யாழ். மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா?

யாழ்ப்பாண மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார்? இந்த கேள்விதான் அரசியலரங்கில் சூடான பேசுபொருளாக இருக்கிறது. முதல்வர் கனவுடன் பல கட்சிகள், பல வேட்பாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பழம் தின்று கொட்டைபோட்டவர்கள் முதல் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் வரை முதல்வர் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். வாயிருக்கிறவன் எல்லாம் பகோடா சாப்பிட முடியுமா?

முடியாது. பல்லிருக்கிறவன் மட்டும்தான் பகோடா சாப்பிடலாம். இப்படி மிகவும் லோக்கலாக உவமை சொன்னதற்கு காரணம்- கனவோ, தேர்தலில் வெற்றியடைவதோ மட்டும் ஒருவரை முதல்வராக்காது. அதற்கு மேலே நிறைய விசயங்கள் இருக்கிறது.

புதிய உள்ளூராட்சிசபைகளின் விதிப்படி தவிசாளர்களை கட்சிதான் தேர்வுசெய்யும். கட்சிக்குள் யார் செல்லப்பிள்ளையோ அவர்தான் தவிசாளர். மாநாகரசபை முதல்வரும் அப்படித்தான்.
யாழ்ப்பாண மாநாகரசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி- ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டு, ஈ.பி.டி.பி, ஐ.தே.க, முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் இன்னபிறர் என பல்முனை போட்டியிருந்தாலும், யார் வெற்றியடைவார்கள் என்பதில் யாருக்கும் குழப்பமிருக்காது. இந்த தேர்தல் உசைன்போல்ட்டிற்கும் உள்ளூர் ஓட்டக்காரனிற்குமிடையிலான போட்டியாகத்தான் இருக்கும். உசைன்போல்ட் யார் என்பதை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லைத்தானே!

மொத்தத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகாமிற்குள் இருந்துதான் மாநகரசபை முதல்வர் நியமிக்கப்பட போகிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அடுத்து முதல்வரிற்கான இழுபறி ஆரம்பித்து விட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றா சொன்னோம்? … யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் தமிழரசுக்கட்சிக்கு உரியது. என்னதான் தலைகீழாக நின்றாலும் பங்காளிக்கட்சிகள் இப்போதைக்கு அதில் பங்குகோர முடியாது. இந்த இழுபறியெல்லாம் தமிழரசுக்கட்சிக்குள்தான் நடக்கிறது.

இன்றைய திகதியில் முதல்வர் பந்தயத்தில் ஐவர் இருக்கிறார்கள். அவர்கள் யார்?

பட்டியலில் திடீரென நுழைந்தவர் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைகழக உபவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை. ஈ.பி.டி.பி கட்சியுடன் நெருக்கமாக இருந்தவர். அண்மையில் எல்லை மீள் நிர்ணயம் குறித்து ஒரு விளக்கத்தை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிற்கு செய்திருந்தார். இதையடுத்து பாலசுந்தரம்பிள்ளையின் பெயரும் முதல்வர் பட்டியலில் பரவலாக அடிபட தொடங்கியுள்ளது. எனினும், இந்த திகதிவரையும் அவர் பட்டியலில் இல்லையென்பதே உண்மை. தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அண்மையில் இவரை தொடர்புகொண்டு, தேர்தலில் போட்டியிடுங்கள் என கேட்டிருக்கிறார். எனினும், தனக்கு இதில் ஆர்வமில்லையென அவர் மறுத்துவிட்டார்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கிணங்க, அடுத்தடுத்த முறை முயற்சிகளில் அவர் சம்மதிக்கிறாரோ தெரியவில்லை. ஆனால், உடனடியாக பட்டியலில் இல்லை.

அடுத்தவர் ராஜதேவன். முன்னாள் மாநாகரசபை உறுப்பினர். தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார். தேர்தல் என்றதும் ஊர் திரும்பியுள்ளார். முதல்வர் நாற்காலியை குறிவைத்துள்ளார். எனினும், அதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவேயுள்ளன.

வடமாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரனும் இந்த பந்தயத்தில் இருக்கிறார். ஜெயசேகரனும் முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர். பின்னர் தமிழரசுக்கட்சி மாகாணசபை உறுப்பினராக பதவியேற்றுள்ளார்.

மாகாணசபை உறுப்பினராக பதவியேற்பதற்கு முன்னர்வரை மாநாகரசபை முதல்வர் கனவுடன் இருந்தவர். இப்பொழுதும் அந்த கனவுண்டு.
மாவை சேனாதிராசாவே நேரில் அழைத்து மாகாணசபை உறுப்பினராக பதவியேற்குமாறு கோரியபோதும், “மாநகர முதல்வருக்காக காத்திருக்கிறேன்“ என்றுதான் பதிலளித்தாராம். “அதற்கு நாள் இருக்கிறது, சமயம் வரும்போது பார்க்கம்“ என்று சொல்லித்தான் மாகாணசபை உறுப்பினராக்கப்பட்டார். அடுத்த மாநகரசபை முதல்வர் பதவி தனக்கு கிடைக்குமென உறுதியாக நம்பிக்கொண்டிருப்பவர்களில் இவரும் ஒருவர். யாழ் நகரத்தில் உள்ள வர்த்தகர்களின் கணிசமான செல்வாக்கு தனக்கிருக்குமென நம்புகிறார்.

ஆனால் தமிழரசுக்கட்சியின் உயர்மட்டத்தின் ஒரு பகுதிக்கு ஜெயசேகரன் முதல்வராவதில் உடன்பாடில்லை. வர்த்தகர் சங்க தலைவராக இருப்பது மாநகர நிர்வாகத்தை நடத்த போதுமான தகுதியாகுமா என கேட்கிறார்கள்.

(Page Tamil)