ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேற்றம்: மேற்குலகின் இயலாமை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் நடப்புகள் பலவற்றுக்கு, தர்க்கரீதியான விளக்கங்கள் இல்லை. அதையும் மீறிச் சொல்லப்படும் விளக்கங்கள், தர்க்கரீதியானவை அல்ல. அத்தகைய விளக்கங்கள் சொல்லப்படுவதைவிட, சொல்லாமல் விடுவது அதிகம். தற்போதைய உலக அரசியலில், அரசியல் நடத்தை என்பது, வலிமையால் தன்னை நிலைநிறுத்த முனைவது. வலிமையால் நிறுவமுடியாத போது, அவதூறும் பொய்யும் புனைகதையும் உண்மைகள் போல் சொல்லப்படுகின்றன. இதனாலேயே ‘பொய்ச் செய்தி’களின் காலத்தில், நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம்.

ரஷ்ய இராஜதந்திரிகளை, பல்வேறு மேற்குலக நாடுகள் வெளியேற்றியுள்ள நிலையில், இதற்கான ரஷ்யாவின் பதில் நடவடிக்கை, என்னவாக இருக்கும் எனத் தெரியாமல், சர்வதேச அரசியல் அரங்கு, நிச்சயமின்மையால் நிரம்பிய நிலையில் இருக்கையில், இக்கட்டுரை எழுதப்படுகிறது. இக்கட்டுரை எழுதப்படும் போது, 25 நாடுகள் ரஷ்ய இராஜதந்திரிகளைத் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளன.

இதற்குப் பதிலளித்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சேர்கே லவ்ரோவ், “பொறுப்பற்ற கூட்டு ஆத்திரமூட்டலை, நாம் உன்னிப்பாகக் கவனிக்கிறோம். இதற்கான பதில் நடவடிக்கைகள் குறித்து, காலப்போக்கில் அறிந்து கொள்வீர்கள். இந்நெருக்கடியை நாம் தொடக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் பதில், எவ்வளவு பாரதூரமானதாக இருக்கும் என்பதையிட்டு, அரசியல் நோக்கர்கள் கவலை கொண்டுள்ளார்கள். கடந்த ஒரு தசாப்த காலமாக, மாற்றமடைந்து வந்துள்ள உலக அரசியல் அரங்கில், ரஷ்யாவின் அதிகரித்துள்ள வகிபாகமும் உலக அலுவல்களில் தவிர்க்கவியலாத சக்தியாக, ரஷ்யாவின் மீளெழுச்சியும் மேற்குலகின் விருப்புக்குரியதல்ல.

பொருளாதாரத்தடைகள், தனிமைப்படுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் ஊடு, ரஷ்யாவைக் குறிவைத்த முயற்சிகள் கடந்த ஒரு தசாப்தகாலமாக வெற்றியளிக்கவில்லை.

அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளும், அதன் ‘நேட்டோ’ கூட்டாளிகளும் உலக அரசியல் அரங்கில், வகித்து வந்த தனித்துவமான மேன்நிலையை, கடந்த இரு தசாப்தங்களில் இழந்துள்ளனர்.
ஒருபுறம் ரஷ்யாவின் மீள்வருகை, உலக அரங்கில் தவிர்க்கவியலாத இடத்தை அதற்கு வழங்கியுள்ளது.

மறுபுறம், சீனா தன்னை ஒரு பொருளாதார வல்லரசாக நிறுவியுள்ளமையும் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவும் ரஷ்யாவுக்கு வலுச் சேர்த்துள்ளன.

இவை, 1990இல் பெர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, கெடுபிடிப்போரின் முடிவில், அமெரிக்கா தலைமையில் உருவான புதிய உலக ஒழுங்கை முடிவுக்குக் கொண்டு வந்தன. இப்போதைய உலக அலுவல்களில், ரஷ்யா முக்கிய சக்தியாகும்.

