மோடிக்கு மாற்றாக வருகிறார் ராகுல்?

(எம். காசிநாதன்)
250 சட்டமன்றத் தொகுதிகளுக்கு குஜராத்திலும் ஹரியானாவிலும் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தல் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதா, விரிவடைந்துள்ளதா என்பதை வெளிப்படுத்தும் “மந்திரக்கோலாக” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கும், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளும் இரு இந்திய தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன.

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசாங்கத்தின் பிரதமராக இருக்கும் நரேந்திரமோடியும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைவராக வரப் போகும் ராகுல் காந்தியும் இந்த அரசியல் ‘அக்னி பரீட்சை’யில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம், அனைத்திலும் ஆதார் மயம் என்று இந்தியாவை டிஜிட்டல் தேசமாக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமோக ஆதரவு இருக்கிறது என்பது பாரதீய ஜனதாக் கட்சியின் பிரசாரம்.

120 கோடி மக்களின் ஆதரவும் இருக்கிறது என்பது பா.ஜ.கவின் வாதம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ “பா.ஜ.க ஒரு கோர்ப்பரேட் அரசு. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் போன்றவற்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகமாக இருக்கிறது” என்பது, விரைவில் காங்கிரஸ் கட்சியின் “பிரதமர் வேட்பாளராக” மாறப் போகின்ற ராகுல் காந்தியின் பிரசாரம்.

இந்திய அரசியல் களம் பொதுத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கும் போது, மக்கள் மனதில் இருக்கின்ற “பிரதமர் மோடிக்கு யார் மாற்று” என்ற கேள்வி முன் வைக்கப்படும். நரேந்திரமோடிக்கு, ராகுல் காந்தி சரியான போட்டி வேட்பாளர் அல்ல என்பதுதான் பல எதிர்க்கட்சிகளின் சிந்தனையாக இருக்கிறது.

பீஹார் மாநில முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமார் திடீரென்று பா.ஜ.க பக்கமே அணி மாறியதற்கு இதுதான் அடிப்படை காரணம். தேசிய வாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் அமைதியாக இருப்பதற்கும், தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஓடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் போன்றோருக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்தின் மீது வருத்தம் இருந்தாலும், மோடிக்கு எதிராகத் திரும்பாமல் இருப்பதற்கும் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்காததுதான் காரணம்.

இந்தச் சூழ்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீஹாரில் லாலு பிரசாத் யாதவ், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் போன்றோர் மட்டுமே பிரதானமாக பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் காலூன்ற பா.ஜ.க பல யுக்திகளை மேற்கொள்கிறது என்பது மம்தா பானர்ஜியின் கோபம்.

பீஹாரில் நிதிஷ் குமாரை கையில் எடுத்து, தன் கட்சியின் அரசியல் எதிர்காலத்துக்கு பா.ஜ.க அச்சுறுத்தலாக இருக்கிறது என்பது லாலுவின் கோபம். ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.கவை பா.ஜ.க ஆளும் மத்திய அரசு தீவிரமாக ஆதரிக்கிறது என்பது தி.மு.கவின் ஸ்டாலினுக்கு கோபம்.

ஆனால், நேற்றுவரை மேற்குவங்கம், தமிழ்நாடு, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக இருந்த பிரசாரம் இப்போது மற்ற மாநிலங்களிலும் தலை தூக்குகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்பட்ட சோதனையால் வேலை வாய்ப்பின்மை, சிறு மற்றும் குறுந் தொழில்கள் ஜி.எஸ்.டி சட்டத்தால் பாதிக்கப்பட்டமை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் மூன்றரை வருடங்கள் முடிந்த நிலையில் இருக்கும் பா.ஜ.க அரசுக்குச் சவாலாக மாறி நிற்கிறது.

இதனால், “யார் பிரதமருக்கு மாற்று” என்ற கேள்வி மறைந்து, எந்தக் காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கருதினார்களோ, எந்த அறிவுஜீவிகள் பொருளாதார மேதை டொக்டர் மன்மோகன்சிங் பிரதமராகத் தேவையில்லை என்று பிரசாரம் செய்தார்களோ, அவர்கள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சி திரும்ப வந்தால் கூட பரவாயில்லை என்ற மனநிலைக்கு இப்போது மெல்லத் திரும்புகிறார்கள். ராகுல் காந்தியின் பிரசாரத்தில் மட்டுமல்ல- பா.ஜ.கவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வோர் அனைவரது களங்களிலும் இதைக் காண முடிகிறது.

“யார் பிரதமர் மோடிக்கு மாற்று” என்ற கேள்விக்கு 2014 முதல் 2016 நவம்பர் வரை இருந்த மதிப்பு இன்று மெல்ல மெல்ல சரிந்து வந்திருக்கிறது. டெல்லி, ஹைதராபாத் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற “மாணவர் தேர்தல்கள்”, டெல்லியில் நடைபெற்ற இடைத் தேர்தல், பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்ற பா.ஜ.கவைச் சேர்ந்த நடிகர் வினோத் கண்ணா மறைந்த நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தல் முடிவு, குஜராத் மாநில உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள், மஹாராஷ்டிரா உள்ளூராட்சி இடைத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு இருந்த அசைக்க முடியாத செல்வாக்கு ஆடத் தொடங்கியிருக்கிறது என்ற பிரசாரத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. குஜராத்தைப் பொறுத்தமட்டில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம். அவருக்கு அரசியல் வாழ்க்கைக்கு ஏணிப்படியாக அமைந்த மாநிலம். அவர் 2001 முதல் 2014 வரை 13 வருடங்கள் முதல்வராக இருந்த மாநிலம்.

