யாழ்ப்பாணத்தில் சம உரிமை இயக்கம் நடத்தும் கலாசார விழாவில் கலந்து கொண்டபோது…

 

தெற்கிலிருந்து இந்தக் கலாசார விழாவுக்காக லால் ஹாகொட, ரோஹன பொதுலியத்த உள்பட சுமார் பத்துக் கவிஞர்கள் யாழ்ப்பாணம் வந்திருக்கின்றனர். கவிஞர்கள் மட்டுமில்லை, அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே, கிங்ரத்னம் போன்ற புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், ஒப்படக்கலைஞர்கள் எனப் பல சமாதான விரும்பிகளும் வந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஏறக்குறைய 300 பேருக்கும் மேல்.

உடல் நலமற்ற நிலையிலும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும், யாழ்ப்பாண மக்களுடன் உரையாட வேண்டும் என மூத்த கவிஞர் லால் ஹாகொட பயணித்து வந்தது முக்கியமானது.

இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் நேசத்தையும் பரஸ்பரத்தொடர்பாடலையும் ஊக்குவிப்பதே இவர்களுடைய நோக்கம். இந்த நிகழ்ச்சியில் அவன்த ஆடிகலவின் கார்டூன்கள், நயனஹாரி அபேநாயக்க, லால் ஹாகொட ஆகியோரின் ஒளிப்படங்கள், சூரி, கோ.கைலாசநாதன் போன்றவர்களுடைய ஓவிங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இவற்றை விட சமாதானத்தின் மகத்துவத்தையும் அதனுடைய தேவையையும் மக்களுடைய உரிமைகளையும் உணர்த்தும் இன்னும் ஏராளமாக ஒளிப்படங்களும் காட்சியில் இணைக்கப்பட்டிருந்தன. தர்மசேன பத்திரிராஜாவின் “பொன்மணி“, அசோக ஹந்தகமகவின் “இனி அவன்“, ந. கேசவராஜனின் “அம்மா நலமா“, கிங்ரத்தினத்தின் “கந்துகரயே தோங்காராய“ பிரசன்ன விதானகேயின் “உசாவ நிஹண்டய்“ ஆகிய படங்களும் குறும்படங்கள் சிலவும் திரையிடப்படுகின்றன. அத்தனையும் போரின் வலியையும் சமாதானத்தின் அவசியத்தையும் அதனுடைய ருசியையும் உணர்த்துகின்றவை.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்ச்சியில் சந்திப்புகளும் உரையாடல்களுமே முக்கியமானவை. அவையே சமாதானத்துக்கான பாதையை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் என்பதால் உரையாடல்களைச் செய்வதற்கான முறையில் வடக்கில் பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், எதிர்பார்க்கப்பட்டதை விட யாழ்ப்பாணத்திலிருந்து கலைஞர்களும் படைப்பாளிகளும் கலந்து கொண்டது குறைவாகவே இருந்தது. இருந்தும் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் உரையாடல்களை நடத்தியது சிறப்பு.

கலாச்சாரத் தலைநகர் என்று பெருமை கொண்டாடும் யாழ்ப்பாணத்தில் சர்வதேசத் திரைப்பட விழாவுக்குக் கலந்து கொண்டவர்கள் மிகக் குறைவு. A GUN & A RING படம் திரையிடப்பட்ட்போது ஆட்களே இல்லை. நடக்கின்ற புத்தக வெளியீடுகள் போன்வற்றுக்கு அதிக பட்சம் 75 க்குள்ளானவர்களே திரும்பத்திரும்ப வருகிறார்கள். எரிக்கப்பட்டதாக ஆண்டுதோறும் கண்ணீரால் கரைக்கும் நூலகத்துக்கு போகின்றவர்களின் தொகையைக் கேட்டால்…. துக்கத்தாலும் வெட்கத்தாலும் உங்கள் தூக்கமே போய்விடும்.

தமிழ் மக்கள் “வேறு எதையோவெல்லாம்“ யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

(Karunakaran)