உலக அரங்கில் ரஷ்யா, தனது வருகையை, தனது அண்டை நாடான ஜோர்ஜியாவின் ஆத்திரமூட்டல்களுக்கு, இராணுவரீதியாகப் பதிலளித்ததன் மூலம், 2008ஆம் ஆண்டு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, கிரிமியா இணைப்பு, சிரிய யுத்தத்தில் சிரிய அரசுசார்பாகப் பங்கெடுத்தமை, ஈரானின் அணுசக்தி உடன்படிக்கையில் ரஷ்யா வகித்த முக்கிய பங்கு என்பன, தன்னைத் தனிப்பெரும் சக்தியாக, ரஷ்யா நிலைநாட்டியதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளாக அமைந்தன. இப்பின்புலத்திலேயே, இப்போதைய புதிய நெருக்கடியை நோக்க வேண்டியுள்ளது.

இம்மாதம் நான்காம் திகதி பிரித்தானியாவில் உள்ள சால்ஸ்பெரியில், ரஷ்யாவின் முன்னாள் உளவாளியும் தற்போதைய பிரித்தானிய உளவாளியுமான சேர்ஜி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர், மர்மமான முறையில் நஞ்சூட்டப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் இச்செயலை ரஷ்யாவே செய்தது என்று குற்றஞ்சாட்டியது.

இதைத் தொடர்ந்து, இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, ரஷ்யாவுக்குக் காலக்கெடு விதித்தார். இச்சம்பவத்துடன் ரஷ்யாவுக்கு தொடர்பில்லை என்று குற்றச்சாட்டை மறுத்ததோடு, சான்றுகள் இல்லாத நிலையில் எதையும் ஏற்றுக் கொள்ளவியலாது என்றும் ரஷ்யா தெரிவித்தது.

காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா 23 ரஷ்ய இராஜதந்திரிகளைத் திரும்பிச் செல்ல உத்தரவிட்டது. இதையடுத்து, அமெரிக்கா 60 ரஷ்ய இராஜதந்திரிகளைத் திருப்பி அனுப்பியது.

அதேபோல, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெவ்வேறு எண்ணிக்கையில் ரஷ்ய இராஜதந்திரிகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்கள். இச்செயலால், ஐரோப்பிய ஒன்றியம் இரண்டாகப் பிரிந்துள்ளது. 16 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இராஜதந்திரிகளைத் திருப்பி அனுப்புவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 12 உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத, ‘நேட்டோ’வில் உள்ள நாடுகளும் ரஷ்ய இராஜதந்திரிகளைத் திருப்பி அனுப்பியுள்ளன.

இந்நெருக்கடிக்குக் காரணமான செயலுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவு, இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. நடைபெற்ற நஞ்சூட்டல் தொடர்பில், முரணான தகவல்கள் வந்தவண்ணமுள்ளன.

ஆனால், மேற்குலகும் அதன் ஊடகங்களும் இதற்கு, முழுப்பொறுப்பும் ரஷ்யாவையே சாரும் என முடிவுரை எழுதியுள்ளன. இதன் பின்னணியில் சில தகவல்களை நோக்க வேண்டும்.

நஞ்சூட்டப்பட்ட சேர்ஜி ஸ்கிரிபால், ‘இரட்டை ஏஜென்டாக’ தொழிற்பட்டார். ரஷ்யாவின் உத்தியோகபூர்வ உளவாளியாகச் செயற்பட்ட வேளை, பிரித்தானியாவுக்கு உளவுத்துறை இரகசியங்களை வழங்கி வந்திருக்கிறார்.

இக்குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு, ரஷ்யாவால் விசாரிக்கப்பட்டு, சிறைத்தண்டனை பெற்றவர் ஸ்கிரிபால். பின்னர் இவர், கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டு, பிரித்தானியாவில் குடியேறினார்.