பா.ஜ.கவின் மூத்த தலைவரான கேசுபாய் பட்டேலுக்குப் பிறகு முதலமைச்சரான மோடிக்கு அவர் குஜராத்தில் இருக்கும் வரை சவால் எழவில்லை. குஜராத் கலவரங்களால் ஏற்பட்ட சோதனையைக் கூட தனக்கு சாதனையாக்கி வெற்றி பெற்றார்.

182 சட்டமன்ற தொகுதிகளில் 127 சட்டமன்ற தொகுதிகளில் பா.ஜ.கவை வெற்றி பெற வைத்து 2002 இல் 49 சதவீத வாக்குகளைப் பெற்று, அக்கட்சிக்கு குஜராத்தை அசைக்க முடியாத கோட்டையாக்கினார்.

2012 வரை பா.ஜ.கவின் வாக்கு வங்கியை 47 சதவீதத்துக்கும் குறையாமல் பார்த்துக் கொண்டார். மோடி முதல்வராக இருக்கும் வரை காங்கிரஸ் கட்சி 182 தொகுதிகளில் 50 முதல் 60 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தனது வாக்கு வங்கியை 38 சதவீதத்துக்கும் மேல் உயர்த்த முடியவில்லை.

ஆனால், மோடி பிரதமரான பிறகு “பட்டேல் இட ஒதுக்கீட்டு” கொள்கையை முன் வைத்து கலக்கிய ஹர்திக் பட்டேல் பா.ஜ.கவுக்குச் சிம்மசொப்பனமாக மாறி விட்டார். மத்திய அரசு எடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளும் மக்களிடம் ஆதரவு பெறுவதற்கு பதில் அதிக வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்து விட்டது.

ஆகவே, குஜராத் மாநிலத்தில் மோடி இருந்த போதே 38 சதவீத வாக்குகளை எடுத்த காங்கிரஸ் கட்சியை கட்டுப்படுத்த அங்கே மோடி போன்ற தலைவர் இன்றைக்கு பா.ஜ.கவுக்கு இல்லாமல் குஜராத்தில் தடுமாறி நிற்கிறது. தேர்தல் முடிவுகளில் இதன் தாக்கம் எதிரொலிக்கும்!

இமாச்சலப்பிரதேச சட்டமன்றத்தில் 68 தொகுதிகள் இருக்கின்றன. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வீர்பத்ர சிங் முதலமைச்சராக இருக்கிறார்.1998 முதல் இன்று வரை அங்கு காங்கிரஸோ, பா.ஜ.கவோ 68 தொகுதிகளில் 50 தொகுதிகளை பிடித்த வரலாறே கிடையாது. 1998 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவும், காங்கிரஸும் தலா 31 எம்.எல்.ஏக்களை பெற்ற விநோதம் நடந்தது. அதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸிலிருந்து விலகிய சுக்ராம் தனியாக இமாச்சல விகாஸ் காங்கிரஸ் என்று உருவாக்கி 9 சதவீத வாக்குகளை பிரித்ததே.

அதன் பிறகு 2003 மற்றும் 2012 சட்டமன்ற தேர்தல்களில் தலா 43 மற்றும் 36 இடங்களைப் பிடித்து ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ் கட்சி. 2007ல் மட்டும் 41 இடங்களுடன் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க.

காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.கவும் தோற்ற போது எல்லாம் தலா 38 சதவீத வாக்குகளை பெற்றதும், வெற்றி பெற்ற போது தலா 43 சதவீத வாக்குகளைப் பெற்றதும் இந்த மாநிலத்தின் வினோதம். வெற்றியிலும், தோல்வியிலும் பா.ஜ.க, காங்கிரஸ் இங்கு சமபல கூட்டாளிகள்.

இந்நிலையில், காங்கிரஸ் ஊழல் புகாருக்கு உள்ளான, 83 வயதான இமாசல பிரதேச முதல்வர் வீர்பத்ரசிங்கை பிரசார தலைவராக முன்னிறுத்தியுள்ளது. அதற்கு போட்டியாக 73 வயதில் உள்ள பிரேம் குமார் துமலை மீண்டும் பா.ஜ.க களமிறக்கியுள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக நடக்கும் பிரசாரத்தால் வெற்றி கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி துணிச்சலாக ஊழல் புகாருக்கு உள்ளான முதல்வரையே மீண்டும் களத்தில் நிற்க வைத்துள்ளது எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஆகவே, இமாச்சல பிரதேசத்தை கோட்டை விட்டு, குஜராத்தை கைப்பற்றினால் கூட போதும் என்பதுதான் காங்கிரஸின் தற்போதைய சிந்தனையாக இருக்கிறது.
அந்தச் சிந்தனைக்கு வெற்றி கிடைத்தால், அது பிரதமர் மோடிக்கு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் சவாலாக இருக்கும்.

அது மட்டுமின்றி குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் “பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி மாற்று” என்ற பிரசாரம் முழு வேகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி வேகமெடுக்கும் என்பதே இன்றைய அரசியல் சூழ்நிலை!