முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் பட்டாப்பட்டி அன்றாயர் விற்பனை!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார் அவ்வைப் பாட்டி. அவவின்ற பூட்டப்பிள்ளையள் புலம் பெயர் நாட்டில் புதுப்புது ஐடியாக்களுடன் திரவியம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு புல்லரிக்க வைக்கின்றனர். கோலாகலமாகக் கொத்துப்போட்டு பத்தும் பலதும் பெற்று வாழும் தமிழர் ஒருங்கிணைபுக் குழு தனது(TCC) கொத்து வியாபாரத்தை விஸ்தரிக்க பலான ஐடியா வழங்குவதே எனது நோக்கம்.

இப்பெல்லம் மலையாள மாந்திரீகர்களை லண்டனுக்குக் கூப்பிட்டு தமிழ் மக்களின் எதிர்காலத்தை கூற வைப்பது பாஷன். அப்படியே ஒரு மாந்திரீகரை மடக்கிப் போட்டு அவ்வைப் பாட்டியை உயிர்ப்பித்து பாடச் சொல்லலாம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்குப் பதிலாக கொத்துப் போட்டு பத்தும் பெற்றுக்கொள் என்று பாடுவிக்கலாம்.அல்லது தேசியம் பேசி திரவியம் தேடு எனவும் பாடுவிக்கலாம்.

எப்படிப் பாடினாலும் அவ்வைக்கு கொமிசன் பேசிஸ் இல பங்கு கொடுக்கலாம். அல்லது ஏலம் போட்டு அவ்வைக்கு குறைச்சுப் போட்டுக் குடுக்கலாம். 2015 மா வீரர் தினத்தில கொத்துரொட்டிக் கடைகளை ஏலத்தில விட்ட பெருந்தகைகள் அவ்வை என்ன ஐன்ஸ்டைன் வந்தாலும் கடாசி எறிந்துப்போடுவின. மக்களுக்காகவே உயிர்துறந்த போராளிகளின் தியாகங்களை கொத்து ரொட்டியோட சேர்த்து ஏலத்தில விட்ட ரீசீசீ கொம்பனிக்கு இந்த ஆண்டின் சிறந்த வியாபாரிகளாக பரிசு குடுக்கச் சொல்ல மைத்திரி – ரனில் அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்யலாம்.

கொத்து ரொட்டி மட்டுமா, கட்லட், வடை, வாய்ப்பன், போண்டா, மட்டன் அண்ட் மரக்கறி ரோல், சோத்துப் பார்சல் போன்ற இத்தியாதி சாப்பாடுகள் புடை சூழ, மணிக்கூடு, பூ,கொடி போன்ற இன்னோரன்ன மளிகைச் சாமான்களுடன் ரீசீசீ நடத்தும் வருடாந்த மாவீரர் தின வியாபாரம் இன்னும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

முள்ளிவாய்க்கால் தினத்தையும் தாமே நடத்தப்போவதாக ரீசீசீ அதிரடி அறிவுப்புச் செய்ய அதன் விசிலடிச்சான் குஞ்சுகள் பேஸ்புக்கில் உற்சாகமாகீட்டினம். படம் போட்டு ரீசீசீ பிரச்சாரத்தை முடுக்கி விட்டிருக்கினம். படத்தின் மூலையில் ரீசீசீ பிராண்ட் கொத்துக்கள் கொலஸ்ரோலுக்கு சிறந்த மருந்து என்ற விளம்பரத்தைத்தான் காணோம்.

ஏற்கனவே தியாகிகளின் தினமான மாவீரர் தினத்தை Funfair ஆக மாற்றிய ரீசீசீ முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் எடுத்தால் circus மாற்றிவிடுவார்கள். அது வசதியும் தான், ரீசீசீ என்பதை தமிழ் சேர்கஸ் கொம்பனி( Tamil circus company) என பெயர் மாற்ற அது தான் வசதி. ரீசீசீ என்ற பாதாள உலகக் குழுவை நடத்துவது ஸ்பெசல் பிராஞ். அவர்கள் நடத்தும் சேர்கஸ் கொம்பனியில் கொத்துரொட்டியும் பாதாளம்வரைபாய்ந்திருக்கிறது.

தப்பித் தவறி அவ்வை உயிரோடு வந்தால் அவர் பட்டாப்பட்டியிலிருந்து வந்ததாக ஒரு வதந்தியைக் கிளப்பிவிட்டு, பட்டாப்பட்டி அண்டாயரை தமிழ்த் தேசிய உள்ளாடை ஆக்கி வியாபாரத்தை விஸ்தரிக்க ஆரம்பித்துவிடுவார்கள் கவனம்!

[ நிரஞ்சன்-அன்டனி ]