இவரைக் கொலை செய்ய வேண்டுமாயின், தேசத்துரோகக் குற்றச்சாட்டில் மரணதண்டனையை இவருக்கு வழங்கியிருக்க முடியும். அல்லது, சிறையிலிருந்து விடுவிக்காமல் இருந்திருக்க முடியும். இப்போது 66 வயதான ஸ்கிரிபால், இயல்பான குறியாக இருக்கவியலாது எனவும், இவரைக் கொல்வதற்கான எந்தவொரு தேவையும் ரஷ்யாவுக்கு இல்லை என, இவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதேவேளை, சேர்ஜி ஸ்கிரிபாலின் முன்னாள் காதலியொருவர், இந்நஞ்சூட்டல் தொடர்பிலும் அதன் பின்னணி தொடர்பிலும் பல விடயங்களை அறிந்துள்ளதாலும், ஆனால் அவை, இப்போது சொல்லப்படுகின்ற கதைகளிலிருந்து முற்றாக வேறானவையாகையால், அது குறித்துக் கருத்துரைக்க அவர் அச்சப்படுகிறார் என்றும் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘சண்டே ரெலிகிராப்’ பத்திரிகை தெரிவிக்கிறது.

இன்றுவரை, இச்சம்பவத்துடன் ரஷ்யா எவ்வாறு தொடர்புபட்டது என்பது நிறுவப்படவில்லை. மாதிரிகளை ஆய்வு செய்த போர்ட்டன் நகர உயிர் இரசாயன போரியல் நிலையம், தொடர்ச்சியாக வெவ்வேறான ஆய்வு முடிவுகளை வழங்கி வருகிறது.

முதலில், ‘பென்டானில்’ (fentanyl) என்ற வலிமையான செயற்கை வலிமருந்தின் தாக்கத்துக்கு ஆளானதாக இவ்வாய்வுகூடம் அறிவித்தது.

பின்னர், ‘சரீன்’ வகை நஞ்சு பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர்,VX போன்றதொரு நரம்புத் தாக்கத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டாகச் சொல்லப்பட்டது. (வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர், மலேசியா விமான நிலையத்தில் கொல்லப்படுவதற்காக, இவ்வேதிப்பொருளே பயன்படுத்தப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டமை, இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது).

சோவியத் யூனியன் காலத்தில், அங்கு உற்பத்தியாக்கப்பட்ட ‘நோவிசோக்’ (novichok) என்ற நரம்புவாயு, நஞ்சூட்டலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக, இப்போது பிரித்தானியப் பிரதமர், அறிவிக்கிறார். இதன்மூலம், இதை ரஷ்யாதான் செய்திருக்க வேண்டும் என்று நம்பவைக்க முனைகிறார்.

பல தசாப்தங்களாக நரம்பு வாயுகளை உருவாக்குவதில் தனித்திறன் பெற்றதாய் அறியப்பட்டதும், உலகின் தலைசிறந்த வேதியியல் ஆய்வுகூடங்களில் ஒன்றாக அறியப்பட்ட போர்ட்டன் நகர உயிர் இராசயன போரியல் நிலையத்தால் ஏன், இந்நஞ்சூட்டலுக்குக் காரணமாக வேதிப்பொருளைக் கண்டறிய முடியவில்லை. முடிவுகள் நாளுக்கு நாள் வேறுபடுவது ஏன்?

அதேவேளை, இம்மாதிரிகளை ஆய்வுக்குத் தருமாறு, பிரித்தானியாவிடம், ரஷ்யா விடுத்த கோரிக்கையானது மறுக்கப்பட்டுள்ளது. இதை, “பிரித்தானிய மண்ணில், ரஷ்யாவின் இரசாயன ஆயுதப்பாவனை” எனப் பிரித்தானியப் பிரதமர் தெரெசா மே விவரித்தார்.

இரசாயன ஆயுதப் பரிகரண சமவாயத்தின்படி, இத்தகைய சந்தர்ப்பங்களின் போது, மாதிரிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதை இன்றுவரை பிரித்தானியா மறுத்து வருகிறது.

இதேவேளை, பிரித்தானிய மக்கள் மீதே தனது இரசாயன ஆயுதங்களைச் சோதனை செய்த வரலாறு, போர்ட்டன் நகர உயிர் இரசாயன போரியல் நிலையத்துக்கு உண்டு. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் நோக்கலாம்.

இப்போதைய நிகழ்வுகள், 2001ஆம் ஆண்டு, இரட்டைக் கோபுரத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நிகழ்ந்த ‘அந்திரெக்ஸ்’ (Anthrax) தாக்குதல்களை நினைவுபடுத்துகின்றன.

இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் நடந்த, பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், “இத்தாக்குதலுக்கும் ஈராக்குக்கும் தொடர்பு உண்டு என்பதற்கான சான்றுகளைத் தயார்செய்யுங்கள்” என, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் கேட்டுக்கொண்டார்.

அதற்கான தயாரிப்புகள் நடைபெறுகையில், பின்லாடனைக் கொல்வதற்காக, ஆப்கானில் ஒரு யுத்தம் அரங்கேறியது.

அதைத் தொடர்ந்து, “ஈராக் இரசாயன ஆயுதங்களையும் பேரழிவு ஆயுதங்களையும் கொண்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதேவேளை, பயங்கரவாதிகளுக்கும் இரசாயன ஆயுதங்களை, ஈராக் வழங்குவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இறுதியில் இரசாயன ஆயுதங்களைத் தேடியழிக்கும் நோக்கத்தின் சாட்டில், ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இக்காலப்பகுதியில், தபால் பொதிகளில் வந்த ‘ஆந்திரெக்ஸ்’ இரசாயன பொருட்களின் விளைவால், ஐந்து பேர் மரணமடைந்தார்கள்; 17 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

இது அமெரிக்காவெங்கும் மிகப்பெரிய அதிர்வலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இது, ஈராக் போருக்கான மக்கள் ஒப்புதலை வாங்கிக் கொடுத்தது எனலாம்.

ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பானது, ஈராக்கிடம் எந்தப் பேரழிவு ஆயுதங்களும் இல்லை என்பதையும், 2001ஆம் ஆண்டுத் தாக்குதல்களுக்கும் ஈராக்குக்கும் எதுவித தொடர்புமில்லை என்பதும் தெளிவானது. எண்ணெய்காகவே இப்போர் நடந்தது என்பது வெட்டவெளிச்சமானது.

இதில், வசதியாக மறந்து போன விடயம் யாதெனில், பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ‘ஆந்திரெக்ஸ்’ மூலப்பொருள், உண்மையில் அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் உள்ள ‘ஃபோர்ட் டெட்ரிக்கில்’ அமைந்துள்ள ஆய்வுகூடத்தில், அமெரிக்காவின் பேரழிவுகரமான ஆயுதத் திட்டத்தில் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

ஸ்டீவன் ஹாட்ஃபில் என்ற ஓர் அமெரிக்க விஞ்ஞானிதான் இதற்குப் பொறுப்பானவராக இருந்தார் என்பதும் தெரிய வந்தது. ஆனால், 2008 இல் தற்கொலை செய்து கொண்ட ப்ரூஸ் எட்வர்ட்ஸ் ஐவன்ஸ் என்ற இன்னொரு விஞ்ஞானி மீது, பழியைப் போட்டு விட்டு, 2010ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டது.

ஆயினும், தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ‘அந்திரெக்ஸ்’, விஞ்ஞானி ஐவன்ஸிடமிருந்து தான் வந்திருந்தது என்று திட்டவட்டமாகக் கூறுமளவுக்கு போதுமான எந்த விஞ்ஞானபூர்வ ஆதாரமும் அமெரிக்க அரசாங்கத்திடம் இருக்கவில்லை. இதை, 2011 இல் அமெரிக்க விஞ்ஞான தேசிய அக்கடமி கண்டறிந்தது. உண்மையில், ஈராக் தாக்குதலுக்கான மக்கள் ஆதரவைத் திரட்டும் உத்தியாகவே ‘அந்திரெக்ஸ்’ பயன்படுத்தப்பட்டது.

