள்ளதாக சிறைத் துறை கூறியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வர இன்னும் நாட்களாகும். ராம்குமார் கைதுசெய்யப்பட்டபோதே, கழுத்தை பிளேடால் அறுத்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகக் கூறி மருத்துவமனையில் சேர்த்த பிறகே விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டார். சுவாதி கொலை செய்யப்பட்டதில் தொடங்கி, ராம்குமார் கைது செய்யப்பட்ட விதம் மற்றும் விசாரணை முறை வரை வெளிப்படையாக எல்லோராலும் உணரக்கூடிய ரகசியமும் மர்மத்தன்மையும் பொதிந்த வழக்கு இது.

குலைந்த நம்பிக்கைகள்

நவீனப் புலனாய்வு முறைக்கான எண்ணற்ற விஞ்ஞான முறைகள் சாத்தியமாகக் கூடிய நவீன ஜனநாயகமாக இந்தியா வளர்ந்துவருவதான நம்பிக்கையை, சுவாதி கொலை வழக்கும், அவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாரின் சிறை மரணமும் குலைத்துப்போடுகின்றன. குற்றவாளியை உடல்ரீதியாகச் சித்ரவதை செய்யாத, குற்றவாளிகளின் உரிமைகளையும் மதிக்கும் நவீன விசாரணை முறைகள் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற முதல் உலக நாடுகளில் செயல்படத் தொடங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால், அந்த சிறைகளே எத்தனை ஒடுக்குமுறை இயல்பு கொண்டவை என்பதை அந்நாட்டு அதிபர் ஒபாமாவே இப்படி ஒப்புக்கொண்டுள்ளார். “மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சிறிய தவறிழைத்தவர்கள் என்று சொல்லித் தினந்தோறும் நாடு முழுவதிலுமிருந்து 80,000 மக்கள் சிறைப் பிடிக்கப்படுகிறார்கள். “ஒரு குறுகிய சிறை அறைக்குள் பலரை 23 மணி நேரம் தொடங்கி, மாதக் கணக்கிலும், ஏன் ஓர் ஆண்டு வரைக்கும் அடைத்துவைப்பதில் என்ன அர்த்தம் உள்ளது!” என்று வருந்தியுள்ளார் ஒபாமா.

ஒரு வழக்கை உடனடியாகத் ‘தீர்க்கும்’ அவசரமின்றி, குற்றத்தின் தடத்தையும் குற்றவாளியின் தடங்களையும் சரியாகத் தேடும் அறிவியலும், தடயவியல் தொழில்நுட்பங்களும் இன்று பெருமளவில் வளர்ந்துள்ளன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை சுனந்தா புஷ்கர் போன்ற பிரபலங்களின் மரணங்களே இன்னும் விடை காண முடியாத புதிராக இருக்கும்போது, ராம்குமார் போன்றவர்களின் மரணத்துக்கு சரியான விடை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 2012-ன் அடிப்படையில், அரசுக் கட்டிடங்கள் அனைத்திலும் ஒவ்வொரு 300 சதுர மீட்டர் பரப்பளவிலும் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எல்லா சிறைகளிலும் ஒரு ஆண்டுக்குள் (அதிகபட்சம் இரண்டாண்டுகள்) கண்காணிப்பு கேமராக்களை மாநில அரசுகள் தமது பொறுப்பிலுள்ள சிறைகளில் நிறுவ வேண்டும் என்று 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.தாகூர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சிறைத் துறைக்கு நிதியையும் அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், மாநிலம் முழுக்க விவாதிக்கப்பட்ட சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார், விசாரணைக் கைதியாக இருந்த சிறை வளாகத்தில் சிசிடிவி கேமராவே இல்லை என்று தெரியவந்துள்ளது.

உடலே தண்டனைக் களம்

பழங்காலத்தில், மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்ற கீழைநாடுகளில் குற்றவாளிகளை விசாரிப்பதும் தண்டிப்பதும் கிட்டத்தட்ட கட்டப்பஞ்சாயத்து முறைக்கு இணையானவை. மரண தண்டனைகளும், உடல்ரீதியான சித்ரவதைத் தண்டனைகளும் பொதுமக்கள் பார்வையிலேயே வழங்கப்பட்ட காலம் அது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவரின் உடல்தான் தண்டனைக் களமாக இருந்தது. அப்போது தண்டனை பகிரங்கமாக இருந்தது. ஆனால், விசாரணையில் தண்டனை கொடுக்கும் தரப்பைத் தவிர, வேறு எந்தத் தரப்புக்கும் பங்கில்லை. அது முழுக்க முழுக்க ரகசியமாகவே இருந்தது. அரசனின் உச்சபட்ச அதிகாரம் செயல்பட்ட நீதிமுறை அது.

நவீன ஜனநாயகத்தில் ஒருவர் தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டவராகக்கூடக் குற்றம்சாட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் அவர் முறையான விசாரணைக்கு உட்பட வேண்டும். உச்சபட்சத் தண்டனையாக இந்தியாவில் நிலவும் மரண தண்டனைகூட, மேல்முறையீடு, கருணை மனு ஆகிய பல முறைகளைத் தாண்டிய பின்னரே, போதுமான கால அவகாசத்துக்குப் பிறகே தண்டனைக்கு முன்னர் மிகுந்த கண்ணியத்துடன் நடத்தப்பட்டே அவர் தூக்கு மேடையை அடைகிறார்.

கடமை தவறிய சிறைத் துறை

புலனாய்வு, குற்றம் உறுதிப்படுத் தப்படுதல், நிரபராதி என்று நிரூபிக்கும் வாய்ப்பு, குற்றவாளிக்கான உரிமை கள், அவர் திருந்தி வாழ்வதற்கான சூழல் ஆகியவற்றை வழங்குவதுதான் நவீன ஜனநா யகம் என்று சொல்லப்படும் அரசின் கடமைகள். இங்கே விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும். குறிப்பாக, குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் கைதியின் உடலை இறையாண்மை உள்ளதாகப் பார்ப்பதே அடிப்படை மனித உரிமைகளை மதிப்பதாகும். இப்பின்ன ணியில் ராம்குமாரின் உயிரைப் பாதுகாத் திருக்க வேண்டியது சிறைத் துறையின் கடமை. ஆனால், கைது செய்யும்போது கழுத்தில் பிளேடால் ராம்குமாரே கீறிக்கொண்டதாக போலீஸார் சொன்னதும், தற்போது அவரே மின்சார வயரைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதும் வெளிப் படையாக எதுவும் நடக்கவில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. மீனாட்சிபுரத் திலிருந்து ராம்குமாரை புழல் சிறை வரைக்கும் மரணம் தொடர்ந்து துரத்தியிருக்கிறது என்பது மட்டும் வெளிப்படையான உண்மை.

சுவாதி போன்ற ஒரு இளம்பெண், பட்டப் பகலில் கழுத்தில் அறுபட்டு பொது இடத்தில் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் கொல்லப்படும் தருணத்தில் ஒட்டுமொத்த சமூகமும் அந்தக் கணத்தில் கொலையாளியாகிவிடுகிறது. அதே போல, சுவாதி கொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர், சிறையில் மர்மமான முறையில் மரண மடையும்போது ஒட்டுமொத்தச் சமூகமும் அந்த மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியதாக ஆகிவிடுகிறது!

(The Hindu)