யார் பைத்தியக்காரர், காந்தியா? சர்கோசியா?

ஃப்ரான்சில் சென்ற 14 அன்று பாஸ்டில் தினக் கொண்டாட்டத்தின்போது நடந்த பயக்கரவாதத் தாக்குதலில் (Nice attack) 84 பேர் கொல்லப்பட்டு 200 க்கும் மேற்பட்டோர் காயமடந்ததை ஒட்டி இன்று அங்கு நெருக்கடி அறிவிக்கட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெறித்தனமாக ட்ரக்கை ஓட்டிக் கொலைகளைச் செய்த நபர் அபோதே சுட்டுக்கொல்லப்ப ட்டான். மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த அரசும் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும்தான்.


இதற்கிடையில் முந்தைய ஃப்ரெஞ்ச் தலைவர் சர்கோஸி, இன்றைய அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் தவறி விட்டதெனக் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் இப்படிக் குற்றம்சாட்டுவர் என்பதும் எதிர்பார்க்கக் கூடியதுதான்.
ஆனால் சர்கோசி இன்னொன்றையும் சொல்லியுள்ளர். இத்தகைய பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்களை ஊகித்து அவர்களின் உடலில் எலக்ட்ரானிக் உளவுப் பட்டை ஒன்றைப் பொருத்தி அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டும். அல்லது அவர்களை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்றுள்ளார்.
இது நிறைவேற்றப்படுமாயின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தாலே பதட்டமாக உள்ளது.
இந்நிலையில்தான் ஜுவன் கோல் ZNet ல் பதிந்துள்ள இந்தப் பத்தியைக் காண நேரிட்டது.
இத்தகைய பயங்கரவாதக் கொடுஞ்செயல்கள் உண்மையில் நம் காலத்திய மிகவும் கவலைக்கும் அசத்திற்கும் உரிய பிரச்சினைதான். ஆனால் இத்தகைய தாக்குதல்காரர்கள் குறிப்பான நபர்களைத் தேடித் தாக்குவதில்லை. தாக்குவது எனத் திட்டமிட்டவுடன் கண்ணில் பட்டவர்களைத் தாக்குகிறார்கள். இந்நிலையில் முன் கூட்டி யார் இப்படிச் செய்வர் எனக் கண்டுபிடிப்பது இதனால் சாத்தியமில்லாமல் போகிறது.
அப்படியானால் சர்கோஸி சொல்வதுதான் சரியா? சந்தேகப்படுபவர்களை இப்படி முன் கூட்டியே தண்டிக்க வேண்டியதுதானா? குற்றப் பரம்பரைச் சட்டத்தை எல்லாம் நடைமுறைப் படுத்தியவர்கள்தானே நாம்.
இல்லை. மனிதாபிமானமுள்ள யாரும் அப்படிச் சிந்திக்க முடியாது. சர்கோசியைத் தவிர.
வேறென்ன வழி.
ஜுவன் கோல் சொல்லும் வழியை ஒரு முறை படித்துப் பாருங்கள். ஒரு வேளை அசட்டுத்தனமாகத் தோன்றலாம். ஆனால் நமக்குத்தான் வேறு வழி தெரியவில்லையே. எல்லாவற்றையும் யோசித்துத்தானே ஆக வேண்டி உள்ளது.
ஜுவன் கோல் தனது இந்த வழியை காந்தியம் எனச் சொலுகிறார்.
நாம் இன்று அச்சத்தில் உறைந்துள்ளோம். ஆனால் அச்சம் என்பது தானாக உருவாவது அல்ல. அது வெறுப்பின் விளைபொருள்.வெறுப்பும் அச்சமும் இரட்டைக் குழந்தைகள். வெறுப்பு
இல்லாது அச்சமில்லை.
சர்கோசி யார் உடலில் எலக்ட்ரானிக் உளவுக்கருவியைப் பதிக்கச் சொல்கிறாரோ அவர்களை நீங்கள் கட்டித் தழுவுங்கள். அவர்களின் பெருநாட்களில் வாழ்த்துச் சொல்லுங்கள். அவர்களோடு விருந்துண்ணுங்கள். கலந்து மகிழுங்கள்.
ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் இவர்கள் பெரும்பாலும் புலம் பெயர் தொழிலாளிகளாகத்தான் வருகிறார்கள். அவர்கள் வாழும் பகுதிகள் சேரிகளாகத்தான் உள்ளன. அதை மாற்றி அமையுங்கள். தொழிற் பேட்டைகளாக்குங்கள்.
உங்களின் நாடு அவர்களின் நாட்டு வளர்ச்சிக்கு உதவட்டும். இன்றைய தாக்குதலைச் செய்தவன் ஒரு துனீசியன். அந்த நாட்டிற்கு அமெரிக்கா ஆண்டு தோறும் 50 மிலியன் டாலர் உதவுகிறது. பெரிய தொகை இல்லை.
ஒரு நவீன போர் விமாநத்தின் விலைதான். அமெரிக்காவின் 3.8 ட்ரில்லியன் டாலர் பட்ஜெட்டில் இது ஒரு தூசு. உங்கள் நாடும் இதைச் செய்யட்டும்.
நண்பர்களே! உங்களுக்கு இது குறித்து என்ன தோன்றுகிறது?
பைத்தியக்காரத்தனம்…
ஆனால் பயங்கரவாதத்தையும் தீவிரவாதத் தாக்குதல்களையும் முறியடிக்க நாம் இதுவரை முயன்ற எல்லா நடவடிகைகளும் இதைவிடப் பயித்தியக்காரத்தனமாகவும், கேனத்தனமாகவும்தானே முடிந்துள்ளன…..?
ஆனால் காந்தியத்தைப் பயித்தியக்காரத்தனம் எனச் சொல்வதுதான் நமக்கு எளிதாகிவிட்டது.
ஆனால் உண்மையில் யார் பைத்தியக்காரர்?
காந்தியா? சர்கோசியா? ஹொல்லன்டேயா? நீங்களா? நானா?

(Marx Anthonisamy)