இதேபோன்றதொரு நிலையே இப்போதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் இரசாயன ஆயுதத்தாக்குதல் பற்றிய அச்சமும் ரஷ்யாவை வில்லனாக உருவாக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான றெக்ஸ் டிலர்சன், “சால்ஸ்பெரி சம்பவத்துக்கு ரஷ்யா அநேகமாகப் பொறுப்பாகவிருக்கலாம்” என்று சந்தேகம் கலந்த ஒப்புதலை வழங்கிய சில மணி நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதியால், அவர் அப்பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்தில் பேசிய, அமெரிக்காவின் புதிய, நெருங்கிய நட்பு நாடாக மாறியுள்ள போலந்தின் வெளியுறவு அமைச்சர், “ரஷ்ய எரிவாயுவை, ஜேர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் கொண்டு செல்லும் குழாய்வழித் திட்டத்தை, ஜேர்மனி கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த ஜேர்மனி, “11 பில்லியன் டொலர் செலவிலான தனியார் திட்டத்தை, இரத்துச் செய்வது குறித்த பேச்சுக்கே இடமில்லை என்பதோடு, அத்திட்டம், எதிர்கால ஐரோப்பிய எரிபொருளின் அடிப்படை” என்றது.

இவை, ரஷ்யா தொடர்பில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கொண்டுள்ள வெவ்வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன.

ரஷ்யா மீதான இக்குற்றச்சாட்டுகள், இரண்டு நிகழ்வுகளின் அடிப்படையில் நோக்கப்பட வேண்டியவை.
முதலாவது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் 77சதவீதமான வாக்குகளைப் பெற்று, இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.

புட்டினின் வெற்றி, எதிர்பார்க்கப்பட்டதாயினும், இவ்வளவு அமோகமான வெற்றி, மேற்குலகுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. தேர்தல்களில் முறைகேடுகள் நடக்கவில்லை எனச் சர்வதேசத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புட்டின், ரஷ்யாவின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். 2000ஆம் ஆண்டில், அவர் முதன்முதலில் பதவிக்கு வந்தபோது இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது, இப்போது ரஷ்யர்களின் வாங்கும் திறன் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது.

‘பிரிக்ஸ்’ நாடுகளில், அதிக வாங்கும் திறன் உள்ள நாடு ரஷ்யா. இப்போது, ஐரோப்பாவின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ள ரஷ்யா, 2050ஆம் ஆண்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் என, உலகவங்கி எதிர்வுகூறுகிறது.

2000ஆம் ஆண்டு வெறும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மொத்த இருப்பு, இப்போது 356 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அதேவேளை, பணவீக்கம் 37 சதவீதத்தில் இருந்து, 2.5சதவீதமாகக் குறைந்துள்ளது. இவையனைத்தையும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில், புட்டின் சாத்தியமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க வேண்டிய இரண்டாவது நிகழ்வு, எதிர்வரும் ஜுன், ஜீலை மாதங்களில், உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளை ரஷ்யா நடாத்துகிறது. இதைத் தடுப்பதற்கும் ஊறுவிளைவிப்பதற்கும் நீண்டகாலமாக முயற்சிகள் நடந்து வந்துள்ளன.

இப்போதைய நெருக்கடி, பல நாடுகளின் பங்குபற்றுதலை கேள்விக்குறியாக்கியுள்ளன. இதன்மூலம், இப்போட்டிகளை வெற்றிகரமாக நடாத்த முடியாமல் போனால், சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் பெயருக்குப் பங்கம் விளைவிக்க முடியும் எனச் சிலர் நம்புகிறார்கள்.

இப்போது, உலகம் மிகுந்த ஆபத்தான காலத்தை நோக்கி நகருகிறது. ரஷ்யாவின் பதிலடியின் தீவிரம் உலகெங்கும் உணரக்கூடியதாக இருக்கும். ஆனால், மேற்குலகு போல், பொறுப்பற்ற நடவடிக்கைகளில் ரஷ்யா இறங்காது என்றும் நம்பலாம்.

இதேவேளை, மேற்குலகுக்கும் வெளியே ஓர் உலகுண்டு. அங்கெல்லாம் ரஷ்யா தனது செல்வாக்கை விரிவுபடுத்தியுள்ளது. மேற்குலகின் தனிமைப்படுத்தும் முயற்சிகள், அதன் முந்தைய முயற்சிகள் போல, எதிர்பார்த்த வெற்றியை அளிக்காது.

உலகம் மாறிவிட்டது என்பதை, மேற்குலகின் அதிகார வர்க்கம் ஏற்கத் தயங்குவதன் விளைவுகளை, மேற்குலகே அனுபவிக்க நேரும் என்பது குரூரமான உண்மை.