ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி

(ச. சந்திரசேகர்)

ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நேற்றைய தினம் (20) நாணயமாற்று வீதங்களின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றை மத்திய வங்கி வாங்கும் விலை ரூ. 162.94 எனவும், விற்பனை செய்யும் விலை ரூ. 171.00 எனவும் பதிவாகியிருந்தது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வியாபார பதற்றகரமான சூழல், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்நாட்டிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றமை காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தப் பெறுமதி வீழ்ச்சி காரணமாக, நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் பெருமளவில் காணப்படுகின்றன. விலைச்சூத்திரத்துக்கமைய எரிபொருள் விலை மாதாந்தம் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்து மதிப்பிழந்து செல்லுமாயின், எதிர்வரும் மாதங்களில் விலைச் சூத்திரத்திற்கமைய விலை மீளமைக்கப்படும் போது தொடர்ந்தும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எரிபொருட்கள் விலை உயர்வால் அவற்றை சார்ந்த சகல சேவைகள் மற்றும் உற்பத்திகள் போன்றவற்றின் விலைகளும் அதிகரிக்கும்.

மேலும், வாகன இறக்குமதி, எரிவாயு இறக்குமதி, மா, சீனி போன்ற இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. ரூபாய் மதிப்பிறக்கம் காரணமாக சந்தையில் தங்கத்தின் விலையும் அதிகரித்துக் காணப்படுவதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். நேற்றைய தினம் (20) 22 கெரட் தங்க நாணயத்தின் விலை 52,350 ரூபாயாக நிலவியது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிகளவு வரி அறவிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டிருந்த தீர்மானித்தை தொடர்ந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைய ஆரம்பித்திருந்தது. இலங்கையில் மாத்திரமின்றி இந்த தாக்கத்தை அண்மைய நாடான இந்தியாவிலும் அவதானிக்க முடிகின்றது. மேலும் இந்தத் தீர்மானம் உலகளாவிய ரீதியில் காணப்படும்நாணயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ரியால் ஒன்றின் பெறுமதி மற்றும் துருக்கியின் லிரா நாணயப் பெறுமதி போன்றனவும் பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளன.

ரூபாயின் பெறுமதியை சீராக பேணுவதற்கு, நாட்டினுள் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும், நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தியாவில் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம், இந்தியாவில் தமது வைப்புகளை அதிகரிக்குமாறு கோரிக்கையை வெளியிட்டிருந்தது.